
சனீஸ்வர பகவானின் வாகனம் காகம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காகம் எப்படி சனீஸ்வர மூர்த்திக்கு வாகனமாய் அமைந்தது என்பது நீங்கள் இதுவரை அறியாத தெய்வீக இரகசியமாகும்.
ஒரு தெய்வ மூர்த்திக்கு வாகனங்கள் எப்படி அமைகின்றன? மனிதர்கள் தங்களுக்கு வேண்டிய சைக்கிள், கார் போன்ற வாகனங்களை பணம் கொடுத்து தாங்களாக வாங்கிக் கொள்கின்றனர்.
ஆனால், தெய்வ மூர்த்திகளைப் பொறுத்த வரையில் அவர்களுடைய வாகனங்கள் தாங்கள் குறித்த தேவதா மூர்த்திகளுக்கு வாகனமாய் அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றன.
அதற்கு உரித்தான பல்வேறு யோக, தப, தீர்த்த யாத்திரைகளை நிறைவேற்றிய பின்தான் இறைவன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பும் தெய்வ மூர்த்திகளின் வாகனங்களாக நியமிக்கின்றான்.
இவ்வகையில் அமைந்தவைதான் மூஷிகம், மயில், காளை போன்ற வாகன மூர்த்திகள். இக்காரணம் பற்றியே வாகன மூர்த்திகளை வணங்கினால் அந்த வாகனங்களுக்கு உரித்தான தெய்வ மூர்த்திகளை வணங்கிய பலன்களை வணங்கும் அடியார்களுக்கு இறைவன் தந்தருள்கின்றான். நந்தி என்பது வாகனம் என்பதற்கான இறை வார்த்தை.
காளை மட்டும் அல்லாது எம்பெருமான் சிவனுக்கு அமைந்த வாகனங்கள் கோடி கோடி.. அவை அனைத்துமே இறைவனை வேண்டி அடியார்கள் பெற்ற வரங்களே வாகனங்களாக உருபெற்றன.
ஒரு முறை தென்காசி புனித பூமியில் வாழ்ந்து வந்த காகத்திற்கு தான் சனீஸ்வர பகவானின் வாகனமாக ஆக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. சனீஸ்வர பகவானின் பொறுமையைக் கேள்வியுற்று அவர் மேல் அலாதி அன்பும் பக்தியும் காகத்திற்கு ஏற்பட்டதே அதற்குக் காரணம். தெய்வீக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது நிதானம்தானே. தானத்தில் சிறந்தது நிதானம் என்பதை அது உணர்ந்திருந்தது.
எப்படியாவது சனீஸ்வர பகவானின் வாகனமாக வேண்டும் என்ற விருப்பத்தால் அது பல திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று அங்கு வரும் மகான்கள், யோகிகளைச் சந்தித்து தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியது. அவர்களும் தக்க தருணத்தில் காகத்தின் விருப்பம் நிறைவேறும் என்று உறுதியளித்தனர். நம்பிக்கை தளராது காகமும் தன்னுடைய திருத்தல யாத்திரைகளை தொடர்ந்து நிறைவேற்றி வந்தது.
ஒருமுறை தென்காசி திருத்தலத்திற்கு ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி தன்னுடைய பத்தினி நற்பவி தேவியுடன் எழுந்தருளி இருப்பதைக் கேள்வியுற்று அவர்களைத் தரிசனம் செய்து தன்னுடைய விருப்பத்தைக் கூறியது. நற்பவி தேவி காகத்திற்கு குங்குமத் திலகமிட்டு விரைவில் காகத்தின் விருப்பம் நிறைவேறும் என்று அருளினாள். காகம் மிகவும் சந்தோஷம் அடைந்தது. தினமும் நற்பவி, நற்பவி என்று மனதினுள் ஜபித்துக் கொண்டிருந்தது.

கலியுகத்திற்கு உகந்தது தேவி உபாசனை. காகம் அனுதினமும் நற்பவி மந்திரத்தை ஓதி சக்தி உபாசனையில் உன்னத நிலையை அடைந்ததால் காகத்தின் தவம் விரைவில் கனிந்தது. ஒரு நாள் வழக்கம்போல் தென்காசி அருகில் உள்ள ஐந்தருவியில் நீராடிய பின் இலஞ்சி முருகப் பெருமானை தரிசிக்க வேண்டி சென்றபோது நண்பகல் வந்து விட்டதால் கோயில் நடை சார்த்தப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் நடை திறக்கும்வரை திருக்கோயில் வாசலிலேயே அமர்ந்து நற்பவி நாம ஜபத்தில் திளைக்க ஆரம்பித்தது.
அப்போது தன்னையும் அறியாமல் காகம் உறங்கி விட்டது. அப்போது அதற்கு ஓர் அருமையான கனவு வந்தது. அந்தக் கனவில் நற்பவி தேவி ஓர் அன்ன வாகனத்தில் பவனி வந்து காகத்தைப் பார்த்து, “சரணாகத இரட்சகரைச் சரணடைவாய், உன்னுடைய விருப்பம் நிறைவேறும்,” என்று கூறினாள். கனவு களைந்து காக்கை எழுந்தது. அதே சமயம் முருகப் பெருமானுக்கு தீபஆராதனை நிறைவேறியது. அதை சுப சகுனமாக ஏற்றுக் கொண்ட காகத்தின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
தன்னுடைய நீண்ட நாள் விருப்பம் நற்பவி தேவியின் அருளால் நிறைவேறும் என்று உணர்ந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. முருகப் பெருமானை தீப ஆராதனை ஊடே தரிசனம் செய்து அவருக்குத் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது. உடனே கால தாமதம் செய்யாமல் சரணாகத இரட்சகர் தரிசனம் வேண்டி விரைவாகப் பறந்து சென்றது.

பொதுவாக, பகலில் உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த விதிக்கு விலக்காக அமைந்த சில திருத்தலங்களில் இலஞ்சி முருகன் திருத்தலமும் ஒன்று. இங்கு வரும் பகல் கனவுகள் பலிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
தில்லையாடி திருத்தலம் :
திருக்கடவூர் அருகே உள்ள தில்லையாடி திருத்தலத்தில் அருள்பாலிப்பவரே ஸ்ரீசரணாகத இரட்சகர் ஆவார். காகம் தென்காசியிலிருந்து பறந்து சென்று தில்லையாடியை அடைந்தது.
திருக்கோயிலுக்குள் சென்று கணபதி மூர்த்தியைத் தரிசித்த பின்னர் அம்பாள் ஸ்ரீசாந்த நாயகியின் தரிசனத்திற்காக பிரகார வலம் வரத் தொடங்கியது. (அம்பாளின் தற்போதைய திருநாமம் ஸ்ரீபெரியநாயகி என்பதாகும்).
பிரகார வலம் பூரணம் பெறும் நிலையில் தீப ஆராதனைக்கான மேள தாளங்கள் கேட்க ஆரம்பித்தது. ஆனால், எவ்வளவுதான் வேகமாக வந்தாலும் பிரகார வலம் பூர்த்தி அடைவதாகத் தெரியவில்லை. சில நிமிடங்களில் நிறைவேறக் கூடிய வலம் நீண்டு கொண்டே செல்வதாகத் தோன்றியது.
காகத்திற்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாம் அன்னையின் திருவுள்ளம் போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டு பிரகார வலத்தை தொடர்ந்தது. பல மணி நேரம் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்ததால் காகத்திற்கு மிகுந்த தாகமும், பசியும் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து களைப்பும் ஏற்படவே காகம் மிகவும் தளர்ந்து போய் விட்டது. இருப்பினும் முயற்சியைக் கைவிடாமல் பிரகார வலத்தை முடித்து விட்டு அம்பாள் தரிசனத்திற்குப் பின் உணவேற்கலாம் என்ற வைராக்யத்துடன் வலத்தைத் தொடர்ந்தது.
அப்போது பிரகாரத்தில் இருந்த ஒரு மண் கலயத்தில் ஏதோ புரளுவது போல் தோன்றியது. அந்தக் கலயத்தில் இருந்த நீரில் ஒரு அணில் பிள்ளைக் குட்டி விழுந்து மூழ்கி உயிருக்காகத் தத்தளித்துக் கொண்டிருந்தது. மனிதர்களைப் பொறுத்த வரையில் அது அணில் பிள்ளையாக இருந்தாலும், காகத்தைப் பொறுத்த வரையில் அது மிகவும் சுவையான உணவுதானே? பசியாலும் தாகத்தாலும் மயங்கிய நிலையில் இருந்த காகம் அந்த அணில் பிள்ளையை விழுங்கி விடலாம் என்று தோன்றியது.
இருந்தாலும் இறை அடியார்கள் என்றும் நிதானத்தை இழக்கக் கூடாது, அதிலும் நிதானத்திற்கே பெயர் பெற்ற சனீஸ்வர பகவானின் வாகனமாக அமைய விரும்பும் நான் நிதானத்தை இழக்கலாமா என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டது காகம்.
மனம் தெளிவு அடைந்த மறுகணம் அந்த அணில் குட்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியது. மெதுவாகத் தன்னுடைய அலகால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்து அணில் பிள்ளையைக் கவ்வித் தரையில் போட்டது.
ஆனால், வெகுநேரம் நீரில் மூழ்கி இருந்ததால் அணில் குளிரால் நடுங்க ஆரம்பித்தது. அந்த நிலை நீடித்தால் ஓரிரு விநாடிகளில் அதன் உயிர் பிரிந்து விடும் போல் தோன்றியது. காகம் சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய உடலிலிருந்து சிறகுகளைப் பிய்த்து அணில் குட்டி மேல் போட்டு அதைத் தன் சிறகுகளால் போர்த்தி விட ஆரம்பித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அணில் குட்டியின் குளிர் குறைய ஆரம்பித்தது. அதற்குள் காகத்தின் அனைத்து இறகுகளும் குறைந்து அதன் உடலிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ஆனால், அதைச் சிறிதும் சட்டை செய்யாமல் அணில் குட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் சுறுசுறுப்பாக செயல்பட்டது.
அருகிலிருந்த ஒரு பழைய தேங்காய் ஓட்டை எடுத்துக் கொண்டு எங்கோ பறந்து சென்று அணில் குட்டிக்காக பால் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால், உடலில் சிறகுகள் இல்லாததால் அதனால் பறக்க முடியவில்லை.
அவ்வப்போது கீழே விழுந்து தத்தி தத்தி வந்து எப்படியோ பாலைக் கொண்டு வந்து அணில் குட்டிக்கு ஊட்டியவுடன் அணில் குட்டிக்கு முழுமையாக உயிர் மீண்டது. ஆனால், காகம் தன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்து மயங்கி விழுந்தது.
அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது :
அணில் குட்டி மறைந்தது. அது பளீரென்ற வெள்ளை நிறத்தையுடைய ஒரு காளையாக உருவெடுத்தது. அதன் மேல் ஸ்ரீசாந்தநாயகி உடனுறை சரணாகத இரட்சகர் எழுந்தருளினார். காகம் தன்னிலை அடைந்தது. எதிரே கண்ட காட்சி கனவா நனவா என்று தெரியாமல் இன்பத்தால் திக்கு முக்காடியது. ரிஷப தேவர் காகத்திற்கு அருளாசி வழங்கினார்.
அம்பாள் காக தேவதையே, “நீ பன்னெடுங் காலம் விரும்பிய சனீஸ்வர மூர்த்தியின் நந்தியாகும் வாகனப் பதவியைக் கூட கருதாது ஒரு அணில் குட்டியின் உயிர் மீட்க உன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தாய். அதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டுள்ளோம். உன்னுடைய தியாகப் பணிவிடை ஒரு ஜீவனைக் காப்பாற்றி விட்டது,” என்று திருவாய் மலர்ந்து அருளினாள்.
காகம் மிகவும் பணிவுடன், “அன்னையே, தாங்கள் அறியாததா? அடியேன் ஒரு உயிரைக் காப்பாற்றினேன் என்பதை நிச்சயமாக ஒப்புக் கொள்ள முடியாது. இத்தல ஈசன் சரணாகத ரட்சகன் என்ற நாமம் பூண்டிருக்கும்போது அங்கு ஈசனை நம்பிய ஒரு ஜீவன் தன்னுடைய உயிரை இழக்குமா? இத்தல ஈசனின் பெருமையை உணர்த்த அப்பெருமான் அடியேனையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியதற்கு எங்கள் மூதாதையர்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்,” என்று மிகவும் பணிவுடன் கூறியது.
இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் இறை அடியார்களுக்கு இவ்வாறு ஒவ்வொரு நொடியும் சோதனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். குருமேல் கொண்டுள்ள தளராத நம்பிக்கையே ஒருவரை எதிர்வரும் சோதனைகளை வெல்லத் தேவையான சக்திகளை அளிக்கும். இறைவனைச் சந்திக்கும் அந்த நேரத்தில் கூட காகத்திற்கு எப்படிப்பட்ட சோதனைகள் ஏற்படுகிறது பார்த்தீர்களா?.
‘நாம்தான் அணில் குட்டியைக் காப்பாற்றினோம்’, என்ற எண்ணம் சிறிதளவு காகத்திற்குத் தோன்றியிருந்தால் கூட அதற்கு இறைவனின் அருளாசி கிடைத்திருக்காது.
சிவபெருமான் காகத்தின் பணிவை வெகுவாகப் பாராட்டினார். பணிந்தவன்தானே பக்தன். காகத்தை அன்புடன் தன் திருக்கரங்களால் தடவிக் கொடுத்து,
எம்பெருமானே சனீஸ்வர மூர்த்தியை அழைத்தார். இதை விட ஒரு சிறந்த பதவி யாருக்குக் கிடைக்கும்? சனீஸ்வர மூர்த்தியின் வாகனம் காகம் என்று எம்பெருமானே இந்த துதி மூலம் அறிவித்தார். சனீஸ்வர மூர்த்திக்கு எம்பெருமானே வாகனம் அளித்தது குறித்து பேருவகை எய்தினார். அனைவரும் சிவ சக்தி மூர்த்திகளைத் தொழுது வணங்கினர்.
இவ்வாறு சனீஸ்வர பகவான் காகத்தை வாகனமாகப் பெற்ற திருத்தலமே தில்லையாடித் திருத்தலமாகும். இங்கு சனீஸ்வர மூர்த்தி தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி உள்ளார்.
இத்தல சனீஸ்வர மூர்த்தியை வணங்கி செந்தாமரை மலர்களால்
அர்ச்சித்து வழிபட்டால் நெடுங்காலமாக கிடைக்காத பதவி உயர்வுகள் தானாகத் தேடி வரும்.
பசு நெய்யில் வறுத்த அக்ரூட் பருப்பு கலந்த பசும்பாலை சனீஸ்வர மூர்த்திக்கு நைவேத்யமாகப் படைத்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்து வந்தால் படிப்பில் மந்தமாக உள்ள
குழந்தைகள் கல்வி அறிவு விருத்தியாகும்.
இரண்டு, மூன்று வயதாகியும் தெளிவாகப் பேச்சு வராத குழந்தைகள் உண்டு. புதன் கிழமைகளில் இக்குழந்தைகளின் பெற்றோர்கள் அடிப் பிரதட்சிணம் வந்து சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டால் குழந்தைகள் பேச்சில் தெளிவு பிறக்கும்.
வயதானவர்கள் அவசியம் வழிபட வேண்டிய மூர்த்தி இவரே. இறுதிக் காலத்தில் குழந்தைகள் தங்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடாத நிலையை அடைய விரும்புவோர்கள் இம்மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்வதால் அவர்கள் அந்திம வாழ்வு நலமாய் அமைய இவர் வழிகாட்டுவார்.