
உலகில் புகழ் பெறுவது என்பது சிறப்பான விஷயம். செல்வம் சம்பாதிப்பது, தான தர்மம் செய்வது போன்றவை எத்தனை உயர்ந்ததோ கீர்த்தி பெறுவதும் அத்தனை உயர்ந்ததே! அதனால் கீர்த்தியையும் செல்வம் என்றே குறிப்பிடுவார்கள். நம்மைப் பற்றி பலர் புகழ்வதே கீர்த்தி எனப்படுகிறது. அவ்வாறு புகழப்படும் போது நம் பெயர் பரவுகிறது. அனைவருக்கும் புகழ் மீது ஆசை இருப்பது இயல்பே!
ஆனால் சிலர் கீர்த்தி பெறுவதற்காக செல்வத்தைச் செலவு செய்வார்கள். புகழ் பெறுவதற்காக பலவித முயற்சிகளும் பலவித வேலைகளும் செய்பவர்கள் உள்ளார்கள்.
ஆனால் உண்மையான கீர்த்தியைப் பெற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று மகாபாரதத்தில் வியாசர் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
“அப்ரவன் கஸ்யசித் நிந்தாம் ஆத்ம பூஜாம் அவர்ணயன்
விபஸ்சித் குண சம்பன்ன: ப்ராப்னோ த்யேவ மஹத்யஸ:”
“ஏதோ ஒரு சிறப்பான குணம் இல்லாவிட்டால் புகழ் வராது. படிப்பறிவோ, கலைத் திறமையோ, வித்யையோ ஏதோ ஒன்று இருக்க வேண்டும். உண்மையில் அறிவுக் கூர்மையால் வரும் கீர்த்தியே மிகச் சிறந்தது. அதேபோல் நற்குணங்களாலும் நற்பெயரும் புகழும் ஏற்படுகிறது. ஆனால் அவ்விரண்டும் இருந்தாலும் கூட இரண்டு தீய குணங்கள் இருக்கக்கூடாது. அப்போதுதான் சரியான புகழ் கிடைக்கும்”.
எத்தகைய அறிவாளியானாலும் கல்வியாளரானாலும் சரி, பிறரை நிந்திப்பதும் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் செய்யக்கூடாது. இவ்விரண்டு குணங்களும் இருந்தால் சரியாக கீர்த்தி கிடைக்காததோடு இருக்கும் நல்ல பெயரும் கெட்டுவிடும். இதனை அறிய வேண்டும்.
ஒருவர் தன்னைக் குறித்து தானே எப்போதும் தற்பெருமை பேசிக் கொள்ளக் கூடாது. அதேபோல் தன்னைப் பற்றி குறைவாகவும் கூறிக் கொள்ளக்கூடாது. தன் மதிப்பையும் தன் கல்வியறிவையும் சரியான சமயத்தில் வெளிப்படுத்தினால் அவருடைய சிறப்பு அனைவருக்கும் தானாகவே தெரியவரும்.
தீபம் தன்னிடம் ஒளி இருக்கிறது என்று பிரச்சாரம் செய்து கொள்ளத் தேவையில்லை. தீபத்தின் ஒளியே அதன் சிறப்பை வெளிப்படுத்துகிறது. தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் கூடாது. அதே போல் பிறரை நிந்திப்பதும் கூடாது.
ஒரு அறிவாளி பிற அறிவாளிகளைப் பற்றி தாழ்வாக பேசினால் அவருக்கு கீர்த்தி வராது. பிறரை இகழ்ந்து பேசினால் பேசியவருக்கு அபகீர்த்தி இகழ்ச்சியும் வந்து சேரும். தனக்கு புகழ் வராதோ என்னவோ என்று தன்னைத்தானே புகழ்ந்து பேசிக் கொள்பவருக்கு இகழ்ச்சிதான் வந்து சேரும். அது தவறான செயல்.
தன் சிறப்பை பிறர் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்களோ என்று அஞ்சி தானே தன் சிறப்புகளை தம்பட்டம் அடித்துக் கொண்டால் அவரிடம் சிறப்பு இருந்தாலும் கூட சமுதாயத்தில் அவர் மீது ஏளனம் ஏற்பட்டு விடும். இது கூட நினைவில் கொள்ள வேண்டிய அம்சம்.
இவை குறித்த அறிவதற்கு ராமாயணத்திற்குள் பிரவேசிப்போம். ராமனோ சீதையோ அனுமனோ எங்கும் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளவில்லை. ராம லட்சுமணர்களின் எதிரில் நின்று பேசுகையில் அனுமன், ராமனின் சிறப்பு பற்றிக் கூறுவார்; சுக்ரீவனின் சிறப்பு பற்றி பேசுவார்; தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் பொழுது, “அனுமன் நாம வானர:” என்பார். “அனுமன் என்னும் குரங்கு நான்!” என்பார். அவ்வளவே!
தான் யார்? தன் சிறப்பு என்ன? தன் பதவி என்ன? என்று எதுவுமே கூறவில்லை அனுமன். “நான் சுக்ரீவனால் தூதனாக அனுப்பப்பட்டவன்!” என்று அறிமுகம் மட்டுமே செய்து கொண்டார். தான் பெரிய படிப்பறிவு கொண்டவன் என்றோ புத்திசாலி என்றோ சுக்ரீவனின் மந்திரி என்று கூறிக் கொள்ளவில்லை.

ஆனால் அனுமன் தெரிவிக்காவிட்டாலும் அனுமனின் சிறப்பனைத்தையும் ராமன் புரிந்து கொண்டு அவரைப் புகழ்ந்து லட்சுமணனிடம் கூறுகிறான். இங்கு அனுமன் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ள விட்டாலும் அவருடைய சிறப்பான குணங்கள் எவ்வாறு வெளிப்பட்டன? பேசும் முறை, நடத்தை போன்றவற்றால் வெளிப்பட்டன. ராமாயணத்தில் எங்கு ஆராய்ந்தாலும் அனுமன் தன்னைப் பற்றி புகழ்ந்து கூறிக் கொள்வதை காண இயலாது.
தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதை “பிரகல்பம்” என்பார்கள். மகாபாரதத்தில் “உத்தர ப்ரகல்பம்” என்ற சொல் மிகவும் பிரசித்தி. உத்தரகுமாரன் தன் வீரத்தைப் பற்றி உயர்வாக பாராட்டிக் கொள்வான். ஆனால் சந்தர்ப்பம் வந்த போது மட்டும் பின்னால் ஓடி விடுவான். அது போன்ற புகழுரைகளைத் தானே பேசிக் கொள்வது கீர்த்திக்கு வழி கோலாது.
பிறரை நிந்திப்பதும் மிக ஆபத்தானது. உண்மையில் மனிதனுக்கு தாழ்வு ஏற்படுத்துபவை மூன்று குணங்கள். குரு நிந்தை, பர நிந்தை, ஆத்ம ஸ்துதி.
குருவை நிந்திக்கக் கூடாது. தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக்கூடாது. இவ்விரண்டும் செய்வதற்கு வெட்கப்பட வேண்டும். அவ்வாறு யாராவது நடந்து கொண்டால் அந்த இடத்தில் நிற்காமல் நாம் வெளியே வந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
அதேபோல் யாராவது நம்மை புகழ்ந்தாலும் நாம் அதில் மகிழ்ந்து போகக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. யாரேனும் நம்மை புகழ்ந்தால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் நம் வேலையை நாம் செய்து கொண்டு போக வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் நற்புகழே உண்மையான கீர்த்தி. அதுவே “மஹத்யஸ:” – “மிகுந்த புகழ்” என்றார் மகாபாரதத்தில்.
இன்னொரு வார்த்தையும் கூறியுள்ளார் மகாபாரதத்தில்.
“அப்ரவன் வாதி சுரபிர்கந்த: சுமனசாம் சுசி:
ததைவ அவ்யாஹரன் பாதி விமலோ பானுரம்பரே !”
“மலரிலிருந்து மணம் சொல்லாமலே பரவுகிறது. அவ்வளவுதானே தவிர, “என்னிடம் இத்தனை மணம் இருக்கிறது ஓஹோ!” என்று அந்த மலர் பிரச்சாரம் செய்யாது. அதிலிருந்து இயல்பாக சுகந்தம் வீசுகிறது. அதே போல் மௌனமாகவே சூரியன் ஒளி வீசுகிறான்! சொல்லிக் கொள்கிறானா என்ன?”
அதேபோல் நாம் செய்யும் வேலை, நம் நடவடிக்கை, நம் நற்குணங்கள், நம் அறிவாற்றல் இவை நம்மிடமிருந்து இயல்பாகவே வெளிப்பட்டு பரவ வேண்டுமே தவிர நாம் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை. சொல்லிக் கொண்டால் அது அபகீர்த்தியாக மாறிவிடும்.
எனவே பேசாமலேயே, நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொள்ளாமலேயே உலகத்திற்கு நல்லது செய்யலாம் என்று இருவர் நிரூபித்துள்ளார்கள். அவர்களே மலரும் சூரியனும்! அவ்விரண்டும் பிரச்சாரம் செய்து கொள்ளாமலே தம் சிறப்பை வியாபிக்கச் செய்கின்றன.
நற்செயல்களைச் செய்து கொண்டிருந்தால் புகழும் பாராட்டும் தாமாகவே வரும் என்று கூறியருளிய வியாச மகரிஷியின் வாக்கியத்திற்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


