ருத்ராராதன-தத்பர:
(ஸ்ரீ ருத்ரனை ஆராதிப்பதில் ஈடுபாடுடையவர்)
பகவான் பரமேச்வரனின் பற்பல வடிவங்களில் ஒன்றே ‘ருத்ரன்’ எனும் பெயரில் போற்றப்படுகின்ற இறைவடிவாகும். ஸ்ரீருத்ர மந்திரங்களுடன் கூடியதான அபிஷேக ஆராதனைகள், ஹோமங்கள் மற்றும் யாகங்களைச் செய்வது உலகத்திற்குப் பெரும் நன்மைகளைத் தந்திடும் என்றே வேதம் உரைக்கின்றது.
வேத வாக்கியங்களின் ஸத்தியத் தன்மையைப் பற்றிப் பூரணமாக அறிந்தவரான ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், அனைவரது நன்மைக்கெனவே பகவானாம் ஸ்ரீருத்ரனின் ஆராதனையில் தினமும் ஈடுபட்டு வந்தார்.
மேலும், பகவான் ஸ்ரீருத்ரனை ஆராதிப்பதன் மகத்துவத்தைப் பற்பலத் தருணங்களிலே ஜனங்களுக்கு உணர்த்திடவும் செய்தார். இதற்கு எடுத்துக்காட்டுக்-களாகப் பின்வரும் சம்பவங்களைக் காணலாம்.
மைசூர் பிராந்தியத்தில், சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த லிங்கசனக்கி அணைக்கு நதிநீர்வரத்து இல்லாததால், அதை நம்பியிருந்த பற்பலக் கிராம ஜனங்கள் குடிநீர் இன்றிப் பரிதவிக்க நேர்ந்தது.
இது விஷயத்தினில் விரைவில் நல்வழி பிறக்க பக்த ஜனங்கள் ஜகத்குருவின் ஆசீர்வாதத்தினை வேண்டிக்கொண்டனர். ஆசார்யாளும், “சாராவதி நதியின் உற்பத்தி ஸ்தானமாகிய அம்பு தீர்த்தத்தில் பகவான் ஸ்ரீருத்ரனுக்கு அபிஷேக ஆராதனைகளை நடத்தினால், மழை பெய்யும்; நதியிலும் நீர் பெருகிடும்; அணைக்கும் போதிய நீர்வரத்து ஏற்படும்” எனக் கூறியருளினார்.
அதன்படியே, குறிப்பிட்டதொரு தினத்தில் காலை துவங்கப்பெற்ற ஆராதனையானது அதன் இறுதிக் கட்டத்தை அடையும் சமயத்திலேயே பெய்யத் துவங்கிவிட்ட மழையானது பல நாட்களுக்குத் தொடர்ந்துப் பெய்து அணையை முழுதும் நிரப்பிவிட்டது! ஜனங்களின் துக்கமும் தீர்ந்தது!
மற்றொரு சமயம், ஆசார்யாளைத் தரிசிக்க வந்த பக்தரொருவர் தனது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை திடீரென மோசமாகி விட்டதையும், மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள் என்பதையும் பற்றிக் குறிப்பிட்டு, மரணப்படுக்கையில் இருக்கும் அவரைக் காப்பாற்றிட ஆசார்யாள்தான் அருள வேண்டும் என்று உருக்கமாக வேண்டிக்கொண்டிட,
ஆசார்யாளும் அவரிடம், “மஹாருத்ர ஹோமத்தைச் செய்து ஸ்ரீருத்ரனை வழிபடுவதாக நீங்கள் இப்போதே மனதில் ஸங்கல்பித்துக் கொள்ளுங்கள்; பகவான் அருள் புரிவான். நீங்கள் ஊருக்குத் திரும்பியதும், ஸங்கல்பித்த வண்ணம் ஹோமத்தைச் செய்துமுடித்து விடுங்கள்” என்று கூறியருளினார்.
அந்தப் பக்தரும், அக்கணமே ஸத்குருநாதரின் முன்னிலையிலேயே அவ்விதம் ஸங்கல்பித்துக் கொண்டார். அவ்வுறவினரின் உடல்நிலையில் அன்றைய தினமே முன்னேற்றம் தெரியத் துவங்கிவிட்டது!