23/09/2019 1:33 PM

ருஷி வாக்கியம் (103) – மூர்க்கரின் இயல்புகள்!
“மூர்க்க சிஹ்னானி ஷடிதி கர்வோ துர்வசனம் முகே !
விரோதீ விஷவாதீ ச கருத்யாக்ருத்யம் ந மன்யதே!!”

“கர்வம், துர்வசனம் (ஆத்ம ஸ்துதி, பரநிந்தை, சாஸ்திர விரோதமாகப் பேசுவது, ஆபாசப் பேச்சு), பகை பாராட்டுவது, விஷம் நிறைந்த பேச்சு (குதர்க்கம், கெடுதலாக வாதிடுவது), எதைச் செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்ற பண்பாடு இல்லாதிருப்பது… இவை மூர்க்கரின் இயல்புகள்”.

மகரிஷிகளின் வாக்கியங்களான ‘பாஷிதங்கள்’ ‘சுபாஷிதங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அதாவது நல்ல சொற்கள் என்று பொருள். இவற்றின் பின்னணியில் நல்ல கல்வியறிவு, அனுபவ ஞானம், தீர்க்கதரிசனம் போன்ற குணங்கள் உள்ளன. அதனால்தான் அந்த வாக்கியங்கள் இத்தனை செல்வாக்கோடு விளங்குகின்றன.

நல்ல மனிதர்களைப் பற்றி மட்டுமல்லாமல் மூர்க்கர்களைப் பற்றியும் நம் புராதன நூல்கள் வர்ணிக்கின்றன. நல்ல மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? முட்டாள்கள் எவ்வாறு நடந்துக் கொள்வார்கள்? என்று எதனால் கூறுகிறார்கள் என்றால் அந்த லட்சணங்கள் பிறரிடம் உள்ளனவா என்று தேடுவதற்காக அல்ல! நம்மை நாமே பரிசீலித்து கொள்வதற்கு… அந்த குணங்களைப் பற்றி கூறியுள்ள செய்யுட்களை படித்தறிய வேண்டும். மூர்க்கனுடைய குணங்கள் நம்மிடம் இருந்தால் அவற்றை நீக்கிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்! நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு கூறுகையில் மூர்க்கனுடைய இயல்பாக ஐந்து குணங்களைக் கூறுகிறார். மூர்க்கன் தனக்கென்று சில வழிமுறைகளைக் கொண்டிருப்பான். மேலும் அநேக விதங்களாக மூர்க்கனுடைய இயல்பு தென்பட்டாலும் சிலவற்றை இங்கே விவரிக்கிறார் சுபாஷிதக்காரர். இந்த ஐந்தும் மூர்க்கனிடம் பளிச்சென்று வெளிப்படும்.

முதலாவது இயல்பு கர்வம்! கர்வம் என்றால் தன்னை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்ற எண்ணம்! இந்த இயல்பு நல்லவர்களிடம் இருக்காது. முட்டாள்களிடம் ஏராளமாக இருக்கும். கொஞ்சம் எதையோ சற்று கற்றவுடனே தான் அனைத்தையும் அறிந்துவிட்டதாகவும் தன்னைவிட யாரும் உயர்ந்தவர் இல்லை என்றும் நினைத்துக் கொள்வான்.

ஒரு முறை சிந்தித்துப் பார்த்தால் எல்லையில்லாத இந்த படைப்பின் எல்லையில்லாத காலவெளியில் எத்தனையோ பேர் உத்தமர்கள் உள்ளார்கள். நேற்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். நாளையும் இருப்பார்கள். நம்முடனேயே படைப்பு ஆரம்பமாகவில்லை. ஸ்ருஷ்டி எல்லையில்லாதது. எத்தனையோ பேர் உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். நமக்குள்ள சிறிதளவு செல்வத்தையோ, கல்வி அறிவையோ, வேறு ஏதோ ஒன்றையோ பார்த்துக்கொண்டு அவற்றால் இறுமாப்புக் கொள்வதென்பது தகுந்த செயல் அல்ல! அவ்வாறு அகந்தை கொள்ளும் தீய குணம் யாரிடம் இருக்குமோ அவரை மூர்க்கன் என்பர்! எனவே முதல் லட்சணமாக ‘கர்வம்’ என்றனர். இந்த கர்வத்திற்கு பல நிறங்கள் உண்டு. அதனை இறுமாப்பு, அகம்பாவம், அகந்தை, மமதை… போன்ற பெயர்களில் அழைப்பர்.

அடுத்தது, “துர்வசனம் முகே!” – மூர்க்கர்களின் வாயிலிருந்து எப்போதும் தீய சொற்களே வெளிப்படும். ‘துர்வசனம்’ என்பது பலவிதம். ஒன்று, தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது. அதுவும் தீய சொல்லின் கீழ்தான் வரும். பிறர் மதிக்கிறார்களோ இல்லையோ சிலர் தம் பெருமையைத் தாமே தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.

இரண்டாவது ‘துர்வசனம்’ என்னவென்றால் பிறரை நிந்திப்பது. அறிவாளிகள் என்று கூறிக் கொள்பவர்கள் கூட தம் பெருமையைப் பீற்றிக் கொண்டு பிறரை அவமானப்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களை ‘மூர்க்க பண்டிதர்கள்’ என்றுதான் அழைக்க வேண்டும். அவர்களை நல்ல மனிதர்கள் என்று அழைப்பதற்கில்லை. அதனால்தான் ‘துர்வசனே முகே’ என்றார். முட்டாள்களின் வாயிலிருந்து எப்போதுமே தீய சொற்களே வெளிவரும்.

துர்வசனங்கள் இரண்டைப் பார்த்தோம். ஒன்று ஆத்ம ஸ்துதி. இரண்டாவது பர நிந்தை.
மூன்றாவது, சாஸ்திரங்களுக்கு விரோதமாகப் பேசுவது. நான்காவது, ஆபாசப் பேச்சு. இவை அனைத்தும் மூர்க்கனின் வாயிலிருந்து வெளிப்படும் துர்வசனங்கள்.

அடுத்தது ‘விரோதி’. அதாவது பகை. சிலருக்கு யாரையுமே பிடிக்காது! எப்போதும் சரி யாரைப் பற்றி பேச்சு வந்தாலும், “அவனா? அவனைப் பற்றி பேசாதீர்கள்! அவன் ரொம்ப மோசம்!” என்பார்கள். எல்லோரிடமும் கெடுதலையே பார்க்கும் குணம் இருப்பதால் மூர்க்கனுக்கு அனைவரும் பகைவர்களே! அதிக எண்ணிக்கையில் பகைவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவன் மூர்க்கன்தான். சந்தேகம் இல்லை.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிறரிடம் நட்போ பகையோ நம் நடத்தையின் மேலே ஆதாரப்பட்டுள்ளது. எனவே நம் நடவடிக்கைகளில் நட்பும், அன்பும் இருந்தால் எதிரிகள் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள்.

தர்மபுத்திரனை ‘அஜாதசத்ரு’ என்பார்கள். அவனுக்கு எதிரிகளே இல்லையாம். ஆனால் அவனிடமும் விரோதம் பாராட்டினான் துரியோதனன். மொத்தம் பதினோரு அக்ஷௌணி படை வீரர்களும் நூறு சகோதரர்களும் தர்மபுத்திரருக்கு எதிரிகளாக இருக்கையில் தர்மபுத்திரனை அஜாதசத்ரு என்று எவ்வாறு அழைக்கலாம்? அவர்கள் தர்மபுத்திரனை விரோதியாகப் பார்த்தார்களே தவிர தர்மபுத்திரன் அவர்களை எதிரிகளாக நினைக்கவில்லை. இதனை அறிய வேண்டும்.

பிறரிடம் விரோத மனப்பான்மை இல்லாமல் இருப்பது ஸத்புருஷர்களின் இயல்பு. பிறரிடம் பகை பாராட்டாடுவது மூர்க்கர்களின் இயல்பு. இதனை மூன்றாவது குணமாகக் கூறுகிறார்.

இனி நான்காவது “விஷவாதி”. இதுவும் பேச்சு பற்றியதே! முதலில் துர்வசனம் பற்றி பார்த்தோம். இப்போது விஷவாதி என்றால் என்னவென்று பார்ப்போம். விஷம் நிரம்பிய சொற்களைப் பேசுதல். துர்வசனத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. விஷவாதி என்பது இரு வகைகள். ஒன்று பௌருஷமாகப் பேசுவது. இரண்டாவது பிறரிடம் கெடுதலாக விவாதிப்பது. தர்மத்திற்குப் புறம்பாகவும் பிறர் மனதை நோகடிக்கும் விதமாகவும் விவாதிப்பார்கள் சிலர். அவர்களைப் பார்த்தாலே பயம் ஏற்படும்! ஏனென்றால் விவாதிப்பது என்ற பெயரில் பிறரை நிந்திப்பதும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதுபோல் பிடிவாதம் பிடிப்பதும், தான் கூறியதே சரி என்று நிரூபிப்பதற்கு முயலுவதும் செய்வார்கள். இப்படிப்பட்ட குதர்க்கப் பேச்சு, கெடுதலாக விவாதிப்பது, பௌருஷப் பேச்சு இவை அனைத்தும் விஷவாதி என்ற சொல்லின் கீழ்வரும்.

இனி அடுத்து, “கருத்யாக்ருத்யம் ந மன்யதே” – எது செய்யக் கூடியது? எது செய்யக்கூடாதது? என்ற பண்பாடு துளியும் அவர்களிடம் காணப்படாது. அதாவது செய்ய வேண்டியவற்றைச் செய்யாமலிருப்பதும், செய்யக்கூடாதவற்றை செய்வதும் அவர்களின் இயல்பாக இருக்கும். இங்கித ஞானமற்று இருப்பார்கள். அவர்களை மூர்க்கர் என்பர். அதனால்தான் அவர்கள் ஓரொருமுறை தீயவற்றை நல்லவை போல் செய்து வருவார்கள். நல்லவற்றைச் செய்யாமல் விடுவார்கள். இவை அனைத்தையும் “கருத்யாக்ருத்ய” விவேகமற்ற செயல்களாக பெரியோர் கூறுவர்.

மூர்க்கனிடம் இந்த குணங்கள் இருக்கும். அதனால் மனிதன் தன்னைத்தானே பரிசீலித்து கொள்ள வேண்டும். இத்தகு குணங்கள் நம்மிடம் இல்லாமல் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். பிறரிடம் இந்த குணங்கள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்தால் நாமும் மூர்க்கனாகவே ஆவோம். அதனால் பிறரிடம் இந்த லட்சணங்கள் உள்ளனவா இல்லையா என்று ஆலோசிக்காமல் நம்மில் இவை உள்ளனவா என்று கவனித்துப் பார்த்து, ஒருவேளை இருந்தால் அவற்றை நீக்கிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

இங்கு மூர்க்க குணங்கள் பற்றி கூறியபடியே அவற்றிற்கு எதிரானவை அனைத்தும் நல்ல மனிதர்களின் இயல்புகள் என்று தெரிவிப்பதாக அறிய வேண்டும். இவ்வாறு இருக்க கூடாது என்றால் பொருள் என்ன? எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறுவதே! எனவே இவை மூர்க்கர்களின் குணங்கள் என்று கூறும் போதே இவ்வாறு இல்லாமல் இருப்பது ஸத்புருஷர்களின் லட்சணம் என்பது உடனே தெரிந்து போகிறது!

இதுபோன்ற செய்யுள்களை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்தால் அவர்களின் சுய பரிசீலனைக்கு வாய்ப்பு கிடைக்கும். நல்ல தனி மனித நடத்தையோடு உருவாகுவார்கள்.

நன்னடத்தையை போதிக்கும் கல்வி இன்று குறைந்து வருகிறது. வெறும் இயந்திரங்களாக பொருளாதார உயர்வுக்கு மட்டுமே பயன்படும் கல்வியைக் கற்றுத் தருகிறோமே தவிர பண்பாட்டினை போதிக்கும் கல்வியை கற்றுத் தருவதில்லை. இது போன்ற சுலோகங்களை சிறுவயதிலிருந்தே கற்றுத் தந்தால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக விளங்கும்.

இது போன்ற சுலோகங்களின் வழியே பாரத நாட்டின் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பினை பெற்றோரும் ஆசிரியர்களும் ஏற்க வேண்டும் என்பது நம் விண்ணப்பம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்Recent Articles

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வாபஸ் பெற தமிழிசை முடிவு?

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!

அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.

Related Stories