“எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?”-பெரியவா
(கடவுள் எதிர்ப்புக் கூட்டத்தினருக்கு காட்டிய கருணை கடவுளின் கருணைக்கு எல்லை இருக்கலாமோ என்னவோ? காஞ்சி முனிவரின் கருணைக்கு நிச்சயமாக எல்லை இல்லை)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-176
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் எதிரில்
ஓர் அரசியல் கட்சியின் பிரசாரக் கூட்டம்.
கோயிலுக்கு எதிரிலேயே கோயில் எதிர்ப்புக் கூட்டம்.
நல்ல காலமாக,கச்சபேஸ்வரர் சந்நிதியில் ஒலி
பெருக்கி கட்டப்படவில்லை.கட்டப்பட்டிருந்தால்,
தனக்கு எதிரான காட்டுக் கத்தலைக் கேட்டு வெளியே ஓடிப் போயிருப்பார்.(ஸ்வாமி இனிமையான தேவாரத் தமிழைக் கேட்ட திருச்செவிகள், தெய்வத் தமிழை
இவ்வளவு ஆபாசமாக உபயோகப் படுத்த முடியுமா?
என்று பயந்து பதறிப் போயிருக்கும்.
ஸ்ரீ மடத்தில் வாசலில் தண்ணீர் மற்றும் நீர்மோர்
விநியோகம் செய்து கொண்டிருந்த தெலுங்குப்
பாட்டியை வெகு அவசரமாக அழைத்து வரச்
சொன்னார்கள், மகா சுவாமிகள்.
“என்ன உத்தரவு ஆகப் போகிறதோ?”
என்ற கவலையுடன் வந்து பெரியவாளை
நமஸ்கரித்தார் பாட்டி.
“இன்னிக்கு நிறைய தயிர் வாங்கி, ரெண்டு மூணு
அண்டாவிலே நீர் மோர் தயார் பண்ணிவை.
பெருங்காயம்,கடுகு தாளிச்சுப் போடணும்.
கறிவேப்பிலை கசக்கிப் போடணும். ரெண்டு பச்சை
மிளகாய் நறுக்கிப் போடலாம். இஞ்சித் துண்டு
போடற வழக்கம் உண்டோ?”-பெரியவா.
தொண்டு செய்பவர்களுக்கும் தரிசனத்துக்காக
வந்திருந்தவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை.
இவ்வளவு வக்கணையாக நீர் மோர் தயாரிக்கும்
கலை பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?
அத்துடன் கவலையும் ஏற்பட்டது.அன்றைக்கு
ஸ்ரீமடத்தில் சிறப்பு நிகழ்ச்சி எதுவுமில்லை.
வாசலில் நீர் மோர் வாங்கி குடித்துவிட்டு.
அப்படியே போகிற திருவிழாக் காலமும் இல்லை.
‘ரெண்டு அண்டா நீர் மோர் வீணாகப் போகிறது,
ஹூம்!’ என்று முணுமுணுப்பு.
கடவுள் எதிர்ப்புக் கூட்டம் சரியாக,பிற்பகல் ஒரு
மணிக்கு முடிந்தது. எல்லாக் கோயில்களையும்
இடித்துத் தள்ளிவிட்டு.தொழிற்சாலைகள் கட்டி
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கப்
போவதாக சூளுரை உரைத்தார் தலைவர்.
இருநூறு கரங்கள் ஒலி எழுப்பின.
புன்னகை மாறாமல்,சட்டை கசங்காமல் காரில்
ஏறிப் போய்விட்டார் தலைவர்.
கடல் போல் குழுமியிருந்த (நூறு பேர் !) கூட்டம்,
அவரவர் கிராமத்துக்குப் போக வேண்டுமே?
சித்திரை தேதி பதினெட்டு. தலைக்கு மேலே
நெருப்பைக் கொட்டிக் கொண்டிருந்தான் சூரியன்.
ஸ்ரீ மடத்துக்கு அருகில் பேருந்து நிறுத்தம்.நடந்து
வந்ததில் தாகமோ தாகம். நகரசபைக் குழாய்களில்
உஷ்ணக் காற்று பாம்புச் சீறலாக வந்தது.
“அங்ஙன பாரு…நீர் மோர் கொடுக்கிறாங்க போல.”
பாட்டியிடம் வந்தார்கள்.
பாட்டிக்குக் கை வலி வந்தது. பத்து நிமிஷத்தில்
நூறு பேருக்கு நீர்மோர் கொடுத்து பழக்கமில்லை.
கடைசிச் சொட்டு வரை தீர்ந்துவிட்டது.
“கன்னையா..சாமியைப் (பெரியவா) பார்த்துட்டுப்
போகலாமா?” என்று முணுமுணுத்தார் ஒருவர்.
“ஆமாண்ணே! எனக்கும் ஆசையாயிருக்கு..
கூட வந்தவங்க திட்டுவாங்களே?”
நூறு பேருக்கும் இதே கவலைதான்.
என்ன தைரியத்தில் மடத்தின் உள்ளே நுழைவது?
ஸ்ரீ மடம் வாசலில் பரபரப்பு. மகா சுவாமிகள்
நாலைந்து பண்டிதர்களின் வேதாந்த விசாரம் செய்து
கொண்டு வெளியே வந்தார்கள். மெல்ல நடந்தார்கள்
எதிர்ப்பக்கம் இருந்த கங்கை கொண்டான் மண்டபத்து ஆஞ்சனேயரைத் தரிசிக்க.
வறுத்தெடுக்கும் தெருப் புழுதியில் நூறு பேரும்
விழுந்து மகா சுவாமிகளை வணங்கினார்கள்.
கடைசியாக மண்டபத்துக்குள் நுழையுமுன்,
“எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?” என்று
கூட்டத்தைப் பார்த்து கேட்டார்கள் பெரியவாள்.
கடவுளின் கருணைக்கு எல்லை இருக்கலாமோ
என்னவோ? காஞ்சி முனிவரின் கருணைக்கு
நிச்சயமாக எல்லை இல்லை.



