வேத மகரிஷிகள் பூமியை தெய்வீக அன்னையாக தரிசனம் செய்தார்கள். முக்கியமாக பூமாதேவி, பூமாதா என்று கூறுவது வேத கலாசாரத்திலிருந்து வந்த உயர்ந்த கருத்து. அம்மனின் சொரூபங்களில் வசுந்தரா என்பது ஒரு வடிவம். தேவி பாகவதத்தில் பூமாதேவியை ஜகன்மாதாவின் அம்ச ஸ்வரூபம் என்று வர்ணித்துள்ளார்கள்.
இதன் மூலம் பூமியை ஒரு கிரகமாகவோ அல்லது நாம் வசிக்கும் ஒரு இடமாகவோ கருதாமல் நம்மை போஷித்து நம்முடைய இருப்புக்கு ஆதாரமான அன்னை ஸ்வரூபமாக தரிசிக்க வேண்டும் என்னும் கருத்தினை வேத ருஷிகள் நமக்கு அளித்துள்ளார்கள்.
இதனைக் கொண்டு ப்ரக்ருதியை பார்க்கும்போது ஒரு ஜடப் பதார்த்தமாக பார்க்காமல் சைதன்யத்தோடு கூடிய இறைவடிவமாக தரிசிப்பது என்பது நம் பண்பாடு என்பதை அறியலாம்.
ஏனென்றால் எல்லையற்றதாக விளங்கும் இயற்கையில் நாம் ஒரு புள்ளி போன்றவர்கள். ஒரு பிந்துவில் இருந்து தோன்றிய மனித இனம் இயற்கையை ஜடமாகப் பார்த்து தன் தேவைகளுக்கு பயன்படும் ஒரு பதார்த்தமாக பிரகிருதியை அணுகுவது வருத்தத்தை அளிக்கும் விஷயம்.
இயற்கை முழுவதும் அன்னை வடிவம் என்றும் இயற்கையின் பிள்ளைகள் நாம் என்றும் எண்ண வேண்டும் இந்த பாரதீய எண்ணம் அநாதி காலத்திலிருந்து தொடர்ந்து வந்து “வந்தே மாதரம்!” என்ற கருத்திலும் ஒலிக்கிறது. பூமியை வந்தே மாதரம் என்று வணங்கியபின் அது ஒரு புரட்சியானது. அது ஒரு மந்திரமானது. பாரத தேசத்தின் சுதந்திர கோஷமானது.
வந்தே மாதரம் என்ற கருத்துக்கு மூலமான ருஷி வாக்கியங்கள் வேதங்களில் பலப்பல இடங்களில் காணப்படுகின்றன. “உபசர்ப மாதரம் பூமிம் !” என்ற ருக் வேத மந்திரத்தில் “மாதரம் பூமிம்” என்ற சொல் உள்ளது.
“நமோ மாத்ரே ப்ரதிவ்யை ! நமோ மாத்ரே ப்ரதிவ்யா !!” என்று யஜுர் வேதத்திலும், “தாயாகிய இயற்கைக்கு நமஸ்காரம்!” என்ற கருத்து காணப்படுகிறது.
“மாதா பூமி: புத்ரோ அஹம் ப்ரதிவ்யா !” என்று அதர்வ வேதத்தில் மந்திரம் உள்ளது. “பூமாதேவி தாய். நான் பூமாதேவியின் பிள்ளை” என்று பூமிக்கும் நமக்கும் உள்ள அனுபந்தத்தைக் கூறுகிறார்.
அக்காரணத்தால்தான் இதனை நம் தினசரி செயல்களில் ஒரு பாகமாகக் கூட ஏற்பாடு செய்துள்ளனர் நம் முன்னோர். காலையில் எழுந்தவுடனே முதலில் தெய்வங்களையும் பெற்றோரையும் நினைத்து வணங்கி, பூமியின் மேல் கால் வைக்கும் முன்பு பூமியைக் கூட வணங்க வேண்டும்.
“சமுத்திர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே
விஷ்ணு பத்னீ நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே !!”
என்று கூறி வணங்க வேண்டும். அதாவது, “தாயே! விஷ்ணு பத்னியான பூமாதேவீ! நான் உன் மீது கால் வைக்கிறேன். என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்கிறோம்.
எத்தனை மென்மையான மிருதுவான பாவனை இதில் உள்ளதோ கவனித்துப் பார்க்க வேண்டும். இது வெறும் ஒரு மூடநம்பிக்கை என்றோ பிரமை என்றோ பார்க்காமல் இதில் உள்ள சிறப்பான கருத்தை உணர வேண்டும். நம் நம்பிக்கைகள் எல்லாம் கூட பிரமை என எண்ணாமல் அவற்றை கலாச்சாரத்தின் உயர்ந்த கருத்துக்களாக ஏற்கத் தெரியவேண்டும். பூமியை, “ஓ அன்னையே!” என்று அழைக்கிறார்கள்.
அதேபோல் நாட்டிய சாஸ்திரத்தில் கூட நாட்டியமாடத் தொடங்கும் முன்பு முதலில் பூமியை வணங்குவார்கள். அப்போது, “விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாத காதம் க்ஷமஸ்வமே!” என்பார்கள். நாட்டியம் ஆடும் போது பூமியைக் காலால் உதைப்பது நிகழும். அதனால், “தாயே! உன்னை இவ்வாறு உதைக்கிறேன். என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். “வேறு வழியில்லாமல் பூமியை மிதிக்க வேண்டி வருகிறது. அதனால் என்னை மன்னிப்பாயாக!” என்ற கருத்து இங்கு காணப்படுகிறது.
அதுமட்டுமல்ல. ஜெகன்மாதா, பூமாதா இவ்விருவரையும் ஒரே ஸ்வரூபமாக பார்த்த நம் கலாச்சாரத்தின் உட்பொருள் என்ன? சத்தியம் என்ன? வாஸ்தவம் என்ன? என்பதை ஆராய வேண்டும்.
சிலர் “வந்தே மாதரம்!” என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிந்து விழுவார்கள். ஏனென்றால் எங்கள் பாவனை வேறு.. உங்கள் பாவனை வேறு என்பார்கள். ஆனால் மாத்ரு பாவனை அனைவருக்கும் சமமானதே! நாம் எப்படிப் பார்த்தாலும், தாய் நம்மை பிள்ளைகளாகவே பார்ப்பாள்.
அதே போல பூமிக்கும் தாய்க்கும் உள்ள தொடர்பு என்ன? தாய்மை என்பது ஒரு பெண் வடிவம் அல்ல! தாய்மை என்றால் நம்மைப் பெற்றவள், வளர்ப்பவள், நம்மைக் காப்பவள் என்று பொருள். அதேபோல் நம் இருப்பிற்குக் காரணமாக விளங்கி, நம்மை போஷணை செய்து, காப்பாற்றி வரும் பூமா தேவியை “மாதா!” என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்க முடியும்?
எனவே ‘மாத்ரு’ என்பது ஒரு சொரூப பாவனை அல்ல! ஒரு பாவனையின் சொரூபம் என்பதை அறிய வேண்டும். அப்படிப்பட்ட ஜகன்மாதாவாக, பூமாதாவாக பூமியை வணங்கும் கலாச்சாரம் கொண்ட பாரத தேசத்தில் பிறந்ததற்கு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். பாரத மாதா, பூமாதேவி என்ற கருத்துக்கள் வேதத்தில் இருந்து வந்துள்ள சம்ஸ்காரம்.
ஒரு தாய் போல் நம் தேசத்தையும் பூமியையும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியருளிய ருஷி வாக்கியங்களுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்