
ராஜ தர்மத்தில் சத்தியம் மிகவும் முக்கியமானது என்பது நம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ள அம்சம். ராஜ தர்மம் என்றால் அரசாட்சி தர்மம் என்று பொருள் கொள்ள வேண்டும். அனைத்து நாகரீக நாடுகளிலும் அரசாங்க அமைப்பு என்று ஒன்று இருக்கும். அரசாளுபவர்கள் இருப்பார்கள். அவ்விதம் அரசாளுபவர்களுள் நாடு முழுவதும் ஆளுபவர்கள், மாநிலங்களை ஆளுபவர்கள் – போன்றவர்களுக்கு மட்டுமல்லாமல், நிறுவனங்களை நடத்தும் நிர்வாகிகளுக்கும் கூட அரச தர்மம் உள்ளது.
ராஜ தர்மம் என்பது சத்தியத்தின் மேல் ஆதாரப்பட்டுள்ளது. சத்தியம் அனைவருக்கும் பொதுவானது.
“சத்யமேவ அனுசம்சஞ்ச ராஜ வ்ருத்தம் சனாதனம்
தஸ்மாத் சத்யாத்மகம் ராஜ்யம் சத்யே லோகப் ப்ரதிஷ்டித:I”
– இது ராமர் கூறிய வாக்கியம். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி போதிக்கும் ரிஷி வாக்கியம். ராஜதர்மம் என்பது சத்தியம், அனுசம்சம் என்ற இரண்டோடும் சேர்ந்திருக்க வேண்டும்.
அதாவது தலைவன் அல்லது அரசாளுபவன் நியமத்திற்கு கட்டுப்பட்டு அரசாள வேண்டும். அவனுடைய பிரதானமான கடமை நியமத்தைக் கடைபிடிப்பதே. அதிலும் கொடுத்த வாக்குறுதிக்கு கட்டுப்பட்டிருத்தல் என்னும் நியமத்தை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் ராமனிடம் வந்து அயோத்திக்குத் திரும்ப வரும்படி அழைத்தாலும், “தந்தை அளித்த வாக்கைக் காப்பற்றுவதற்காக நான் வனவாசம் செய்கிறேன்” என்று கூறியவன் ராமன்.
“சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டே அரசாட்சிப் பணி நடக்க வேண்டும். அது சனாதனம்!” என்று கூறுகிறான்.
“அது அந்தக் காலம். அதுவும் ஸ்ரீ ராமனால் அதெல்லாம் செய்ய இயலும். அதெல்லாம் இந்தக் காலத்துக்கு சரிப்பட்டு வராது” என்று சொல்லி நாம் தப்பித்துக் கொள்வதற்கு வழியில்லை. ஏனென்றால் இங்கு சனாதனம் என்ற சொல்லை வால்மீகி பயன்படுத்துகிறார். ‘சனாதனம்’ என்றால் ‘சாஸ்வதம்’ என்று பொருள். சூரியன் கிழக்கே உதிக்கிறான் என்பது எல்லா யுகங்களிலும் மாறாததைப் போலவே அரச தர்மம் சத்தியத்தோடு கூடியது என்ற தர்மமும் எல்லா யுகங்களுக்கும் ஒன்றே. அதனால் சனாதன தர்மம் என்ற சொல்லை அற்புதமாகக் காட்டுகிறார். இது சாஸ்வதமானது, மாறாதது என்கிறார். “சத்யாத்மகம் ராஜ்யம்” என்ற சொற்களை மறக்கக் கூடாது.
“சத்யமேவ ஜெயதே!” என்ற உயர்ந்த வாக்கியத்தை தன் குறிக்கோளுரையாக பாரத தேசம் காட்டுகிறது. மூன்று சிங்கங்களின் கீழே இருக்கும் சத்யமேவ ஜெயதே என்பது உபநிஷத்திலிருந்து எடுத்தாளப்பட்ட வாக்கியம்.
அத்தகைய சத்திய சொரூபத்தை ராமச்சந்திர மூர்த்தி எடுத்துக்காட்டுகிறார். வேதங்களில் இருக்கும் தர்மமே ராமாயணத்திலும் உள்ளது. அதனால்தான் ‘தஸ்மாத் சத்யாத்மகம் ராஜ்யம்’ என்கிறார். அரசாங்கம் என்றாலே உண்மையோடு கூடியதாக இருக்க வேண்டும் என்பது நியமம். சத்தியம் என்றால் முதலில் கபடமில்லாமல் இருப்பது. இரண்டாவது சாஸ்வதமான நியம பரிபாலனம். இடைவிடாமல் நியமங்களைக் கடைபிடிப்பது என்று பொருள். மூன்றாவது கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுதல். இம்மூன்று வித அர்த்தங்களும் சத்தியம் என்ற ஒரே சொல்லில் அடங்கியுள்ளன. அதனால் கபடமற்று விளங்குதல் என்பது அரசாட்சி செய்பவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம். ஆயின் ஓரொரு முறை அரசை ஆளுபவர் சில ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கும். சிலவற்றை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அது கபடமாகாது. அது அரசாட்சி விதிமுறைகளில் ஒரு பாகம். ஆனால் அதே சமயம் மக்களை வஞ்சிக்கக் கூடாது. இது மிக முக்கியமான அம்சம்.
ஒன்று சத்தியம். இரண்டாவது அனுசம்சம். அதாவது குரூரத் தன்மை இல்லாமல் இருப்பது என்கிறார். அராசளுபவர் கொடூரமானவராக நடந்து கொள்ளக் கூடாது. குரூர குணம் எந்த அரசாங்கத்தில் இருக்கிறதோ அந்த அரசு அதிக காலம் நீடிக்காது. கொடூரமான ஹிம்சை வாதிகளைத் தூண்டிவிட்டு, அவர்களைப் போஷித்து, ஆதரிக்கும் அரசாளுபவரோ அரசுகளோ நசிந்து விடும். சத்தியம், குரூரத் தன்மை இல்லாதிருப்பது இவ்விரண்டும் அரசாட்சிக்கு மிகவும் தேவையான குணங்கள் என்பது ராமச்சந்திர மூர்த்தி எடுத்துரைக்கும் மிக அற்புதமான சொற்கள்.
சத்தியதை ஆதாரமாகக் கொண்டு பிரபஞ்சம் மொத்தமும் நடந்து வருகிறது. விஸ்வ பரிபாலனம் கூட சத்தியத்தின் வழி நிற்கிறது. சூரியன் சரியான நேரத்தில் உதயமாகிறான் என்றால் அவன் ஒரு நியமத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்கிறான் என்று பொருள் அதே போல் மழைக் காலத்தில் மழை பொழிகிறது. வெயில் காலத்தில் வெயில் காய்கிறது என்றால் இயற்கையில் இருக்கும் பஞ்ச பூதங்களும் கூட ஒரு நியமத்துக்கு உட்பட்டு கபடமின்றி நடந்து கொள்கின்றன. எனவே இயற்கையில் ஒரு பாகமாக விளங்கும் நாமும் கபடமின்றி நியமத்தோடு கூடிய வாழ்க்கையை வாழ வேண்டும். விஸ்வம் மொத்தமும் சத்தியத்தின் மீது ஆதாரப்பட்டு விளங்குவதால் நாம் கூட சத்திய ரூபமான விஸ்வ சக்கர நியமத்தின் ஒரு பாகமாக விளங்க வேண்டும்.
“சத்யமேவ ஈஸ்வரோலோகே சத்யம் பத்மாம்ஸ்ரிதா சதாI
சத்யமூலாணி சர்வாணி சத்யாந்நாஸ்தி பரம்பதம்II” –என்கிறான் ஸ்ரீராமன்.
“சத்தியமே இந்த உலகத்தை பரிபாலிக்கும் பரமேஸ்வரன். சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டே மகாலட்சுமி இருக்கிறாள். அதாவது ஐஸ்வர்யம் விளங்குகிறது. அனைத்தும் சத்தியத்தை மூலாதாரமாகக் கொண்டுள்ளன. சத்தியத்தை விட உயர்ந்த ஸ்தானம் வேறொன்று இல்லை” என்பது ராம வாக்கியம். இது நம் பாரத தேசத்தின் சனாதன தர்ம வாக்கியம் என்பதை நம் இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர், சனாதன தர்மத்திற்கு கட்டுப்பட்டவர், ராம பக்தர், ராம தர்மத்தை நிலைபெறச் செய்பவர் பாரத தேசத்திற்கு அரசாளுபவராக மீண்டும் வர வேண்டும் என்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பிரார்த்திப்போம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



