spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்எதிரிகள் விலக, துன்பங்கள் அகல, கடன் தொல்லை, கணவன் மனைவி பிரச்சினை தீர.. வழிபடுங்கள்..‌!

எதிரிகள் விலக, துன்பங்கள் அகல, கடன் தொல்லை, கணவன் மனைவி பிரச்சினை தீர.. வழிபடுங்கள்..‌!

- Advertisement -
Narasimha

வைகாசிமாதம் வளர்பிறை சதுர்த்தசி அன்று, சூரியன் மறையும் வேளை (பகலுமின்றி, இரவுமின்றி, மாலை அந்திப் பொழுதில் ஸ்ரீநரசிம்மர் அவதரித்தார். இதுவே ஸ்ரீநரசிம்ம ஜயந்தி ஆகும்.

நரசிம்மரை வழிபட்டால் சிவன்,
பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும்.
நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு, பிரிவினை மற்றும் ஓயாத சண்டை சச்சரவுகள் இருந்தால், வாரந்தோறும் நரசிம்மரை வழிபட்டால், தம்பதிகள் இடையே அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி விடும்.

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் நேராது.

நரசிம்மருக்கு செவ்வரளி பூக்கள், மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தது ஆகும்.

நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு
8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிட்டும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவர்.

தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர், மிகுந்த மன வியாதி, மன தடுமாற்றம் உள்ளவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், பெரும் கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள், ஸ்ரீநரசிம்மரை தினமும் வணங்கி வந்தால்
வாழ்க்கையில், துன்பம் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் நிச்சயம் ஆஞ்சநேயர் இருப்பார்.

நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.

திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.

திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ‘‘இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்’’ என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரி கட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

“எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை
7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.

பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம்,
18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

நரசிம்மரை வழிபடும் போது ‘‘ஸ்ரீநரசிம்ஹாய நம’’ என்று சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

‘‘அடித்த கை பிடித்த பெருமாள்’’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன், என்று இதற்கு பொருள்.

நரசிம்மரை தினமும் மனம் உருகி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.

காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார்.

திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார்.

சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ளது, நரசிம்மப் பெருமாள் ஆலயம். இரண்யனை அழித்த கோபத்துடன் இருந்த நரசிம்மரை ஈசன் சரபேஸ்வர வடிவம் கொண்டு தணித்ததால் சிங்க முகம் நீங்கி, இயல்பாக தரிசனம் தருகிறார், பெருமாள்.

பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில்,
திருவக்கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

தாம்பரம்-செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

சென்னை, திருவல்லிக் கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோக நரசிம்மருக்கே. அவர் எப் போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக் கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்குகள் இல்லை.

நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளான் என்பதை உணர்த்துகிறது.

நரசிம்மருக்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிக பக்தர்களால் விரும்பப்படுகிறது.

வைணவத்தில் அதிகம் வழிபடக் கூடிய தெய்வம் நரசிம்மர்தான்.

வட இந்தியாவை விட தென் இந்தியாவில்தான் அதிக நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.

நரசிம்ம அவதாரம் நிகழ்ந் தது ஆந்திரா என்றாலும் நரசிம்மர் சாந்தமானது தமிழகத்தில்தான்.

தமிழ்நாட்டில் உக்கிர நரசிம்மரை மூலவராக கொண்ட ஒரே இடம் புதுச்சேரி அருகே உள்ள சிங்கிரி என்ற ஊரில் உள்ள ஆலயமாகும்.

சோளிங்கரில் உள்ள நரசிம்மர் கார்த்திகை மாதம் கண் திறந்து பார்த்து அருள் வழங்குவதாக ஐதீகம்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களகிரியில் பானக நரசிம்மர் உள்ளார். இவர் பானகம் அருந்துவதை கண்கூடாக பார்க்கலாம்.

நரசிம்மர் மூர்த்தங்களில் மொத்தம் 32 வகையான அமைப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை அருகே கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்து அடிக்கடி சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe