நெல்லை மாவட்டம் , தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அபிஷேகம், தீபாராதனையும் , இரவு சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெற்று வந்தது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் திருநாளை முன்னிட்டு இன்று காலை 9.20 மணிக்கு மாசித் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
சுவாமி தேர் முக்கிய ரத வீதிகள் வழியாக சுற்றி நிலைக்கு வந்ததும் அம்மன் தேர் இழுக்கப்பட்டது. தேரோட்டத்தின் போது வெயில் அதிகமாக காணப்பட்டபோதும் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு இருந்தனர்.
படங்கள்: வீரமணி



