ருஷி வாக்கியம் (107) – பதஞ்சலி முனிவர்


மகாத்மாக்களும் சாஸ்திர அறிஞர்களும் பாரத தேச கலாச்சாரத்தை செழுமையாக்கியுள்ளதைக் காண்கிறோம். அவர்களுள் யாரைப் பற்றி படித்தாலும் ஆழ்ந்த பரிசோதனை செய்யக் கூடிய அளவு ஞான விஷயங்கள் ஏராளமாக உள்ளதை அறிகிறோம். அதன் மூலம் நம் அறிவும் விசாலமாகிறது. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் பதஞ்சலி முனிவர்.

பதஞ்சலி முனிவர் பற்றி அறியாத ஹிந்துக்களே இருக்க மாட்டார்கள் எனலாம். அவர் பெயரையாவது கேள்விப்பட்டிருப்பார்கள். அவர் அளித்துள்ள ஞான தானமும், யோக தானமும் சாமானியமானதல்ல! யோக சாஸ்திரம் என்ற உடனே பலருக்கும் பதஞ்சலி முனிவரின் நினைவு வருவது இயல்பு.

பதஞ்சலி யோக சாஸ்திரம் அஷ்டாங்க நிஷ்டைகளோடு கூடியது. அதாவது எட்டு வித அங்கங்களைக் கொண்டது. அத்தனை சிறப்பான யோக வித்யையை அவர் நமக்கு அளித்துள்ளார். பதஞ்சலி முனிவர் யோக வித்யையை புதிதாக கண்டுபிடிக்கவில்லை. வேதங்கள் முதலானவற்றில் குறிப்பிட்டுள்ள யோக வித்யையை சூத்திரங்களாக்கி ஒரு அழகான நூல் வடிவத்தில் நமக்கு அளித்துள்ளார்.

பதஞ்சலி பற்றி கூறும்போது அவர் ஆதிசேஷனின் அம்சாவதாரம் என்று புராணங்கள் விவரிக்கின்றன. பாரத தேச மக்களின் நம்பிக்கை கூட அதுவே! ஆதிசேஷன் நாக இனத்தைச் சேர்ந்த தெய்வீக சர்ப்பம்! சில மகரிஷிகள் மற்றும் யோகிகளின் கூற்றுப்படி நாகங்கள் மனிதர்களை விட உயர்ந்த தெய்வீக சக்தி கொண்ட தேவ ஜாதியைச் சேர்ந்தவை! அத்தகைய தேவ இனத்தை சேர்ந்த ஆதிசேஷன் ஆயிரம் தலைகளோடு கூடியவர். அதாவது ஆயிரம் தலைகளின் ஞானம் கொண்டவர் என்று பொருள். எல்லையற்ற ஞானச் செல்வம் பொருந்தியவர் பதஞ்சலி என்பது இதன் பொருள்.

பதஞ்சலி படைத்த நூல்கள் பல நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுள் யோக சாஸ்திரம், வியாகரண சாஸ்திரம் மற்றும் வைத்திய சாஸ்திரம் முக்கியமானவை. இப்போது கூட வியாகரணம் அதாவது இலக்கணம் மற்றும் மொழியியல் கல்வி கற்பவர்கள் முதலில் பதஞ்சலியை வணங்கியபின் தொடங்குவார்கள். பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ என்ற நூலுக்கு ‘மகாபாஷ்யம்’ எழுதியவர் பதஞ்சலி. பதஞ்சலியிடம் மகரிஷிகள் கல்வி கற்றார்கள் என்று சில புராண நூல்கள் தெரிவிக்கின்றன.

வைத்திய விஞ்ஞானத்தை எழுதியவர்களுள் வாக்படர், சரகர், சுஸ்ருதர் போன்ற பல மகாத்மாக்கள் புண்ணிய பாரத பூமியில் பிறந்துள்ளார்கள். அதேபோல் பதஞ்சலியும் பலவித மருத்துவ அம்சங்களைக் கொண்ட வைத்திய சாஸ்திரத்தை அளித்துள்ளார். யோகம், இலக்கணம், மருத்துவம் இம்மூன்றும் பதஞ்சலி எழுதிய முக்கியமான நூல்கள்.

“யோகன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலீம் ப்ராஞ்சலி ரானதோஸ்மி !”

இது பதஞ்சலி மீதான புகழ்பெற்ற சுலோகம். “யோக சாஸ்திரத்தின் மூலம் சித்தத்தில் உள்ள மாசுகளை நீக்கி, வியாகரண சாஸ்திரத்தின் மூலம் வாக்கு தொடர்பான மலினங்களை நீக்கி, வைத்திய சாஸ்திரத்தில் மூலம் சரீரத்தின் நோய்களை நீக்கும் முனிவர்களில் உத்தமமான பதஞ்சலிக்கு நமஸ்காரம்!” என்பது இந்த செய்யுளின் பொருள்.

இந்த ஒரு செய்யுளிலேயே மனிதனின் கடமையை தெரிவித்துவிட்டார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ‘முக்கரணங்கள்’ உள்ளன. ஒன்று உடல். இரண்டாவது மனம். மூன்றாவது வாக்கு. த்ரிகரணங்களும் சுத்தமாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமானவன் என்று பொருள். இவற்றுள் எந்த ஒன்றில் தூய்மை குறைந்தாலும் மனிதனுக்கு உடல்நிலை கெட்டுப் போகும். உடலில் சேரும் மலினங்களால் உடல்நிலைக் கோளாறு ஏற்படுகிறது.

வாக்கில் கூட மலினம் இருக்கக் கூடாது. அதாவது பேசும் பேச்சு பண்பாட்டோடு கூடியதாக இருக்க வேண்டும். பேசும் சக்தியை அனைவருக்கும் இறைவன் அளித்திருந்தாலும் மனிதன் முயற்சி செய்து அந்த சக்தியை சீர்திருத்தி பண்பாடு உடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு உபயோகப்படும் நூலே வியாகரண சாஸ்திரம். வாக்கினை தூய்மைப்படுத்துவதற்காக பதஞ்சலி இந்த இலக்கண நூலை அருளியுள்ளார்.

யோக சாஸ்திரம் மனத்தின் மலத்தை நீக்குவதற்காக அளித்துள்ளார். “யோக: சித்த வ்ருத்தி நிரோத:” என்று விளக்கமளித்துள்ளார் பதஞ்சலி. அதாவது மனதில் பலவிதமான சிந்தனைகள் வந்து மனிதனை கலவரப்படுத்துகிறது. அவ்வாறின்றி மனதிற்குத் தெளிவை அளித்து அமைதிப்படுத்தினால் அதனைச் “சாந்த சித்தம்” என்பார்கள். அவ்விதம் மனதை அமைதியடையச் செய்யும் சக்தி யோகத்திற்கு உள்ளது. தற்போது யோகாப்பியாசத்தால் பலவிதமான மானசீக வியாதிகளும் மன அழுத்தங்களும் நீங்கிவிடும் என்று அனைவரும் அறிந்துள்ளார்கள்.

“யோகேன சித்தஸ்ய…” யோக சாஸ்திரத்தின் மூலம் மனதைக் கட்டுப்படுத்தி அதில் உள்ள மலினங்களை நீக்குகிறார். வியாகரண சாஸ்திரம் மூலம் வாக்கினை நிர்மலமாக்குகிறார். இன்னும் “வைத்ய கேன…” வைத்திய சாஸ்திரத்தால் உடலில் உள்ள குறைகளை நீக்கி உடலை உறுதியாக்குகிறார்.

இவ்விதம் முக்கரணங்களும் குறைபாடின்றி இருந்தால் மனிதனின் ஆலோசனைகள் நல்லவிதமாக இருக்கும். உயர்ந்த விஷயங்களை அறியக் கூடியவனாக இருப்பான். அதே போல் உயர்ந்த விஷயங்களை வெளிப்படுத்தக் கூடியவனாகவும் இருப்பான். அதனால் மனிதன் தன் வாழ்க்கையை உய்வித்துக்கொண்டு உயர்ந்த விஷயங்களை பற்றி எடுத்துக்கூற வேண்டுமென்றால் இம்மூன்றும் நன்றாக இருக்க வேண்டும்.

உடல், மனம், வாக்கு இம்மூன்றும் நல்லவிதமாக செயல்பட வேண்டும் என்றால் மகரிஷிகள் அளித்துள்ள நூல்களின் மூலம் சிறந்த வாழ்வியல் முறையைக் கடைப்பிடித்து இம்மூன்றையும் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். இதனையே நாம் “திரிகரணசுத்தி” என்கிறோம். முக்கரணங்களும் தூய்மையாக இருப்பதோடு உடல் புஷ்டியாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த மூன்று கருவிகாளாலும் நாம் எந்த வேலையையும் சாதிக்க முடியும். உயர்ந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

இம்மூன்றின் தூய்மையால்தான் பாரதிய மகரிஷிகள் பிறரால் சாதிக்க இயலாத விஞ்ஞானங்களை படைத்தளிக்க முடிந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்களைப் பற்றி நம் நூல்களில் படிக்கிறோம். சில யோகிகளின் வாழ்க்கை வரலாறு மூலம் ஆயிரக்கணக்கான வயது உள்ளவர்களை அறிந்துள்ளோம். எதன் மூலம் அதனை அவர்கள் சாதித்தார்கள் என்றால் இம்மூன்று வித சாஸ்திரங்களையும் படித்ததோடு வாழ்க்கை நடைமுறையிலும் கடைபிடித்ததால் தீர்க்காயுள் பெற்று விளங்கினார்கள், விளங்குகிறார்கள்!

அப்படிப்பட்ட மூன்று அரிதான விஞ்ஞான சாஸ்திரங்களை நமக்களித்த பதஞ்சலியை வணங்குவோம்! அந்த விஞ்ஞான சாத்திரங்களின் உதவியோடு எதிர்கால தலைமுறை முன்னேற்றத்தை சாதிக்க வேண்டும் என்று விரும்புவோம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...