
“உலகில் என்னை யாருமே தூஷிக்கக் கூடாது; எல்லோரும் என்னைப் புகழ வேண்டும்” என்னும் எண்ணம்தான் “லோக வாஸனை” எனப்படும். இந்த லோக வாஸனை ஒருவனுடைய ஆன்மீக வாழ்க்கைக்குத் தடையாகத்தானிருக்கும்.
ஏனென்றால், ஒருவனது இத்தகைய விருப்பம் உண்மையில் நிறைவேறப் போவதில்லை.
உலகில் நம்மை யாரும் நிந்திக்கக் கூடாது என்ற இச்சை ஒருபோதும் நடைமுறையில் பலன் தராது. ஆகவேதான், அப்பேற்பட்ட இச்சை எவனுக்கு உண்டோ அவனுக்கு லோக வாஸனை இருப்பதனால் அத்யாத்ம சாஸ்திர விஷயத்தில் பிரவ்ருத்தி ஏற்படாது.
பகவான் பக்தனுடைய இலட்சணத்தைப் பற்றிச் சொல்லும் போது.
துல்யநிந்தாஸ்துதி:
என்று கூறினார்.
“யார் உன்னை நிந்தித்தாலும் யார் உன்னைப் புகழ்ந்தாலும் இரண்டிற்கும் நீ விலையே கொடுக்கக் கூடாது. நீ எந்த அத்யாத்ம வாழ்க்கையில் போய்க் கொண்டிருக்கிறாயோ, உன்னுடைய குரு உனக்கு எந்த வழியை உபதேசம் செய்திருக்கிறாரோ அவ்வழியில் செல்ல வேண்டுமே தவிர, இதற்கிடையில் யாருடைய புகழ்ச்சியும் இகழ்ச்சியும் உனக்குத் தேவையில்லை.
லோக வாஸனை உனக்கு ஏற்பட்டால் அத்யாத்ம பிரவ்ருத்தியெல்லாம் பின்னுக்குச் சென்று விடும்” என்னும் பொருள்பட பகவான் கூறினார். ஆகவே லோக வாஸனை என்பது இருக்கவே கூடாது.