
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் திரு ஆடிப்பூரம் தேரோட்டம் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் மட்டும் பிரபலமானது அல்ல.இங்கு ஆண்டாள் மார்கழி எண்ணைகாப்பு நீராட்டல் மிக பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. மாதத்தின் 30 நாள்களுக்கும் ஆண்டாள் அருளிய 30 பாசுரங்களையும் பக்தர்கள் பாடி வழிபடுவர். ஆண்டாள் அவதரித்த தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் மார்கழி திருப்பாவை பாடல் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆண்டாளுக்கு எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெறத் தொடங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த வைபவத்தின் ஒவ்வொரு நாளும் காலையில் கள்ளழகர் திருக்கோலம், கண்ணன் அவதாரகோலம், பெரியபெருமாள் அலங்காரம், மகாராணி திருக்கோலம், முத்தங்கி சேவை, தங்கக் கவசம் அணிந்து அலங்காரத் திருக்கோலம் என நாளும் ஓர் அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளுவார். பின்னர், அன்றைய தினத்தின் பாவைப் பாசுரம் பாடப்படும். 8 நாள்களும் திருமுக்குளத்துக் கரையில் அமைந்துள்ள நீராட்டு மண்டபத்தில் தினசரி மாலை எண்ணெய்க் காப்பு சாற்றும் உற்சவம் நடைபெறும்.
300-க்கும் மேற்பட்ட மூலிகைகளுடன் இளநீர், தாழம்பூ, பசும்பால், நெல்லிக்காய், நல்லெண்ணெய் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட தைலத்தை ஸ்ரீஆண்டாளுக்குச் சாத்துவர். சவுரியோடு நெற்றிச்சுட்டி, ஜடை என சகல அலங்காரத்தோடு வீற்றிருக்கும் ஆண்டாளைத் தரிசிக்க பக்தர்கள் திரண்டு வருவர்.

எண்ணெய்க் காப்பு முடிந்து ஆண்டாள் பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர், திருமஞ்சனமாகி நீராட்டு நடைபெறும். பொன்குடத்தால் ஆண்டாள் நீராட்டு நடக்கும். நிறைவு திருநாளன்று பெரியாழ்வார் சந்நிதியில் ஆண்டாள் எழுந்தருளுவார். அங்கே ‘கணு’ உற்சவம் நடைபெறும்.
மார்கழி மாதம் 30 நாள்களும் நடைபெற்று வந்த இந்த வைபவத்தை மாத நிறைவின் 7 நாள் வைபவமாக ஸ்ரீராமாநுஜர் மாற்றி அமைத்தார். பிறகு, தோன்றிய மணவாள மாமுனிகள் இந்தத் திருத்தலத்தின் வைபவம் குறித்து அறிந்து தரிசிக்க வருகை புரிந்தார். ஆனால், அவர் வருவதற்குள் மார்கழி முடிந்துவிட்டது. எனவே, வருந்தி ஆண்டாளிடம் முறையிட்டார். ஆண்டாள் திருக்கோயில் ஆசார்யர்களின் கனவில் தோன்றி மாமுனிக்காக தை முதல்நாளன்றும் நீராட்டு உற்சவம் தொடர வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதன்படி எட்டாம் நாளும் உற்சவம் நடைபெற்று வருகிறது.

மார்கழி நீராடுதல் மட்டுமன்றி மாதவனை மனம்கொண்ட அந்த மங்கைகுலத் தோன்றலின் நீராட்டைக் காணுதலும் ஆகச்சிறந்த பெரும் பாக்கியம். இந்த வைபவத்தில் ஆண்டாளைத் தரிசித்தால் திருமணம் வேண்டுவோருக்கும், மக்கள் செல்வம் இறைஞ்சுவோருக்கும் அந்த வேண்டுதல்கள் கைகூடும் என்பது ஐதிகமாக உள்ளது.





