
பெரியவா சொன்ன
விஷ்ணு புராணக் கதை
விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு சம்பவத்தைப் பற்றிப் பெரியவா தமக்கே உரிய பாணியில் விலாவாரியாக விளக்கி இருக்கிறார். இது, ‘அறிவுக்கும் அடைக்கும் தாழ் இல்லை’ என்ற தலைப்பில் தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. ரா. கணபதி அண்ணாவுடன் நான் இருந்த காலத்தில் வெளியான நூல்களில் இதுவும் ஒன்று. அப்போதைய நாட்களில் இந்தக் கதையை இரண்டு தடவை படித்தேன். அதன் தாக்கம் இப்போதும் மனதில் இருக்கிறது. இருந்தாலும், கதையில் வரும் பல பெயர்கள் மறந்து விட்டன. இதனால், சில வாரங்கள் முன்பு மீண்டும் படித்துப் பார்த்தேன்.
‘கதை’ என்ற சொல்லை ‘புனைவு’ என்ற பொருளிலேயே நாம் தற்காலத்தில் பயன்படுத்தி வருகிறோம். அதாவது, புனையப்பட்ட அல்லது, கற்பனையாக எழுதப்பட்ட விஷயங்கள்.
பெரியவா கூட இந்தப் புராண சம்பவத்தை ‘கதை’ என்றுதான் குறிப்பிடுகிறார்.
ஆனால், நாம் தற்காலத்தில் பயன்படுத்தும் பொருளில் பெரியவா அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை. பெரியவா பயன்படுத்தியுள்ள ‘கதை’ என்ற சொல் ‘விளக்குவது’, ‘சொல்லுவது’ முதலிய பொருளைத் தருவது. இது நமது வாய்மொழிப் பாரம்பரியத்தை அடியொற்றியது. இதில் கற்பனை என்ற பொருள் சிறிதும் இல்லை. சொல்லப்போனால், நமது பாரம்பரியத்தில் ‘புராணம்’ என்ற சொல் ‘வரலாறு’ என்ற பொருளையும், ‘இதிஹாசம்’ என்ற சொல் ‘இவ்வாறு நடந்தது’ (வரலாறு என்பதையே இதுவும் குறிக்கிறது.) என்ற பொருளையும் தருபவை. ‘புராணம்’ என்பது ‘இறந்த காலத்துக்கு முற்பட்ட கால’த்தைச் சேர்ந்தது என்றும், ‘இதிஹாஸம்’ என்பது ‘இறந்த கால’த்தைச் சேர்ந்தது என்றும் கொள்ளலாம். (ஸம்ஸ்கிருதத்தில் இறந்த காலம், இறந்த காலத்துக்கு முற்பட்ட காலம் ஆகிய இரண்டு இறந்த காலங்கள் உண்டு.) இதிஹாஸங்களை எழுதியவர்கள் (வால்மீகி, வியாசர்) அவற்றின் ‘ஐவிட்னெஸ்’ ஆகவும் இருப்பதால், அவை இரண்டும் ‘ஐவிட்னஸ் அக்கௌன்ட்’. எனவேதான் இந்த இரண்டு புராணங்கள் மட்டும் இதிஹாஸம் என்னும் விசேஷப் பெயரால் அழைக்கப்படுகின்றன.
‘கதை சொல்லி, கதை சொல்லியே வளர்ந்தது நம் நாடு’ என்று எனது நண்பர் ஒருவர் கேலியாகக் குறிப்பிடுவார். தாத்தா-பாட்டிகள் சொல்லும் கதைகளில் இருந்து, உபன்யாசங்கள் உட்பட, வேதாந்தப் படிப்பு வரை நமது பாரம்பரியத்தில் கதைகள் நீக்கமற நிறைந்திருந்தன. இன்னமும்கூட நமது குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் கதைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
எனவே, நான் ரொம்பவே அனுபவித்துப் படித்த இந்தக் கதையை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று இயல்பாகவே எனக்குத் தோன்றியது. அதன் விளைவாகவே இந்தப் பதிவு.
இனி கதைக்குள் போகலாம்.
மிதிலை ராஜவம்சத்தைச் சேர்ந்த மன்னர்களுக்கு ஜனகர் என்பது குலப் பெயர். இதுபோன்ற அநேக ஜனகர்களில் கேசித்வஜ ஜனகர், காண்டிக்ய ஜனகர் என்று இரண்டு பேர். அவர்கள் இருவரும் பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள், அதாவது, ஒண்ணு விட்ட அண்ணா தம்பியர். இரண்டு பேரும் தனித்தனி ராஜ்யங்களை ஆட்சி செய்து வந்தார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறையில் விசேஷ ஈடுபாடும் திறமையும் இருப்பது போல, காண்டிக்யருக்கு வேதத்தின் கர்ம காண்டத்திலும், கேசித்வஜருக்கு ஞான காண்டத்திலும் ஈடுபாடு.
இக-பர நன்மை என்று சொல்லப்படுவதில் இகம் அல்லது லௌகிக விஷயங்கள் சார்ந்தது கர்ம காண்டம். அதில் காண்டிக்யர் ஆழ்ந்த அறிவு படைத்தவராக இருந்தார். தர்ம வழியில் நின்று லௌகிக சுகங்களைத் துய்ப்பது, அதற்கான வாழ்க்கை முறைகள், இன்பத்துக்கு ஆதாரமா அமையும் விஷயங்கள், செல்வம் முதலானவற்றை இயற்கைச் சக்திகளிடம் வேண்டுவதற்கான வழிமுறைகள் முதலானவை கர்ம காண்டத்தில் அடங்கும். அதாவது, புலனின்பம் என்பது ஒதுக்கப்பட வேண்டியது அல்ல. மாறாக, சாஸ்திரம் விதித்த வழிகளில் அனுபவிக்கப்பட வேண்டியது.
ஞான காண்டம் என்பது பரம் அல்லது ப்ரம்ம ஞானம் குறித்தது. அதில் கேசித்வஜருக்கு அலாதியான ஈடுபாடும் படிப்பும் இருந்தன. ஆனாலும், சித்தத்தில் தெளிவு ஏற்பட்டால் மட்டுமே ஞான மார்க்கத்தில் பயணிக்க முடியும். அதுவரை ஞான வழி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே. ஆக, கர்ம மார்க்கம் தான் ஞான மார்க்கத்துக்கான முதல் படி. எனவே, கேசித்வஜரும் காண்டிக்யரைப் போலவே கர்ம காண்டம் விதிக்கும் வழிகளில் யாகம் முதலான கடமைகளையும், தார்மிகமாக ராஜ்ய பரிபாலனம் செய்வதையும் மேற்கொண்டு வந்தார். அதேநேரத்தில், அவரது கவனம் முழுதும் தனது சித்தத்தைச் சுத்தப்படுத்திக் கொள்வதிலேயே இருந்தது.
காண்டிக்யருக்கு ஞானத்தின் மீது அவ்வளவாக நாட்டம் ஏற்படவில்லை. அரசன் தர்ம வழி நிற்க வேண்டும், தனது ராஜ்ய எல்லைகளை விஸ்தரிக்கவும் வேண்டும் என்ற கருத்தில், அவர் போர்த்தொழிலில் ஈடுபடுகிறார். சகோதரரன கேசித்வஜரின் ராஜ்யத்தின்மீதும் படையெடுக்கிறார்.
கேசித்வஜரும் தர்ம வழியில் போரை எதிர்கொள்கிறார். இருவரும் சமவலிமை பெற்றவர்கள்தான். என்றாலும், கேசித்வஜர் தனது செயல்களைப் பற்று இல்லாமல் செய்வது வருபவர், அவற்றின் விளைவுகள் இறைவனுக்கே அர்ப்பணம் என்ற மனநிலையில் வாழ்ந்து வருபவர். இதனால், இவருக்குக் கூடுதல் மன ஒருமைப்பாடும் செயல்திறனும் அமைந்திருக்கின்றன. அதனால் போரில் இறுதி வெற்றியும் அவருக்கே கிடைத்தது. காண்டிக்யரின் ராஜ்யமும் அவர் வசமானது. தோல்வி அடைந்த காண்டிக்யர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் காட்டில் மறைந்து வாழத் தொடங்கினார். அவருக்கு நெருங்கிய சில அமைச்சர்களும் புரோகிதர்களும் அவருடன் கானகத்துக்கே சென்று விட்டனர்.
கேசித்வஜருக்குப் போரின் மீது நாட்டமில்லை. போர் குறித்த அச்சமும் இல்லை. அரசன் என்ற முறையில் தன்மீது திணிக்கப்பட்ட போரை எதிர்கொள்ள வேண்டியது தனது கடமை என்பதாலேயே போரில் ஈடுபட்டார். போரின் வெற்றி குறித்த பெருமிதமும் இல்லை. ராஜ்ய எல்லை விரிவடைந்தது குறித்த மகிழ்ச்சியும் இல்லை.
போர் என்ற புதிதாக முளைத்த கடமை முடிந்ததும், ராஜ்ய பரிபாலனம் என்னும் அன்றாடக் கடமைகளில் அவர் ஆழ்ந்து விட்டார். அனைத்தும் ஈசன் செயலே என்ற தத்துவத்தைத் தனது வாழ்வில் கடைப்பிடிப்பதுதான் அவரது ஒரே நோக்கமாக இருந்தது.
அரசனின் அன்றாடக் கடமைகளில் யாகங்களுக்கு முக்கிய இடம் உண்டு. கேசித்வஜரும் யாகங்களை மிகுந்த சிரத்தையுடன் செய்து வந்தார். ஒருமுறை பெரிய யாகம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். யாகம் நடைபெற்று வந்த சமயத்தில் யாகப்பசுவைப் புலி கொன்று விட்டது.
முளைத்தது திடீர்ச் சிக்கல்.
யாகத்தின் நிறைவு வரை அதில் சொரியப்படும் பால் ஒரே பசுவிடமிருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும். இப்போதோ, யாகம் நிறைவு பெறும் முன்பே பசு இறந்து விட்டது. இந்நிலையில் என்ன செய்வது?
யாகப்பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து பிராமணர்களிடமும் கேசித்வஜர் இந்தக் கேள்வியை முன்வைக்கிறார். ‘உரிய பரிகாரத்தைச் செய்த பின்னர் மட்டுமே யாகத்தை மீண்டும் தொடங்கலாம்’ என்பதுதான் அனைவரின் ஒருமித்த கருத்தாக இருந்தது. ஆனால், உரிய பரிகாரம் எது என்பது அவர்களில் ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
பரிகாரம் செய்யாமல் யாகத்தை மீண்டும் தொடங்க முடியாது. யாகம் நிறைவு பெறாமல் அவப்ருத ஸ்நானம் செய்ய முடியாது. அவப்ருத ஸ்நானம் செய்யாமல் யாகத்துக்கான உடைகளைக் களையவும் முடியாது, நோன்பை விடவும் முடியாது. இவற்றையெல்லாம் செய்யாமல் கேசித்வஜரால் தனது அன்றாடக் கடமைகளில் ஈடுபட முடியாது.
எனவே, பரிகாரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியதே கேசித்வஜரின் தலையாய பணி என்றாகி விட்டது. கடமையை முறையே செய்ய வேண்டும். ஆகவே, பரிகாரத்தைத் தேடி அலைய ஆரம்பித்தார் கேசித்வஜர். கசேரு என்ற பிராமணரிடம் போய் உதவி வேண்டினார். அவருக்குத் தெரியவில்லை. அவர் பார்க்கவரிடம் போகச் சொன்னார். பார்க்கவருக்கும் பரிகாரம் தெரியவில்லை. சுனகரைப் பார்ப்பதுதான் ஒரே வழி என்பது அவரது அறிவுரை. சுனகரிடம் சென்றார் கேசித்வஜர்.
சுனகருக்கும் உரிய பரிகாரம் தெரியவில்லை. இனி, இந்த ராஜ்யத்தில் உள்ள எவராலுமே தனது பிரச்சினைக்கு உரிய தீர்வைத் தர முடியாது என்பது மன்னருக்குப் புரிந்தது. இத்தகைய சூழ்நிலையில் சர்வ பிராயச்சித்தமான கோவிந்த நாமாவை உச்சாடனம் செய்துவிட்டு, யாகத்தைத் தொடர்வதுதான் ஒரே சாத்தியக்கூறு. ஆனாலும், உரிய பரிகாரத்தைத் தெரிந்து கொள்ள வழியே இல்லை என்னும்போதுதான் கோவிந்த நாமா பிராயச்சித்தத்தைப் பயன்படுத்த வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் உரிய பரிகாரம் தெரிந்தவர்களே இல்லையா என்ற கேள்வி கேசித்வஜரின் மனதில் ஓடியது. சுனகரும் அதையேதான் நினைத்தார். ஏனெனில், உரிய பரிகாரம் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவர்கள் வாழ்ந்த காலத்தில் கர்ம காண்டத்தில் கரை கண்ட ஒருவரை சுனகருக்குத் தெரியும். இப்படிப்பட்ட ஒருவர் இருக்கும்போது அவரைத் தொடர்பு கொண்டு உரிய அறிவைப் பெற்றுக்கொள்வதுதான் ஒரே வழி என்பது சுனகரின் கருத்து.
அவர் யார்?
‘அரசே, உனது சகோதரன் காண்டிக்யன்தான் இந்த விஷயத்தில் உரிய பரிகாரத்தைச் சொல்லுமளவு அறிவு உடையவன். அவனிடம் போய்த் தெரிந்து கொள். அவனை விட்டால் உனக்கு இந்த விஷயத்தைச் சொல்லித் தர வேறு ஒருவருமே இல்லை’ என்பது சுனகரின் அறிவுரை.
‘ஆகா, பரிகாரத்தைத் தெரிந்து கொள்ள முடியுமா? ரொம்ப மகிழ்ச்சி, ஐயா’ என்ற கேசித்வஜர் கானகம் நோக்கிச் செல்ல ஆயத்தமானார். காண்டிக்யர் வழி காட்டுவாரா, இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவருக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்பது புரிந்த பின்னர் அவரைத் தொடர்பு கொண்டு கேட்பதுதானே மன்னரின் கடமையாக இருக்க முடியும்?
சொல்லித் தருவதும் தராததும் காண்டிக்யர் விருப்பம். அதில் கேசித்வஜருக்குப் பங்கு எதுவும் இல்லை.
‘ஆனாலும் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.’ கேசித்வஜர் சிந்தித்தார். ‘நான் ஓர் அரசனாக எனது பரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்றால், காண்டிக்யன் என்னைப் பார்த்து அச்சப்பட்டு உயிருக்குப் பயந்து ஓடிவிடுவான். பின்னர் அவனிடமிருந்து நான் உரிய பரிகாரத்தை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்? அப்படி இல்லாமல் தனி ஆளாகக் காட்டுக்குச் சென்றால், என்மீது வன்மத்துடன் இருக்கும் அவன் என்னைக் கொன்றுவிடவும் முயற்சிக்கலாம்.’
இறுதியில் கேசித்வஜர், கடமையைச் செய்வதற்காக உயிர் துறந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்தார். தனி ஆளாகக் காண்டிக்யரைத் தேடிக் காட்டுக்குள் சென்றார். நீண்ட நேரத்துக்குப் பின்னர் அவரைப் பார்க்கவும் செய்தார்.
அதற்குள்ளாகவே காண்டிக்யரும் அவரைப் பார்த்து விட்டார். ‘நான் உயிருடன் வாழ்வது கூடப் பிடிக்காமல் என்னைக் கொல்வதற்காகக் காட்டுக்கே வந்து விட்டானா இவன்?’ என்ற ஆத்திரத்தில் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாரானார்.
இதை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த கேசித்வஜர், தொலைவில் இருந்தே சத்தமாக விஷயத்தை எடுத்துச் சொன்னார். ‘அப்பனே, காண்டிக்யா, நான் உன்னுடன் போர் புரிய வரவில்லை. என் உடைகளை நன்றாகப் பார். நான் யாக தீக்ஷையில் இருக்கிறேன். எனது யாகம் பாதியில் தடைப்பட்டு நின்று விட்டது. அதற்கான பரிகாரம் எனது ராஜ்யத்தில் ஒருவருக்கும் தெரியவில்லை. நீ தர்மசாஸ்திரத்தில் கரை கண்டவன் என்பதால் உன்னிடம் அறிவுப் பிச்சை கேட்டு வந்திருக்கிறேன்.’
ஆயுதம் ஏந்திய காண்டிக்யரின் கரங்கள் அனிச்சையாகக் கீழிறங்கின. ஆனால், அவருடன் இருந்த அமைச்சர்களுக்கும் புரோகிதர்களுக்கும் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகத் தோன்றியது. அவர்கள், கேசித்வஜர் தொலைவில் இருக்கும்போதே அவரைக் கொன்றுவிடுவது நல்லது என்று சொன்னார்கள். கேசித்வஜர் ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டிருக்கலாம். காண்டிக்யர் அவருக்கு அருகே சென்றதும் அவரைத் தாக்கிக் கொன்று விட்டால் என்ன செய்வது?
அவர்கள் கேள்வியில் இருந்த நியாயம் காண்டிக்யருக்குப் புரிந்தது.
அமைச்சர்களுக்கும் காண்டிக்யருக்கும் இடையே உரையாடல் நடப்பதைக் கவனித்த கேசித்வஜர், ‘காண்டிக்யா, நான் ஆயுதம் ஏதும் தரிக்காமல் நிராயுதபாணியாக வந்திருக்கிறேன். ஒன்று, நீ எனக்கு உரிய பரிகாரத்தைச் சொல்லிக் கொடுத்து எனது யாகம் நிறைவேற உதவி செய். அல்லது, ஆயுதம் தரிக்காத என்னை இந்த இடத்திலேயே கொன்று விடு’ என்று கூறினார்.
கேசித்வஜரை நோக்கி நடக்க ஆரம்பித்தார் காண்டிக்யர். இதுவரை எச்சரிக்கை செய்துவந்த அமைச்சர்கள் இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர். எதிரி தனியாளாக வந்திருக்கிறான். அவனைக் கொல்வதற்கு ஏற்ற சந்தர்ப்பம் இதுதான் என்பது அவர்கள் கருத்து. ‘இதோ ஒருவன் என்னிடம் அறிவுப் பிச்சை கேட்டு வந்திருக்கிறான். அவன் எனது எதிரிதான் என்றாலும், அவனுக்குத் தேவையான விஷயத்தைச் சொல்லிக் கொடுப்பது எனது கடமை. இதில் எனது உயிர் போனாலும் பரவாயில்லை. தானம் கேட்டு வந்திருப்பவனைக் கொன்றால் அதைவிடப் பாவம் வேறெதுவும் இல்லை’ என்று அவர்கள் எச்சரிக்கையையும் அறிவுரைகளையும் புறக்கணித்து கேசித்வஜரிடம் வந்தார் காண்டிக்யர்.
‘தர்ம சாஸ்திரத்தில் உன் சந்தேகம் என்ன என்று கேள். எனக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் உரிய சாஸ்திரக் கருத்தைச் சொல்லித் தருவேன்’ என்றார்.
கேசித்வஜர் தனது சூழ்நிலையை எடுத்துரைத்தார். வரிசையாகத் தான் மேற்கொண்ட முயற்சிகளையும் விவரித்தார். யாகப்பசு விஷயத்தில் செய்யப்பட வேண்டிய பரிகாரம் காண்டிக்யருக்குத் தெரிந்திருந்தது. அவர் அதைப் பொறுமையாக கேசித்வஜருக்கு எடுத்துரைத்தார். தனது கடமையைச் செவ்வனே செய்ய முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கப்பெற்ற கேசித்வஜர் அவருக்கு நன்றி கூறித் தனது நாட்டுக்குத் திரும்பினார்.
யாகம் நிறைவடைந்தது. அந்தணர்களுக்குக் குறைவில்லாமல் தக்ஷிணை வழங்கப்பட்டது. யாகம் என்றாலே தானம் அல்லவா? எனவே, தானங்களும் ஏராளமாக வழங்கப்பட்டன. மன்னர் அவப்ருத ஸ்நானம் செய்து யாக தீக்ஷையை நிறைவு செய்தார். அரச உடைகள் அணிந்து அன்றாட அலுவல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.
இருந்தாலும், யாகப்பணிகளில் ஏதோ ஒரு பெரிய குறை இருப்பதாக கேசித்வஜருக்குத் தோன்றியது. அது என்ன என்று மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தார். ஒருசில நாட்கள் கழிந்த பின்னரே அவருக்கு விஷயம் புரிந்தது. ‘தம்பி காண்டிக்யன் எனக்கு உரிய பரிகாரத்தை உபதேசிக்காமல் இருந்திருந்தால் என்னால் யாகத்தை நிறைவு செய்திருக்க முடியுமா? அவனுக்கு நான் குரு தக்ஷிணை கொடுக்க வேண்டாமா? அவ்வாறு நான் கொடுக்காவிட்டால் நான் கடமை தவறியவனாகி விடுவேனே! நான் நடத்திய யாகமும் முழுமை அடையாதே! சரி, அவனுக்கு என்ன தக்ஷிணை கொடுப்பது?’ என்று சிந்திக்க ஆரம்பித்தார். அதைக் காண்டிக்யரிடமே கேட்டு விடலாம் என்று அவருக்குத் தோன்றியது.
இந்த எண்ணம் வந்ததும் அவர் மீண்டும் காட்டுக்குக் கிளம்பினார்.

‘முன்பாவது பரவாயில்லை, நான் யாகத்துக்கான உடையை அணிந்திருந்தேன். இப்போது அரச உடைகளில் செல்கிறேன். எனவே, காண்டிக்யன் என்னைப் பார்த்துக் கூடுதலாகவே அச்சப்படுவான். மறைவில் இருந்து என்னைத் தாக்கவும் முற்படலாம். இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு என்ன தக்ஷிணை தேவை என்பதை அவனிடமே கேட்டறிந்து அதை அவனுக்குத் தந்தால்தான் யாகம் முழுமை பெறும். தனது ராஜ்யத்தைத் தருமாறு அவன் கேட்கலாம். அல்லது, என்னுடைய ராஜ்யத்தையும் சேர்த்தே கேட்கலாம். எதுவாக இருந்தாலும், அவன் கேட்கும் தக்ஷிணையைத் தருவது என் கடமை. காலத்தினால் செய்த உதவி – அதிலும், ஞானம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் செய்யப்பட்ட உதவி – ஈடு இணையற்றதல்லவா?’
வைராக்கியத்துடன் கானகத்துக்குள் பிரவேசித்தார், கேசித்வஜர்.
அவரது கணிப்பு சரியானதே. மீண்டும் காட்டுக்குள் அவரைப் பார்த்த காண்டிக்யர் குழப்பமடைந்தார். ‘இவனுக்குத் தேவைப்பட்ட விஷயத்தைத்தான் நான் சொல்லிக் கொடுத்து விட்டேனே. இந்நிலையில் இவன் மீண்டும் காட்டுக்கு வருவானேன்? ஆகா, தனது தேவை முடிந்ததும் என்னைக் கொன்று விடுவதற்காக வந்திருக்கிறான் போலும்!’ என்று எண்ணினார். எனவே, அவர் மீது அம்பு விடத் தயாரானார்.
கேசித்வஜர் அமைதியாகத் தனது தரப்பை விளக்கினார். ‘காண்டிக்யா, உனது உபகாரம் இல்லாமல் என்னால் யக்ஞத்தைப் பூர்த்தி செய்திருக்க முடியாதப்பா. உனக்கு பிரதி செய்ய வேண்டும், உரிய தக்ஷிணை தர வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன். உனக்குத் தேவையான தக்ஷிணையைக் கேள். அதைத் தருகிறேன்’ என்று கூறுகிறார்.
காண்டிக்யருக்கு ‘இவனை நம்புவதா, வேண்டாமா’ என்ற குழப்பம் ஏற்படுகிறது. அவரது நலனில் அக்கறை கொண்ட அவரது சகாக்களுக்கும் கேசித்வஜர் மீது ஐயமே ஏற்படுகிறது. இருந்தாலும், அவர் மீண்டும் மீண்டும் உறுதி கூறவே ஓரளவு அச்சம் விலகுகிறது. என்ன தக்ஷிணை கேட்கலாம் என்பது குறித்து அவர்கள் ஆலோசிக்கிறார்கள்.
‘போரில் ஜயித்தவனே நேரில் வந்து உனக்குத் தேவையானதைத் தருகிறேன் என்று கூறுகிறான். இப்போது அவனிடம் உனது ராஜ்யத்தைக் கேட்டுப் பெறுவதுதான் புத்திசாலித்தனம்’ என்பது சிலரது கருத்து. வேறுசிலருக்கோ, கேசித்வஜரின் ராஜ்யத்தையும் கேட்டுப் பெறலாம் என்று தோன்றுகிறது. காண்டிக்யர் இந்தக் கருத்துகள் குறித்து தீர்க்கமாகச் சிந்தித்துப் பார்த்தார். இறுதியாக அவர் இந்த இரண்டு கருத்துகளையும் நிராகரித்தார்.
‘நான் க்ஷத்ரியன். போரின் மூலம் ராஜ்யத்தை அடைவதுதான் எனக்கான தர்மம். ராஜ்யத்தை தானமாகவோ தக்ஷிணையாகவோ பெறுவது எனக்கான தர்மம் அல்ல. மேலும், நான் அரசனாக இருந்தேன். எனது ராஜ்யத்தைப் பரிபாலிக்கக்கூட எனக்கு அருகதை இல்லை. அதனால்தான் தோல்வி அடைந்து காட்டில் வாழ்ந்து வருகிறேன். இந்த லட்சணத்தில் நான் எனது ராஜ்யத்தை மீண்டும் பெறுவதாலோ, கேசித்வஜனின் ராஜ்யத்தையும் சேர்த்துப் பெறுவதாலோ எனக்கு என்ன நன்மை? எனது பிரஜைகளுக்கு என்ன நன்மை?’
‘ஆனால், கேசித்வஜனோ ஆத்ம தத்துவத்தில் உபதேசம் பெற்றவன். தானே வலிய வந்து எனக்குத் தேவையானதைத் தருகிறேன் என்று வாக்குத் தத்தம் செய்கிறான். எந்த நிதியத்தை விடப் பெரிய செல்வம் கிடையாதோ அத்தகைய ஆத்ம சம்பத்தை இவனிடம் நான் கேட்டுப் பெறுவதுதான் எனக்கு சிரேயஸ்’ என்று சொல்லி, அவர்களைப் புறக்கணித்து, கேசித்வஜரிடம் வருகிறார்.
[இந்த இடத்தில் காண்டிக்ய ஜனகருக்கும் அவரது நலம் விரும்பிகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல், கடோபநிஷத்தில் நசிகேதஸ்க்கும் யம தர்மராஜனுக்கும் இடையே நடக்கும் உரையாடலை நினைவுபடுத்துகிறது. ஆத்ம தத்துவத்துக்குப் பதிலாக ஏதேதோ சுக சௌக்கியங்களைத் தருவதாக யமன் ஆசை காட்ட, அவற்றின் நிலையாமையைச் சுட்டிக்காட்டும் நசிகேதஸ், ‘தவ ஏவ‘ (உன்னுடடையதாகவே இருக்கட்டும்.) என்று பதில் கூறுகிறான்.]
கேசித்வஜரும் தன் பங்குக்கு அதே கேள்வியைக் கேட்கிறார். ‘காண்டிக்யா, நன்கு ஆலோசனை செய்து பார். நீ என்னிடம் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு உனக்குக் கிடைத்துள்ளது. ராஜ்ய சம்பத்தைப் புறக்கணித்து ஆத்ம சம்பத்தை அடைவதில் உனக்கு நாட்டமா?‘ என்று கேட்கிறார்.
அதற்கு காண்டிக்யர், ‘சகோதரா, மேலான தக்ஷிணை கொடுத்தால் உனக்கு நிறைவு. தேவையானதை அடைந்தால் எனக்கும் நிறைவு. எதைவிட உயர்ந்த செல்வத்தை உன்னால் தரவே முடியாதோ, அத்தகைய மேலான ஆத்ம சம்பத்தை நான் யாசிக்கிறேன். இதைக் கொடுப்பதால் உனக்கு முழுமையான மனநிறைவு கிடைக்கும். எந்த நிலையை விட உயர்ந்த ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் இல்லையோ, அத்தகைய பிரம்ம ஞானத்தைப் பெற விரும்புகிறேன். இதைவிட எனக்கு நன்மை தருவது வேறு எதுவும் இல்லை‘ என்றார்.
ஞானத்தேட்டத்தைக் கைக்கொண்ட காண்டிக்யரை விவேகம் உள்ளவன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் பாராட்டி, தங்கள் குலத்துக்கே உயர்வு தேடித்தரும் குலநந்தனன் என்றும் சிலாகிக்கிறார், கேசித்வஜர்.
கேசித்வஜரிடம் முறையாக ஆத்ம தத்துவத்தைக் கேட்டறிந்த காண்டிக்யர், அவருக்கு உரிய உபசாரங்களைச் செய்து நமஸ்கரித்து வழியனுப்பி வைத்தார். பின்னர், லௌகிகப் பற்றுகளை அறவே விடுத்து, வைராக்கியத்தைக் கைக்கொண்டு ஜீவன்முக்தராக வாழ்ந்து ஞானப்பெருநிலையை எய்தினார் என்று கதை முடிகிறது.
பரிகாரத்தைத் தெரிந்து கொள்ள வழி இருக்கிறது என்பதை அறிந்ததுமே அந்த வழியை நாடிப் போகத் தயாராகும் கேசித்வஜர், தன்னிடம் தோற்று ஓடியவன் காண்டிக்யன் என்று அவரை இழிவாகக் கருதாமல் அவரிடம் அறிவுப்பிச்சை கேட்கும் பணிவு, உயிரே போனாலும் கடமை தவற மாட்டேன் என்ற வைராக்கியம், அறிவு தானம் கேட்டு வந்த எதிரியிடம் காண்டிக்யர் காட்டும் பரிவு, உயிரே போனாலும் தானம் கேட்டு வந்தவனுக்கு உபகாரம் செய்வேன் என்ற மனநிலை, பரிகாரத்தைச் சொல்லிக் கொடுத்த காண்டிக்யரை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றி அவருக்கு குரு தக்ஷிணை தர விழையும் கேசித்வஜர், பெரிதினும் பெரிதைக் கேட்டுப் பெற்று பிரம்மஞானத்தையே அடைந்து விட்ட காண்டிக்யர் – என்று இந்தக் கதை மூலம் நம் பண்பாட்டில் ஞானதானத்துக்குத் தரப்பட்டிருந்த உயரிய ஸ்தானத்தை விளக்கிப் பெரியவா தமது உபன்யாசத்தை நிறைவு செய்கிறார்.
மிக அழகிய ஒரு கருத்தை நான் அனுபவித்ததுடன் நில்லாமல் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
- கட்டுரை: சுபர்ண