சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை தமிழக அரசு நியமித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 2016 செப். 22ஆம் தேதி சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், டிச., 5ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறி வந்தனர். அதிமுக.,வின் இரு அணிகளும் இணைந்த பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது விசாரணை ஆணையம் ஒன்றை, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமியை தலைவராகக் கொண்டு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
ஓபிஎஸ்., ஈபிஎஸ் இரு அணிகளும் இணைக்கப்பட்ட போது, ஓபிஎஸ் தரப்பு இதனை ஒரு நிபந்தனையாகவே முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.



