ருஷி வாக்கியம் (52) – வேத மந்திரம் என்றால் என்ன?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

ved1 - 2026
வேதத்தில் கூறப்பட்டுள்ள வாக்கியங்களுக்கு மந்திரங்கள் என்று பெயர். அவற்றில் சொற்களுக்கு மட்டுமின்றி தெய்வீக ஒலிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வேத மந்திரங்கள் வெறும் உச்சரிப்பின் மூலம் கூட சக்தியளிக்கக் கூடியவை.

மந்திரம் என்றால் ‘சக்தி நிரம்பிய சொற்கள்’ என்று பொருள். அவ்விதமாக நாம் சிந்தித்துப் பார்க்கையில் வேதத்தில் இருக்கும் மந்திரங்கள் எத்தனை எத்தனையோ அர்த்தங்களை நமக்குத் தெரிவிக்கின்றன என்பது புரிகிறது.

வேத மந்திரத்திற்கு இதுதான் பொருள் என்று அத்தனை எளிதாகக் கூறிவிட முடியாது வேதமந்திரங்களை புரிந்து கொள்வதற்கு ஆறு சாஸ்திரங்களின் உதவி தேவை என்கிறது சம்பிரதாயம். அந்த ஆறு சாஸ்திரங்களுக்கு “ஷட் அங்கங்கள்” என்று பெயர். “சிக்ஷா, வியாகரணம், நிருக்தம், சந்தம், ஜோதிடம், கல்பம்” – இந்த ஆறு சாஸ்திரங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே வேத மந்திரத்திற்கு பொருள் கூற முடியும்.

வேதத்திற்கு இத்தகைய ஆறு வகை சாஸ்திர அறிவோடு பொருள் கூறியவர்களுள் “சாயிநாச்சாரியார்” ஒருவர். அவர் மிக அழகாக வேதத்திற்கு நிருக்தமும் பாஷ்யமும் எழுதி உள்ளார். ‘நிருக்தம்’ என்றால் வேதச் சொற்களுக்கான நிகண்டு, அகராதி என்று பொருள். இதனை அனுசரித்து பாஷ்யம் அதாவது பொழிப்புரை எழுதுகையில் ஒரு வார்த்தை கூறுகிறார். “நான் வெறும் ஒரு விதத்தில் பொருள் கூறுகிறேனே தவிர வேதத்திற்கு இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் உள்ளன” என்று குறிப்பிடுகிறார். இதனை மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்.

அதாவது தற்போது நமக்கு இருக்கும் பௌதிக நிலையைப் பொறுத்து வேத மந்திரங்களுக்கு ஒருவிதத்தில் பொருள் கொள்கிறோம். ஆனால் வேத மந்திரங்களுக்குள் இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் மறைந்திருக்கின்றன.

அர்த்தங்கள் எத்தனை மறைந்திருந்தாலும் சிலவற்றை மட்டுமே நாம் பொருள் புரிந்து கொள்வது எந்த விதத்தில் சரியானது? எந்த விதத்தில் அது முழுமையானது? என்று கேள்வி கேட்டுக் கொண்டால் ஓரளவிற்கு நாம் பொருள் கொள்ள இயலுமே தவிர வேதம் நாம் கொள்ளும் அர்த்தங்களை விட இன்னும் எத்தனையோ அர்த்தங்களோடு கூடியது என்னும் புரிதல் நமக்கு இருந்தால் அதுவே போதும்!

அதனால்தான் சிலர் வேதத்தில் இருக்கும் வான்மண்டல ரகசியங்களை எடுத்துக் கூறுகிறார்கள். சிலர் விஞ்ஞானத்தோடு தொடர்புடைய சாஸ்திரங்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறார்கள். இவையனைத்தும் அதில் உள்ளன.

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

வேதத்திலுள்ள ஒவ்வொரு மந்திரத்திற்கும் மூன்று விதமான பொருள் இருக்கும் என்று வேத சாஸ்திரமே தெரிவிக்கிறது. இதனைக் கொண்டு அத்தனை பொருட்களையும் எவ்வாறு அறிவது என்பதையும் கூறுகிறார்கள். ஒவ்வொரு மந்திரத்திற்கும் “அதியக்ஞம், அத்யாத்மம், அதிதெய்வம்” என்ற மூன்றின்படி மூன்று வித பொருள்களைக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

அத்யாத்மம் என்பதற்கு “பௌதீகப் பொருள்” என்று விளக்கம் கொள்ளலாம். அதிதெய்வம் என்றால் தேவதைகளைப் பொறுத்து பொருள் கொள்வது. அதியக்ஞம் என்றால் யக்ஞத்தைப் பொறுத்து பொருள் கொள்வது. யக்ஞத்தின்படியான வியாக்கியானத்தைத்தான் “சாயிநாச்சாரியார்” அளித்துள்ளார்.

வேதத்தில் உள்ள மந்திரங்களை ஆராய்ந்தால் அற்புதமான தனிமனித மேன்மைக்குப் பயன்படும் வாக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றை நாம் மனித குலத்தின் மேன்மைக்கான தர்மோபதேசங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். தர்மம் என்றால் உத்தமமான தனி மனித நடத்தை என்ற ஒரு பொருள் போதும்!

தனி மனித நடத்தையை பண்படுத்துவதே தர்மத்தின் நோக்கம். பண்படுத்தப்பட்ட தனி மனித நடத்தையோடு வாழ்வதே தர்மம். அத்தகைய தர்மத்தையே வேதம் போதிக்கிறது.

அதுமட்டுமல்ல. இறுதியில் சூட்சுமமான வேதாந்த தத்துவ வித்யையை போதிக்கிறது. இத்தனை விஸ்தாரமாக கருத்துக்களை கூறும் வேதத்தின் பொருட்சிறப்புகளை நாம் சிந்தித்துப் பார்க்கையில் இத்தனைவித பொருள் பொதிந்த வார்த்தைகள் எவ்வாறு உற்பத்தியாயின என்ற வியப்பு ஏற்படுகிறது.
ved2 1 - 2026

அதற்குக் காரணம் என்னவென்றால் மிகத் தீவிரமான ஆழ்ந்த தவத்தின் மூலம் சாதாரண அறிவிற்கு அப்பாற்பட்டு செல்கிறார் ருஷி. நீண்டகால ஆழ்ந்த தவத்தினால் ரிஷிகளின் புத்திக்கூர்மை மலர்கிறது. அத்தகைய புத்தி கூர்மையால் பெறும் அறிவாற்றலின் மலர்தலை “புலன்களுக்கு அப்பாற்பட்ட ஞானம்” என்கிறோம்.
உலகில் எந்தக் கல்வியறிவை பற்றிக் கூறினாலும் அவற்றை புலன்களின் எல்லைக்கு உட்பட்டதாகவே அறிகிறோம்.

புலன்களுக்கு அப்பாற்பட்ட ‘ப்ரக்ஞை’ பற்றி சாமானிய மனிதனால் எடுத்துக் கூற இயலாது.

தவத்தின் மூலம் சமாதி நிலையை அடைந்தவர்கள் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றலால் சாசுவதமான உண்மைகளை அறிந்து கொள்கிறார்கள். அவ்வாறு தரிசித்த சத்தியங்களை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

அவற்றையே வேதமந்திரங்கள் என்கிறோம். அவ்வாறு அறிந்து கொண்டவர்களை ருஷிகள் என்கிறோம். அவர்கள் அறிந்து கொண்ட சத்தியங்களை வேதம் என்கிறோம்.

அதனால் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட உயர்ந்த புத்தி கூர்மையோடு சமாதியில் ருஷிகள் தரிசித்துச் சொல்லும் வார்த்தை, சாமானிய நிலையில் இருப்பவர்களுக்குப் புரியாது. அதனால் அதனை அவ்விதமே உயர்வாக கௌரவிக்கிறோம் என்பது இதில் உள்ள சிறப்பு.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

அதன் கருத்துக்களை நாம் புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் அந்த வேத வாக்கியங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். ஏனென்றால் அவை சமாதி நிலையில் இருந்து வெளிப்பட்ட சொற்களாதலால் அவற்றை நாம் பகவானின் சொற்களாகவே ஏற்க வேண்டும். புலன்களுக்கு அப்பாற்பட்ட சப்தங்கள் இறைவனின் சொரூபமே!

பகவானோடு ஒன்றுபட்ட ருஷி, லௌகீகமான அம்சங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பார். அதனால் “சர்வ அதீதமான” சத்தியத்தை அவர் வெளிப்படுத்துவார். அதன் காரணமாகவே சமாதி ஸ்திதியிலிருந்து கூறப்பட்ட உண்மைகளில் எத்தனை உட்பொருள் உள்ளது என்பது மீண்டும் அந்த நிலையை எட்டியவருக்குத்தான் புரியுமே தவிர சாமானியர்களுக்கு விளங்காது.

ஒவ்வோர் முறை வேத வாக்கியங்கள் அர்த்தங்களுக்கு அதீதிகமாகக் கூட இருக்கும் என்று கூறப்படுகிறது. இங்கே அர்த்தங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கும் வேத வாக்கியங்களால் நமக்கு என்ன பயன்? என்ற கேள்வி எழுகிறது.

பயன் என்பது அந்த வாக்கியங்களின் இருப்பிலேயே இருக்கிறது என்பதை நாம் கூறி வருகிறோம். அந்தச் சொற்களை உச்சரிக்கும் போது ஏற்படும் சக்தி அலைகளாலேயே நன்மைகள் நிறைவேறுகின்றன.

உலகிலேயே, “இந்தச் சொல்லை இவ்வாறுதான் உச்சரிக்கவேண்டும். இந்தச் சொல்லை இந்த ஸ்வரத்தோடுதான் உச்சரிக்க வேண்டும்” என்று கூறிய ஒரே சாஸ்திர நூல் வேதம். இதர நூல்கள் எதுவுமே இந்தச் சொல்லை இவ்வாறுதான் உச்சரிக்க வேண்டும் என்று கூறுவதில்லை. சங்கீத சாஸ்திரத்தில் மட்டும் அட்சரங்களை இந்த ஸ்வரத்தில் உச்சரிக்க வேண்டும் என்று கூறுவார்களே தவிர மீதி உள்ள எந்த நூலிலும் வாக்கியங்களை இந்த ஸ்வரத்தில்தான் உச்சரிக்க வேண்டும் என்று கூறவில்லை.
வேதத்தில் மட்டுமே அவ்வாறு கூறியுள்ளார்கள். இதனைக் கொண்டு தெரிவது என்னவென்றால் வேதத்தில் பொருள் எத்தனை முக்கியமோ ஒலியும் அதே அளவு முக்கியம்.

நம் தினப்படி வாழ்க்கையில் கூட ஒரே சொல்லை கூறுகையில் பல வேறுபாடுகளைக் காண்கிறோம். சொல் ஒன்றேயானாலும் அன்போடு ‘வாங்க!’ என்று கூறுவதற்கும் வெறுப்போடு அதே சொல்லைக் கூறுவதற்கும் உள்ள சப்த வேறுபாட்டை நாம் கவனிக்க முடியும்.

வேத மந்திரங்களில் ஸ்வரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. “உதாதா, அனுதாதா, சரிதா” என்ற மூன்று முக்கியமான ஸ்வரங்கள் பற்றி வேத மந்திரங்களில் கூறியுள்ளார்கள். அந்தந்த ஸ்வரங்களில் உச்சரிக்கும்போது பொருளிலும் மாற்றமேற்படுகிறது. அதனால் வேதத்திற்கு ஸ்வரம் இன்றியமையாதது.

இக்காரணத்தால்தான் வேதத்தைக் கற்றுக் கொள்வதில் கூட ஒரு திட்டவட்டமான சம்பிரதாயத்தை விதித்துள்ளார்கள். அவ்விதம் சம்பிரதாயத்திற்கு உட்பட்டு வேதத்தை கற்றுக் கொள்ளும்போது அந்த உச்சரிப்பு முறையில் இருக்கும் தெளிவும் அதன் உண்மையான வடிவமும் நமக்குப் புரிய வருகிறது.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

இன்னும் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் உலகத்தில் உள்ள பல நூல்களும் பல வித்யைகளும் காலப்போக்கில் மாற்றங்களுக்கு ஆளாகி வருகின்றன. ஆனால் வேதம் ஒன்று மட்டுமே எத்தனை யுகங்கள் கடந்தாலும் ஒரே விதமாக உச்சரிக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் காணப்படாது.

இதனைக் கொண்டு எத்தனை பாதுகாப்பான, கட்டுப்பாடான அமைப்பு வேதத்திடம் உள்ளதென்பதை அறிய முடிகிறது. வேதத்தின் வடிவத்தை நாம் புரிந்துகொள்ள முயலும் போது இத்தனை விஷயங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் ருஷிகள் தரிசித்த சாஸ்வத உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். அதே ஸ்திதிக்குச் சென்று சேர்ந்த மற்ற ரிஷிகள் அவற்றை அறிந்து கொண்டு நமக்குப் புரியும் வண்ணம் எடுத்துக் கூறியுள்ளார்கள். அந்த நூல்களை புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்கிறோம்.

வேதங்களில் கூறிய சத்தியங்களை மீண்டும் அதுபோன்ற சமாதி நிலைக்குச் சென்ற வியாசர் முதலான மகரிஷிகள் புரிந்துகொண்டு கருணையோடு நமக்குப் புரியும் வண்ணம் கதை வடிவிலும், போதனை வடிவிலும் அளித்துள்ளார்கள்.

வேதங்களில் கூறப்பட்டவற்றையே இதர சாஸ்திரங்களில் நம் ஸ்தாயியில், நமக்குப் புரியும் வண்ணம் வழங்கியுள்ளார்கள். அதிலும் கூட கற்றறிந்தோர் அறிவு நிலை முதல் சாமானியர்களின் அறிவு நிலை வரை புரிந்து கொள்ளும் திறனில் பல வித வேறுபாடுகள் இருக்கும்.

மொத்தத்தில் வேதங்களில் கூறப்பட்டுள்ள ஞானமே நமக்குப் பயன்படும் வண்ணம் புராணங்கள் போன்றவற்றில் கிடைக்கின்றன என்பதை அறிந்து கொள்வோமாக! வேதமே விஸ்தாரமாக இத்தனை நூல்களாக நமக்கு கிடைக்கின்றன. அத்தகைய நூல்களுக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Related articles

Recent articles

spot_img