வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பல்; பொன்னமராவதியில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்! பதற்றம்!

சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

ponnamaravathi - 2026

பொன்னமராவதியில் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. வன்முறையை தடுக்க போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினரின் ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.  தங்களது சமுதாயத்தினரை இழிவு படுத்தி WhatsApp செயலியில் பதிவுகள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலைகளில் மரத்தை வெட்டிப் போட்டு மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கே கடந்த சில நாட்களாக இரு பிரிவினர் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் ஒரு பிரிவினர் குறித்து மற்றொரு பிரிவினர் வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்புவதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து இரு பிரிவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சமாதானம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் மூண்டது.

இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று மோதலை தடுக்க முற்பட்டனர். அப்போது போலீஸார் மீதும், அவர்கள் வந்த வாகனங்கள் மீதும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.

இந்தக் கல்வீச்சில் காவலர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். ஒரு போலீஸ் வாகனமும் சேதமடைந்தது.

இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். திருச்சி சரக டிஐஜி லலிதாலெட்சுமி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ்அப்பில் ஒரு பிரிவினர் குறித்து தவறாக தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை மாவட்டத்தின் மீனாட்சிபுரம், கே.புதுப்பட்டி, புழுதிப்பட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மரங்களை வெட்டி சாலை நடுவே போட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.