”மறுபிறவி உண்டா?”–வெளிநாட்டு அன்பர் பெரியவாளிடம். (‘மறுபிறவிக் கொள்கை,
கர்மா தியரியை ஆதாரமாகக் கொண்டது. நாளை நீ நன்றாகஇருக்கவேண்டுமானால், இன்று நீ
நல்லவைகளைச் செய்து நல்லவனாக நடக்க வேண்டும் என்கிற உண்மையை, அது சொல்கிறது.
இந்தப் பிறவியில் ஒருவனை நல்லவனாக வாழ வைக்கக்கூடிய கருத்து என்பது
போற்றத்தக்கதுதானே?” சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்தார் பெரியவர்.)
மே 20,2017,-தினமலர்-மறு பிறவி உண்டா?-திருப்பூர் கிருஷ்ணன்.
ஒரு வெளிநாட்டு அன்பர், மகாபெரியவர் முன் பவ்வியமாக அமர்ந்திருந்தார்.
பெரியவரின் ஒளிதுலங்கும் திருமுகம், அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவருக்கு
நெடுங்காலமாக ஓர் ஆன்மிக சந்தேகம். யாரிடம் கேட்டு விளக்கம் பெறுவது என
யோசித்துக் கொண்டிருந்தார். பெரியவரைப் பார்த்ததும், இவரே தம் சந்தேகத்தைத்
தீர்த்து வைக்கக்கூடியவர் என்று தோன்றியது.
பெரியவர் அவரிடம், ”ஏதோ கேட்க விரும்புகிறீர்கள் போலிருக்கிறதே?” என்றார்.
வந்தவர் மனதில் மனிதர்களுக்கு மறுபிறவி உண்டா என்பதில் சந்தேகம். அவரது மதம்
மறுபிறவி பற்றிச் சொல்லவில்லை. அந்தந்த பிறவியில் செய்த நல்வினை,
தீவினைக்கேற்ப இறப்பிற்கு பிறகு இறைவன் தீர்ப்புத் தருகிறான் என்பது அவர்
மதத்தின் விளக்கம். கடவுளைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத புத்தர் கூட,
மறுபிறவிக் கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்து மதம் அவரவரின் நல்வினை,
தீவினைக்கேற்ப மறுபிறவி உண்டு என்று அறுதியிட்டுக் கூறுகிறது.
‘உண்மையில் மறுபிறவி உண்டா?’
கேள்வியைக் கேட்டதும், பெரியவர் முகத்தில் ஒரு தெய்வீகப் புன்முறுவல்
தோன்றியது.
‘அதிருக்கட்டும். நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டுமே? இன்று மாலைக்குள்
காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறீர்களா?
அங்கு இன்று பிறந்துள்ள குழந்தைகளின் விவரங்களைச் சேகரித்து, எடுத்து
வாருங்கள். நாம் மாலையில் பேசுவோம்!”
பெரியவர் ஆசி வழங்கிவிட்டு மடத்தின் உள்ளே சென்று விட்டார். வந்தவருக்கு
ஒன்றும் புரியவில்லை. மறுபிறவி பற்றி கேட்டால் மகப்பேறு மருத்துவமனைக்குப் போ
என்கிறாரே? அவர் சொல்லைத் தட்டியதாக இருக்கக் கூடாது. சரி; போவோம்.
அவர் மகப்பேறு மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அன்று பிறந்த
குழந்தைகள் பற்றிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டு மாலையில் மடத்திற்குத்
திரும்பினார்.
பெரியவர் அவரிடம், ”மருத்துவமனையில் என்ன பார்த்தீர்கள்?”
”நிறைய குழந்தைகளைப் பார்த்தேன்.”
”அவை ஒன்றுபோல் இருந்தனவா?”
”இல்லையில்லை. பல நிறங்கள். பல ஜாடைகள். வித்தியாசமாகத் தான் இருந்தன.”
”பிறந்த குழந்தைகளில் ஏன் இத்தனை மாறுபாடுகள்? கருணைக் கடலான இறைவன் எல்லோர்
மேலும் கருணையுள்ளவன் தானே? அப்படியிருக்க ஏன் ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொரு
விதமாகப் படைக்க வேண்டும்? ஒரே பிறவி என்றால் இறைவன் எல்லோரையும் ஒரே
மாதிரிதானே படைப்பார்? இந்த வேறுபாடு ஏன் வருகிறது என இந்து மதம் யோசித்தது.
இது தான் முற்பிறவியின் பலன் என்கிறது அது. இந்தக் கருத்தால் ஒரு பெரிய
நன்மையும் உண்டு..”சொல்லிவிட்டு, அந்த அன்பரை தீட்சண்யமாகப் பார்த்த பெரியவர்
பேச்சைத் தொடர்ந்தார்.
”மறுபிறவிக் கொள்கை, கர்மா தியரியை ஆதாரமாகக் கொண்டது. நாளை நீ
நன்றாகஇருக்கவேண்டுமானால், இன்று நீ நல்லவைகளைச் செய்து நல்லவனாக நடக்க
வேண்டும் என்கிற உண்மையை, அது சொல்கிறது. இந்தப் பிறவியில் ஒருவனை நல்லவனாக
வாழ வைக்கக்கூடிய கருத்து என்பது போற்றத்தக்கதுதானே?” சொல்லிவிட்டுக்
கலகலவெனச் சிரித்தார் பெரியவர்.
”மறுபிறவி பற்றி இப்படி ஒரு அருமையான விளக்கத்தை நான் கேட்டதில்லை! என்
சந்தேகமெல்லாம் தீர்ந்தது!” என்று சொல்லி விடைபெற்றார் அந்த அன்பர்



