அம்மா இட்லி சாப்டாங்க என்று அன்று சொன்ன பொன்னையனும் இன்று அந்தர் பல்டி அடித்துள்ளார். முன்னதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அம்மா இட்லி சாப்டாங்கன்னு சொன்னதெல்லாம் பொய்… எங்கள மன்னிச்சிடுங்கன்னு கையத் தூக்கி தொண்டர்களைப் பார்த்து கும்பிட்டார்.
இப்போது பொன்னையனும் அந்த வழியில் வந்துள்ளார். இன்று தந்தி டிவி.,க்கு அளித்த பேட்டியில் பொன்னையன் இதனைக் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் நடந்தது என்னவென்று எங்களுக்கு தெரியாது என்று கூறிய பொன்னையன், சசிகலா குடும்பத்தினர் சொல்லச் சொன்னதையே நாங்கள் மக்களிடம் கூறினோம் என்றார். மேலும், சசிகலா குடும்பத்தைத் தவிர அமைச்சர்கள் யாரையுமே ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறிய பொன்னையன், இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியது சசிகலா குடும்பம் தானே தவிர நாங்கள் அல்ல என்றார்.
இப்போது ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரம் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்க, திண்டுக்கல் சீனிவாசனைத் தொடர்ந்து பொன்னையனும் இவ்வாறு கூறியிருப்பது தினகரன் தரப்பை மேலும் உசுப்பேற்றியிருக்கிறது.



