“மைத்ரீம் பஜத”-
(பெரியவாளின் பாடல்)
“பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது” என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியான சம்பவம்)
கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான்.
எம்.எஸ்.அம்மாவுக்கு ‘யுனைடட் நேஷன்ஸ்’ல பாட வாய்ப்பு வந்தது.அவர் பெரியவாளிடம் தெரிவித்து ஆசி வேண்டி நின்றார். அவரும் “இது உனக்கு மட்டும் கிடைத்த கௌரவம் இல்லை; இந்திய மண்ணுக்கே கிடைத்த பெருமை.வெற்றிக் கொடி நாட்டி வா!” என்று ஆசி கூறி அனுப்பினார்.
அப்போதுதான் அது சர்வதேச அரங்கமாக இருப்பதால் அங்கு பாட ‘மைத்ரீம் பஜத’ என்ற பாட்டை எழுதிக் கொடுத்தார்.அது பெரியவா உபதேசப் பாடல்.பிரபல இசை மேதை வஸந்த தேசாய் என்பவர் மெட்டமைத்துக் கொடுத்தார்.
நியூயார்க்கில் போய் இறங்கியதும் சோதனை போல் எம்.எஸ்.அம்மாவுக்குத் தொண்டை கட்டிக் கொண்டது.
சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி.வருத்தம் தாங்காமல் பெரியவாளையே நினைத்துப் புலம்ப, “தேசத்துக்கே பெரிய பெருமை என்று பாராட்டி,பாட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு இது என்ன சோதனை?” என்று ஏங்கினார் எம்.எஸ்.
கச்சேரி பண்ண வேண்டிய நாளும் வந்துவிட்டது.
அரங்கத்துக்கும் சென்றாகிவிட்டது. தொண்டை அடைப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. “ஈசுவரன் விட்ட வழி” என்று மேடை ஏறினார்.
ஸ்ருதி கூட்டப்பட்டது.கண்ணை மூடிக்கொண்டார். தன்னை மறந்து பாடத் தொடங்கினார்.கடைசியில் அவர் ‘மைத்ரீம் பஜத’ பாட சபையே STANDING OVATION செய்து கரவொலியால் அதிர்ந்தது.அதைக் கேட்டுத்தான் அவருக்கு, “தான் பாடிக் கொண்டுதான் இருந்தோம்” என்ற சுய உணர்வே வந்தது.
வாழ்நாள் இறுதிவரை இந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் நினைத்தவுடன் அழுது விடுவார்.
“பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது” என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.


