சென்னை:
”சிசிடிவி பதிவுகள் என்னிடம் இருப்பதாக நான் சொல்லவில்லை, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ பதிவு தான் என்னிடம் உள்ளது,” என தினகரன் கூறினார்.
சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோ காட்சியைத் தான் நான் என்னிடம் இருக்கிறது என்று முன்னர் குறிப்பிட்டேன். அந்த வீடியோவை எடுத்தது சசிகலாதான். நீதி விசாரணையின் போது அந்த வீடியோவை ஒப்படைக்கலாம் என சசிகலா என்னிடம் கூறினார். ஜெயலலிதா நைட்டி அணிந்து இருந்ததால் அந்த வீடியோவை இதுவரை வெளியிடவில்லை. சிசிடிவி பதிவுகள் என்னிடம் இருப்பதாக நான் சொல்லவில்லை.
அமைச்சர்கள் பொதுக்குழுவை கூட்ட, அ.தி.மு.க., சட்ட விதிகளில் இடம் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா உள்ளார். துணை பொதுச் செயலாளராக நான் உள்ளேன். கட்சியின் விதிகளின்படி பொதுக்குழுவை, பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால், பொதுச் செயலாளர் கூட்டுவார். சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நடந்த பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கூறியுள்ளது.
குப்பை பொறுக்குபவர்களை வைத்து சசிகலாவின் படத்தை கிழித்தவர்கள் தி.மு.க.,வினர். தி.மு.க.,வினர் சதி செயலை முறியடிக்கவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா படத்தை பயன்படுத்தவில்லை என்று கூறினார்.



