“விஸ்வேஸ்வரர் உத்தரவு கொடுத்து விட்டார்”
(ஒரு நாய் கல்லடியிலிருந்து தப்பிக்க பெரியவா
செய்த உபாயம்)

தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு நதியில் நீராடிவிட்டு அதன் கரையில்
அமர்ந்து கொண்டு,ஜபம் – தியானம் செய்து
கொண்டிருந்தார்கள் பெரியவாள். தண்டம்
அருகிலேயே ஒரு பீடத்தின் மீது வைக்கப்-
பட்டிருந்தது.
ஆள் அரவம் இல்லாத இடம்.
தொண்டர்கள் கவனம் திசை
திரும்பியிருந்தபோது ஒரு நாய் வந்து
தண்டத்தை முகர்ந்து பார்த்து விட்டு
அப்பால் போய்விட்டது.
சிஷ்யர்கள் பதறிப் போய் ஆளுக்கு ஒரு
கல்லை எடுத்தார்கள் நாயை அடிப்பதற்காக.
பெரியவா,’வேண்டாம்’ என்று சைகை
காட்டினார்கள். “இது நம்ம அஜாக்கிரதையால்
ஏற்பட்டது/ நாய் என்ன தப்பு பண்ணினது?
முகர்ந்து பார்ப்பது அதன் ஸ்வபாவம், நானே
இந்த தண்டத்தை மாற்ற வேண்டுமென்றிருந்தேன்
விஸ்வேஸ்வரர் உத்தரவு கொடுத்து விட்டார்”
(ஆதி சங்கரருக்கு காசியில் நான்கு
வேதங்களையும் நான்கு நாய் வடிவங்களாகச்
செய்து,அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டு
விசுவநாதரே சண்டாள உருவத்தில் வந்து
தரிசனம் கொடுத்ததைத் தான் மகாப் பெரியவாள்
இப்படிக் குறிப்பிட்டார்கள்,)
வேறு தண்டம் மாற்றியாகி விட்டது.
“இதில் என்ன அதிசயம்?”என்று நமக்குத் தோன்றும்
இந்த நிகழ்ச்சியில் ஒரு புதுமை இருக்கிறது.
பொதுவாக,உபயோகத்திலுள்ள தண்டம் முறிந்து
போனால் தான் வேறு தண்டம் மாற்றிக் கொள்வது
என்பது ஸ்ரீமடத்து சம்பிரதாயம்.
ஆனால் இப்போது, தண்டம் முறிந்து போய்
விடவில்லையே? ஆற்று நீரில் அமுக்கி புனிதப்
படுத்தியிருக்கலாமே?.
பெரியவா, ‘உடனேயே தண்டத்தை மாற்ற வேண்டும்’ என்று ஏன் திருவுள்ளம் கொண்டார்கள்?.
சில நாட்களுக்குப் பிறகு பெரியவாளே அந்த
ரகசியத்தை பேச்சு வாக்கில் சிஷ்யர்களிடம்
கூறினார்கள்.
“அன்னிக்கு அந்த நாய் எவ்வளவு விரட்டியும் ஓடிப்
போகாமல்,அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து
கொண்டிருந்தது.தண்டத்தை மாற்றுகிற சாக்கில்
நான் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். நான் உடனே
எழுந்து போயிருந்தால் நீங்கள் எல்லோரும் அதை
ஹிம்ஸை செய்திருப்பீர்கள். பாவம் அது எதற்காக
கல்லடி படணும்! அதனாலே தான் உங்களை யெல்லாம் கட்டுப்பாட்டிலே வைக்கிறதுக்காக அங்கேயே உட்கார்ந்துட்டேன்!….”
அந்த ஜீவனுக்கு அந்த நாய்ப் பிறவி தான் கடைசி
ஜென்மமாக இருந்திருக்க வேண்டும்.
பெரியவாளின் பரிபூரண கடாட்சம் ஏற்பட்டபின்
‘புனரபி ஜனனம்’ கிடையாது



