
ஆடி மாத பௌர்ணமியில் இருந்து நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் என்ற பெயரால் தீட்சை மேற்கொள்வது சனாதன சம்பிரதாயத்தில் வழக்கமாக உள்ளது.
சன்னியாசிகள் மட்டுமின்றி இல்லறத்தாரும் அவரவர் நியமத்தின்படி பிரத்யேக தீட்சையை மேற்கொள்வர். ஸ்ரீமன்நாராயணன் யோக நித்திரையில் இருக்கும் இந்த சமயம் அந்தர்முககமான ஆன்மீக சாதனைகளுக்கு சாதகமான காலம்.
ஆஷாடம் முதல் கார்த்திகை முடிய உள்ள ஐந்து பௌர்ணமிகளுக்கு ‘வியாச பௌர்ணமிகள்’ என்று பெயர். வியாசரை நினைத்து வணங்கும் ஆஷாட பௌர்ணமியை ‘குரு பூர்ணிமா’ என்றழைப்பர்.
நம் சனாதன இந்து தர்மத்திற்கு தோற்றுவித்தவர் என்று எவருமில்லை. ஒரு நூல் என்பதும் இல்லை. ஆனால் வேதத்தின் ஆதாரமாக வளர்ந்த ஆகமம், புராணம், தர்மசாஸ்திரம், இதிகாசங்கள்…. இவை அனைத்திற்கும் ஒரே ஒரு படைப்பாளியாக யாரையாவது கூற வேண்டுமென்றால் வேதவியாசரையே கூற வேண்டும்.
அனைத்து பாரதிய கலாச்சாரத்திற்கும் அவரே ஜகத்குரு! சகல ரிஷிகளின் குரலையும் சேகரித்து சமர்ப்பித்த ஆச்சாரியர் வேதவியாசர்.
துவாபர யுகத்தில் அபாரமான குவியலிலிருந்து ஒன்றை எடுத்து நான்கு வேதங்களாக பிரித்து அஷ்டாதச (18) புராணங்களைப் படைத்து அதற்கு மேல் மகாபாரதத்தையும் பாகவதத்தையும் எழுதினார். பல்வேறு வழிமுறைகளில் பரந்திருந்த ஒன்றேயான தர்மத்தை ஓரிடத்தில் ஒருமைப்படுத்தி அளித்த ஸ்ரீமகாவிஷ்ணுவே வேதவியாசர்!
வேதவியாசரின் உண்மையான பெயர் கிருஷ்ணர். சத்தியவதிக்கும் பராசரருக்கும் (த்வீபம்) தீவில் தோன்றியதால் ‘துவைபாயனர்’ என்ற பெயர் ஏற்பட்டது. வேதங்களை ‘வியாசம்’ செய்ததால் வியாசர் என்ற பெயர் பெற்றார். நம் அனைத்து தர்மங்களுக்கும் சாகித்தியங்களுக்கும் வியாசரே மூலம்! “வ்யாஸோச்சிஷ்டம் ஜகத் சர்வம்!” – வியாசரின் ‘உச்சிஸ்ஷ்டமே’ (எச்சில்) இந்த ஜகத்தில் உள்ள அனைத்து நூல்களும். பிரபஞ்சத்திற்கே ஞானஜோதியாகத் திகழ்பவர் வியாசர்!
ஒரு லட்சம் சுலோகங்களாலான மகாபாரதம் சகல சாஸ்திரங்களும், சர்வ தர்மங்களும் ஒன்றிணைந்த நூல். இந்த நூலின் மூலம் ஜகத்குரு ஸ்ரீவியாசர் அளித்துள்ள ஞானம், அறிவு, விஞ்ஞானம் அனைத்தும் அபாரமானது. பகவத் கீதை, யக்ஷப்பிரச்னை, விஷ்ணு ஸஹஸ்ரம், சிவ ஸஹஸ்ரம், பலவித உபாக்கியானங்கள்…. இவ்விதம் விஸ்தாரமான விஷயங்களோடு கூடிய அற்புத சாகித்திய சிருஷ்டி மகாபாரதம்.
“யதி ஹாஸ்தி ததன்யத்ர ! யன்னே ஹாஸ்தி நதத் க்வசித் !!” – “இங்கு என்ன உள்ளதோ அதுவே எங்கும் உள்ளது. இங்கே இல்லாதது எங்குமே இல்லை!” என்று வியாசரே மகாபாரதத்தை பற்றிக் கூறியுள்ளார். மானுட நாகரீகத்திற்கு பாரத நாட்டு கலாச்சாரம் அளித்துள்ள அன்பளிப்பு இது.
வியாச தேவரைப் பற்றி மகாபாரதத்தில் வியாசரின் சீடர் வைசம்பாயனர் விவரித்துள்ள செய்தி என்னவென்றால், “தொடக்கத்தில் பிரம்மதேவரின் நான்கு முகங்களிலிருந்து நாராயணன் வேத வித்யையை வெளிப்படுத்தினார். அவற்றை உலகங்களில் வியாபிக்கச் செய்வதற்கு விஷ்ணுவே தன் அம்சத்துடன் ஒரு தேஜஸ்ஸை அவதரிக்கச் செய்தார். அவர் பெயர் “அபாந்தராத்மன்”. இதன் பொருள் “உள்ளே உள்ள அஞ்ஞான இருளை அகற்றுபவர்” என்பது. விஷ்ணுவிற்கு ‘ஆத்மஜன்’ அதாவது ‘மகன்’ என்று போற்றப்படுகிறார் ‘அபாந்தராத்மன்’. புத்தி கூர்மை மிக்க இவர் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களோடு அவதரித்து உலகில் வேத தர்மத்தை நிலைநாட்டுகிறார்”.
“வ்யாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாசிஷ்டாய நமோ நம: !!” என்று வியாசரை வேத நிதியான விஷ்ணுவாக ஆராதிக்கிறோம்.
‘அபாந்தராத்மன்’ இந்த வைவஸ்வத மன்வந்தரத்தில் பராசரரின் புத்திரனாக தோன்றினார். பராசரரின் தந்தை சக்தி. அவருடைய தந்தை வசிஷ்டர்.
இந்த பரம்பரையை தெரிவிகிறது இந்த ஸ்லோகம்.
“வ்யாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம கல்மஷம்
பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம் !!”
“வசிஷ்டரின் கொள்ளுப்பேரன், சக்தியின் பேரன், பராசரரின் புத்திரன். சுகரின் தந்தை – ஆன தபோநிதி வியாசருக்கு வந்தனம்!” என்று போற்றுகிறார்.
மகாபாரதத்திற்கு மூல புருஷர் கூட வியாசர்தான். “தன் தெய்வீக சக்தியால் நிரந்தரம் வைகுண்டத்திற்கு சென்று நாராயணனை ஆராதிக்கின்ற சமர்த்தர் இந்த வியாசர்” என்று மகாபாரதம் தெரிவிக்கிறது.

நாரத மகரிஷி அறிவுரைப்படி பாகவதத்தை எழுதி அளித்தவர் இவரே! பாரதீய தர்மத்தில் சாக்தர்கள், வைணவர்கள், சைவர்கள், சௌரர்கள், காணபத்யர்கள், கௌமாரர்கள் போன்ற எந்த உபாசனை சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களானாலும் வியாசரையே குருவாக அங்கீகரிப்பார்கள்.
தர்ம மார்க்கத்திற்கும், மோக்ஷ மார்க்கத்திற்கும், ஜோதிடம், ஆயுர்வேதம் போன்ற வித்யைகளுக்கும் கூட ஆச்சாரியர் வேத வியாசரே! இவர் கூறிய வித்யைகளை அனுசரித்து போதிப்பவர்களே உண்மையான குருமார்கள்! எனவேதான் வியாச பௌர்ணமியையே குரு பூர்ணிமாவாக கொண்டாடி, அனைவரும் தத்தம் குருமார்களில் வேதவியாசரைப் போற்றி சமமாக வழிபாடு செய்கிறார்கள்!
வியாசரிடமிருந்து நம் வரை பிரம்ம வித்யையை எடுத்து வந்ததற்கு குரு வணக்கத்திற்குரியவராகிறார். ‘வியாச வாக்கியம்’ என்றால் நம் நாட்டவருக்குள்ள கௌரவத்தின் காரணமாகவே பல நூல்கள் வியாசர் எழுதியவையாக புகழ் பெற்றுள்ளன. அவற்றுள்ளும் வியாசரின் ஹிருதயமே இருப்பதால் பிரமாணமாக ஏற்கப்படுகின்றன.
“வேதங்களை நிர்மலமான அறிவுடன் வியாசம் செய்து, அகில உலகிலுமுள்ள தேவர்கள் முனிவர்கள் அனைவருக்கும் ஆனந்தத்தை அளித்த புண்ணிய மூர்த்தி நீரே! தர்ம சந்தேகங்களை குற்றமற்ற வாக்கியங்களால் நீக்கி நிர்மூலமாக்கும் புண்ணிய சுபாவம் கொண்டவரான உம் கூற்று ‘லோக ஹித வாணி’ யாக பெயர் பெற்றது. நீர் புண்ணிய ஸ்லோகன்! என்பது சாட்சாத் விஷ்ணுவே கூறிய வார்த்தைகள்!” என்று ஆந்திர மகாபாரதத்தை படைத்த மூவரில் ஒருவரான ‘திக்கனா’ புகழ்ந்துள்ளார்.
வ்யாசம் வந்தே ஜகத்குரும்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



