October 22, 2021, 3:53 am
More

  ARTICLE - SECTIONS

  “கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா”

  “கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா” —பெரியவா-கேள்வி

  (நம்ம எல்லாருக்குள்ளேயும் இருக்கறதும் ஜீவன்தானே..! ஆன்மா ஒண்ணுதானே! அதனாலதான் அதைக் கூப்பிடற சாக்குல காப்பாத்து..காப்பாத்துன்னு வேண்டிக்கறோம். கான்னா காப்பாத்துன்னு ஒரு அர்த்தம் உண்டுன்னு நான் சொல்றது சரிதானே! இன்னொரு வகையில சொன்னா, காகம் பித்ரு ரூபம்னு சொல்றது உண்டு. பித்ருகளைப் பார்த்து காப்பாத்துங்கோன்னு வேண்டிக்கறதாகவும் அர்த்தம் பண்ணிக்கலாம்!” )-பெரியவா பதில் 17861559 1517108385000988 5242240015705989905 n - 1

  கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
  தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
  நன்றி-குமுதம் பக்தி(ஓரு பகுதி)

  ஒருசமயம் சாதுர்மாஸ்யத்தை ஒட்டி ஸ்ரீமடத்துலயே முகாமிட்டிருந்தார், மகாபெரியவா. வித்வத் விவாதங்கள் எல்லாம் நடந்துண்டு இருந்தது, அந்த சமயத்துல வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்திருந்தா. அந்தக் கூட்டத்துல நாற்பத்தஞ்சு -அம்பது வயசு மதிக்கத் தக்க பெண்மணி ஒருத்தரும் இருந்தா. அவ முகத்தைப் பார்க்கறபோதே, ஏதோ ஒரு கலக்கம் அதுல ஒட்டிண்டு இருக்கறது தெரிஞ்சுது.

  மகாபெரியவாளை அவா தரிசிக்கற முறை வர்றதுக்குள்ளே, கிட்டத்தட்ட கதறி அழுதுடற நிலைமைக்கே போய்ட்டா அந்தப் பெண்மணி. ஆசார்யா முன்னால வந்து நின்னதும் எதுவுமே சொல்லாம கேவிக்கேவி அழ ஆரம்பிச்சுட்டா.

  ரெண்டு மூணு நிமிஷத்துக்கு அப்புறம், “என்ன ஆச்சு?” அப்படின்னு கேட்கறமாதிரியான பாவனையோட அந்தப் பெண்மணியைப் பார்த்தார், மகாபெரியவா.

  “சுவாமி..நான் ரொம்ப பயந்து போயிருக்கேன். எனக்கு சீக்கிரமே உசுரு போயிடுமோ…என்னோட பொண்ணுகள் அநாதை ஆயிடுவாளோன்னு தோணறது…நீங்கதான் காப்பாத்தணும்..!” அப்படின்னு தழுதழுத்தா.

  அவா இன்னும் முழுசா சொல்லி முடிக்கலைங்கறதை புரிஞ்சுண்டவர் மாதிரி,கொஞ்ச நேரம் அமைதியா இருந்தார் ஆசார்யா. அதுக்கப்புறம் அந்தப் பெண்மணியே தொடர்ந்து சொல்ல ஆரம்பிச்சா, “அகத்துலேர்ந்து நான் வெளியில வர்ற சமயத்துல எல்லாம் எங்கேர்ந்தோ ஒரு காக்கா பறந்து வந்து என் தலையில தட்டிட்டுப் போறது.சில சமயம் என் தலையிலயே ரெண்டு மூணு விநாடி உட்கார்ந்துட்டுப் பறக்கறது.

  “நானும் ஆத்துக்குப் பக்கத்துல எங்கேயாவது மரத்துல கூடு கட்டியிருக்குமோ, நாம அந்தப் பக்கமா வர்றதால விரட்டறதுக்காக இப்படிப் பண்ணறதோன்னு நினைச்சேன்.ஆனா பக்கத்துல எங்கேயுமே காக்கா கூடு கட்டலை. அதோட, இங்கேதான்,அங்கேதான்னு எந்த வித்யாசமும் இல்லாம, நான் எங்கே வெளில போனாலும் ஏதாவது ஒரு விதத்துல எங்கேர்ந்தாவது ஒரு காக்கா வந்துடறது.எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. காக்கா தலைல தட்டக் கூடாது …அபசகுனம்னு சொல்றா சிலபேர். இது மரண கண்டம்னு பயமுறுத்தறா. எனக்கு ரெண்டு பொண் குழந்தைகள் இருக்கா.அவாளுக்கு எல்லாமே நான்தான்.அவாளை அநாதியா விட்டுட்டுப் போயிடுவேனோன்னு பயமா இருக்கு”

  சொல்லி முடிச்சவ கண்ணுலேர்ந்து ஜலம் பெருகி வழிஞ்சுது. புடவைத் தலைப்பால வாயைப் பொத்தி அழுகையை அடக்கிண்டு நின்னா.

  அவளை ஒரு தரம் நிமிர்ந்து பார்த்தார் மகாபெரியவா.

  “காக்கா தட்டித்துன்னா, அபசகுனம், மரணகண்டம்னு மாத்திரம் அர்த்தம் பண்ணிக்ட்கக் கூடாது. நாம ஏதோ பித்ருகடன் வைச்சிருக்கோம்னு அது உணர்த்தறதுன்னும் புரிஞ்சுக்கணும். ஏன்ன,பித்ருக்களுக்கு ஸ்ராத்தம் பண்றச்சே காகத்துக்குத்தானே அன்னம் வைக்கிறோம். அதனால,ஒன்னோட குடும்பத்துல பித்ரு கடன் எதுவும் பாக்கி இருக்கான்னு பாரு. அதை உன்னால பெரிசா செய்ய முடியாவிட்டாலும் சாஸ்த்ரங்கள் சொல்றதை அனுசரிச்சு, வாத்யார்கள்கிட்டே கேட்டு சிம்பிளாகவது அந்தக் காரியங்களைச் செய்துடு. தினமும் கைப்பிடி அன்னமாவது காக்காய்க்கு வை. சனிக்கிழமைகளில் சிவாலயத்துக்குப் போய் தரிசனம் பண்ணு. அங்கே நல்லெண்ணெய் தீபம் ஏத்திவைச்சுக் கும்பிடு..! எல்லாம் நல்லதாவே நடக்கும்” கனிவோட சொன்னார் கருணாமூர்த்தி.

  தன்னோட பயம் எல்லாம் போயிடுத்துங்கறதுக்கு அடையாளமா,பவ்யமா மகாபெரியவாளை நமஸ்காரம் பண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு புறப்பட்டா, அந்தப் பெண்மணி.

  அதுக்கு அப்புறம்தான் மகாபெரியவாளோட சாதுர்யம் வெளிப்படற மாதிரியான சம்பவம் நடந்தது. வித்வத் சபையிலன் விவாதம் பண்ணிண்டு இருந்தவாளைப் பார்த்து, ” இந்த லோகத்துல ஒரே ஒரு ஜீவராசியை மட்டும்தான் நாம அதோட உண்மையான பேரைச் சொல்லி கூப்பிடறோம். அது எதுன்னு யாருக்காவது தெரியுமா?” அப்படின்னு கேட்டார்.

  “மனுஷாளைத்தான் அவா அவா பேரைச் சொல்லி கூப்பிடுவோம்!”னு சிலர் சொன்னா.இன்னும் கொஞ்சம் பேர்,’தங்களுக்குப் பிரியமான நாய், பூனைக்கெல்லாம்கூட பேர் வைச்சுக் கூப்பிடறவா உண்டு!’ அப்படின்னு சொன்னா.

  எல்லாத்தையும் அமைதியா கேட்டுண்ட பெரியவா பேச ஆரம்பிச்சா.

  “நீங்க சொல்றதெல்லாம் தனித்தனியா ஒவ்வொருத்தருக்கோ அல்லது மிருகத்துக்கோ நாமளா வைக்கிற பேர். பொதுவான பேர் கிடையாது.சரி நானே சொல்லிடறேன்!” சொல்லிட்டு கொஞ்சம் நிறுத்தினார்.

  “காக்காவைத்தான் நாம அதோட பேரைச் சொல்லி கூப்பிடறோம். அதுக்கு அன்னத்தை வைச்சுட்டு, கா,கா,ன்னு தானே கூப்பிடறோம்.. கோமாதான்னு நாம கும்பிடற பசுவைக்கூட லக்ஷ்மி வான்னுதான் கூப்பிடறோம். மாடே வான்னு சொல்லறதில்லை. ஆனா, காக்காவை மட்டும்தான் இப்படிச் சொல்றோம்”

  மகாபெரியவா சொல்ல எல்லாரும் சிலிர்த்துப் போனா. அந்த சமயத்துல இன்னொரு கேள்வி எழுப்பினார் ஆசார்யா.

  ” கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா”

  பெரியவாளே சொல்லிவிட்டார் என்கிற தைரியத்துல சிலர்.” அதோட ..பேர்..!” அப்படின்னு குரல் கொடுத்தா.

  “அதோட பேர் சரி. அதுக்கு அர்த்தம் என்ன? ஏன் அப்படிக் கூப்டறோம்” பெரியவா கேள்விக்கு அப்புறம் மறுபடியும் மௌனம்.

  “ஏன்னா, ஏதோ ஒரு ஜீவன் விதிவசத்தால காக்காயா பிறவி எடுத்திருக்கு. நம்ம எல்லாருக்குள்ளேயும் இருக்கறதும் ஜீவன்தானே..! ஆன்மா ஒண்ணுதானே! அதனாலதான் அதைக் கூப்பிடற சாக்குல காப்பாத்து ..காப்பாத்துன்னு வேண்டிக்கறோம். கான்னா காப்பாத்துன்னு ஒரு அர்த்தம் உண்டுன்னு நான் சொல்றது சரிதானே! இன்னொரு வகையில சொன்னா, காகம் பித்ரு ரூபம்னு சொல்றது உண்டு. பித்ருகளைப் பார்த்து காப்பாத்துங்கோன்னு வேண்டிக்கறதாகவும் அர்த்தம் பண்ணிக்கலாம்!”

  எல்லா ஆன்மாவும் ஒண்ணுதான் அப்படின்னு அத்வைத விளக்கம், கா ன்னா காப்பாத்துன்னு வேண்டிக்கறதாக இன்னொரு விளக்கம். சாதாரண காக்கையை உதாரணமா வைச்சுண்டு இப்படி அற்புதமான விளக்கங்களை பெரியவா சொல்லி முடிச்சதும் அதை ஏத்துண்டதுக்கு அடையாளமா ,”ஜயஜய சங்கர! ஹரஹர சங்கர!” கோஷம் அங்கே பெரிசா எழும்பி எதிரொலிச்சுது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-