யானேநீயென் னுடைமையும்நீயே
யானேயென்னை அறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே.
– திருவாய்மொழி – நம்மாழ்வார்.
பொருள்: வானவர்கள் ஏத்திப் போற்றி செய்யும் நித்திய சூரிகளின் தலைவராக விளங்குபவரே! நான் யார்? என் உள்ளம் யார்? என்பது எனக்கே இன்னும் தெரியவில்லை. அறியாமை இருளில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சு. துன்ப இருளும் துயர இருட்டும் என்னை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்றன. அதிலிருந்து நான் விடுபட வேண்டுமானால் உன் பார்வை என்மீது பட வேண்டும். உன்னையும் என்னையும் என்னால் தனித்துப் பார்க்க முடியவில்லை.
யானே நீ; என் உடைமையும் நீயே! என்ற அழகான அர்த்தமுள்ள வார்த்தைகளின் மூலம் நம்மாழ்வார் எத்துணை பற்றை பரம்பொருள் மீது வைத்திருந்தார் என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க முடிகிறது.
வானுலகத் தேவர்கள் போற்றுகிற எங்கள் தலைவனே, எம்பெருமானே, என்னை நானே அறியாமலிருந்தேன், நான், என்னுடையவை என்று வாழ்ந்து வந்தேன், உண்மையில் நான் என்பதும் நீயே, என்னுடைய உடைமைகள் அனைத்தும் உன்னுடையவைதான். அதனை இப்போது நான் உணர்ந்தேன்.
நம்மாழ்வார் காட்டிய வழியில் பயணம் செய்தால் வாழ்வு இனிக்கும்.