
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
திருப்பாவையின் முதல் பாசுரமான இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு, யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வெளியிடுகிறார் ஆண்டாள்.
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில், இறைவனுக்கு கைங்கரியம் செய்யக்கூடிய பெருஞ் செல்வத்தைப் பெற்ற இளம் பருவத்தை உடைய பெண்களே! அழகான ஆபரணங்களை அணிந்தவர்களே! மாதங்களில் சிறந்த இந்த மார்கழி மாதத்தில் முழு நிலவு திகழும் நல்ல நாளாக இன்று நமக்கு வாய்த்திருக்கின்றது.
கூர்மையான வேல் ஆயுதம் கொண்டு, கண்ணனாகிய குழந்தைக்கு தீங்கு செய்வதற்காக வரும் அரக்கர் மீது சீறி அவர்களை அழிக்கும் கொடுந் தொழிலைப் புரிபவனான நந்தனகோபனுக்கு பிள்ளையாகப் பிறந்தவனும், அழகு நிறைந்த கண்களை உடைய யசோதைப் பிராட்டிக்கு சிங்கக் குட்டியைப் போன்று திகழ்பவனும், கருமையான மேகக் கூட்டம் போலே திரண்ட மேனி அழகு பெற்றவனும், செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும் சூரிய சந்திரர்களைப் போன்ற திருமுகத்தையும் உடையவனான அவனே ஸ்ரீமந் நாராயணன்.
அந்த நாராயணனே நமக்கு கைங்கரியம் என்னும் பறையைக் கொடுக்கும் நிலையில் நின்றான். அவனாலே நாம் பேறு பெற்றோம் என்ற சிறப்பைக் கொடுக்கும்படியாக நிற்கின்றான். எனவே இந்த உலகத்தினர் கொண்டாடும்படியாக இந்த நோன்பிலே ஊன்றி, நீராட விருப்பம் கொண்டவர்களாகத் திகழும் பெண்களே! வாருங்கள். வாருங்கள்… என்று ஆண்டாள் தோழியரைத் துயிலெழுப்பி நோன்பு நோற்க அழைக்கிறாள்.
இதன் மூலம், ஸ்ரீமந்நாராயணனே கண்ணனாக அவதரித்தான், அவனே நாம் வேண்டும் பேற்றினை அளிக்க வல்லான் என்று கூறி உலகத்தார் மெச்ச உடன் வருமாறு நோன்பு நோற்க தோழியரை அழைக்கிறார் ஆண்டாள்.
- விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்