“இனிமேல் படி…படி….என்று சொல்லாதே”
(“வாசி….வாசின்னு நாலஞ்சு தடவை சொல்லிப்பாரு.. சிவா…சிவான்னு பகவன் நாமா வரும்…” பெரியவா.
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
பத்து வயதுப் பையன் தரிசனத்துக்கு வந்தான்.
“அவனை விஜாரி” என்று பெரியவாள் ஜாடை காட்டினார்கள்.
ராயவரம் பாலு என்ற அணுக்கத் தொண்டர் அவனிடம் போய், ‘என்ன பெயர்? என்ன பண்ணுகிறாய்?’ என்றெல்லாம் விஜாரித்துவிட்டு வந்து பெரியவாளிடம் சொன்னார்.
“ராமகிருஷ்ணானாம்…..அஞ்சாவது படிக்கிறானாம்.. அப்பா, சமையல் வேலை செய்யறாராம்…… ரெண்டு தங்கை…”
பெரியவாள் வலது கையை சற்றே உயர்த்திக் காட்டிவிட்டு பிரசாதம் கொடுக்கச் சொன்னார்கள்.
திருநீறு – குங்குமத் தட்டை அவனிடம் நீட்டிய பாலு, “நன்றாகப் படி” என்றார்.
பாலு திரும்பி பெரியவாள் அருகில் வந்ததும், “இனிமேல் படி…படி….என்று சொல்லாதே” என்றார்கள்.
பாலுவுக்குப் புரியவில்லை.பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையனைப் பார்த்து , படி..படி.. என்று அறிவுரை கூறுவது தவறில்லையே? ..பின் ஏன் படி..படி.. என்று சொல்ல வேண்டாம் என்கிறார்கள்?
“இனிமேல் பசங்களைப் பார்த்தால் வாசி..வாசின்னு நாலைந்து தடவை சொல்லு..”
அட..,இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
“வாசி….வாசின்னு நாலஞ்சு தடவை சொல்லிப்பாரு.. சிவா…சிவான்னு பகவன் நாமா வரும்…”
அட!
மரா..மரா..சொன்னால்,ராம என்ற பகவன் நாமா!
வாசி…வாசி..சொன்னால் சிவா என்ற பகவன் நாமா!
அட……!



