ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி- 8) கவித்திறன்
– மீ.விசுவநாதன்
ஆசார்யாள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் பன்மொழிப் புலவர் மட்டுமாலாது ஒரு சிறந்த கவிஞருமாவார். அவரது சிறு வயதிலேயே அவருள் கவித்திறன் வேர்விடத் துவங்கி விட்டது. ஒன்பது வயது முடிவதற்குள்ளாகவே செய்யுள் இலக்கண விதிகளைப் போனமாகக் கற்றுத் தேர்ந்து விட்டார்.
தமது கவிதைகளில் கருவாக “இறைவனின் மேன்மை”, “மனிதனின் வரையறைகள்”, “இயற்கை அழகு” எனப் பற்பல விஷயங்களைக் கையாண்டு கவி புனைவார். ஸம்ஸ்கிருத மொழி இவரது கவித்திறனை வெளிக்கொணர்வதில் இன்றியமையாத பங்காற்றியது என்றால் அது மிகையாகாது.
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சமயங்களில்கூட அவைகள் கேட்கும் கேள்விகளுக்கு ஸம்ஸ்கிருத செய்யுட்களில் பதில் கூறுவாராம். உடனுக்குடன் ஸம்ஸ்கிருதத்தில் இலக்கண விதிகளை மீறாது செய்யுட்களைப் புனைய அந்த வயதிலேயே இவரால் முடிந்ததென்றால் கவித்திறன் இவரது உதிரத்தில் ஊறி வந்திருக்கிறது என்றுதானே கூற வேண்டும்.
இல்லத்தைத் துறந்து தமது குருநாதரின் பாதார விந்தங்களில் சரண் புகுந்த பின்னர் தீவிரமானதோர் ஆன்மீகத் தாகம் இவரைப் பற்றிக் கொண்டது. எட்டு வருடங்கள் குருவிடம் புரிந்த சேவையானது குருநாதரின் முழு அருளும் இவர்பால் சுரக்கும் வண்ணம் செய்தது. துறவறத்தையும் ஏற்றார்.
உலகைத் துறந்தாரே தவிர உள்ளுறைந்து நின்ற கவிஞனைத் துறந்தாரரில்லை. உன்னதமான கவித்திறன் மீண்டும் வெளிக் கிளம்பியது. ஆயினும் கருவாக குரு மகிமை, குருபரம்பரை மகிமை, இறைவனின் மகிமை என பக்தி மணம் கமழும் விஷயங்களைத் தவிர வேறெதையும் அமைத்தாரில்லை.
தமது உயினினும் மேலாகக் கருதும் தமது குருநாதரின் பெருமைகளை எளிமையான வரிகளில் அருமையான விதத்தில் அமைத்து இவர் புனைந்ததுதான் “ஸ்ரீ குரு தியானம்” என்ற ஸ்லோகம். பக்தர் ஒருவர் இவரை அணுகி ஸ்ரீ மகாசன்னிதானத்தின் மேல் ஒரு ஸ்லோகம் இயற்றி அருளுமாறு வேண்டிக் கொள்ள, அந்த நினைவிலேயே இவர் தமது அனுஷ்டானத்தில் அமர,அடுத்த கணம் வெளிக் கிளம்பியது அற்புதமானதோர் ஸ்தோத்ரம். அதுவே ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த அக்ஷர மாலா ஸ்தோத்ரம் ஆகும்.
அவரது குருநாதரின் திருநாமத்தில் அடங்கியுள்ள அக்ஷரங்களான “அ, பி, ந, வ, வி, த்யா, தீ, ர்த்த” இவை ஒவ்வொன்றும் கிராமமாக இந்த ஸ்தோத்ரத்தின் முதல் செய்யுள், இரண்டாம் செய்யுள் என ஒவ்வொரு செய்யுளின் முதல் எழுத்தாக அமைக்கப்பட்டு இருப்பது இந்த ஸ்தோத்ரத்தின் பெருமை ஆகும்.
இதைப் பாராயணம் செய்பவர்கள் இறைவனுக்கும் மேலான தமது குருநாதரின் பெருமைகளை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவரது திருநாமத்தையும் உச்சரித்துப் பெரும் பாக்கியத்தையும் அடைய வேண்டும் எனும் சீரிய நோக்கம் ஆசார்யாளுக்கு அமைந்திருப்பதும் தெளிவாகிறது.
1980ம் வருடம் தமது குருனாதருடன் சபரி மலைக்கு விஜயம் செய்த இந்த தெய்வீகக் கவிஞரை அம்மலையும் அதைச் சுற்றி வீற்றிருந்த அபாரமான இயற்கை அழகும், மலைமேல் அமர்ந்து அருளாட்சி புரிந்து வரும் தர்ம சாஸ்தாவின் எழிலும் பெரிதும் ஈர்த்துவிட, புனைந்தார் அக்கணமே “தர்ம சாஸ்தா” எனும் கவிதை.
1987ம் வருடம் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த சமயம் அவரை அணுகிய பக்தரொருவர் கீர்த்தனைகள் சிலவற்றை இயற்றியருள வேண்டினார். கருணையுடன் அதற்கிசைந்த இந்த அருட்பாவரசர் ” ஸ்ரீ சாரதாம்பாள்”, ஸ்ரீ சங்கரர்” பெருமைகளைப் பறைசாற்றும் இரு கீர்த்தனைகளைப் புனைந்து தந்தருளினார்.
இவைகள் தவிர காலடியின் புகழ் பாடும் “காலடி வஜ்ர மஹோத்ஸவ ப்ரசஸ்தி”, ஸ்ரீ சாரதா பஞ்ச ரத்னம், ஸ்ரீ சாரதா தியானம், ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்து நான்காவது பீடாதிபதிகளாக விளங்கிய ஸ்ரீ சந்திர சேகர பாரதீ மகாஸ்வாமிகளைப் போற்றித் துதிக்கும் ” ஸ்ரீ சந்திரசேகர பாரதீ நவரத்ன மாலா ஸ்தோத்ரம்”, ஸ்ரீ சங்கர பகவத் பூஜ்ய பாதாச்சார்ய ஸ்தவம்” ஆகியவையும் ஆசார்யாளால் படைக்கப் பட்டவையாகும்.
மகான்களால் புனையப்படும் ஸ்தோத்ரங்கள் வெறும் வார்த்தைக் கோர்வைகளாக மட்டும் நின்றுவிடாமல் பெரும் பயனை நல்கும் மந்திரங்களாகவே செயல்படுகின்றன.
(“ஞாலம் போற்றும் ஞான குரு” என்ற புத்தகத்தில் இருந்து பகிரப்பட்டது)
குருவைப் போற்றும் சீடர்
ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் ஸ்தாபிக்கப்பட்ட நான்கு ஆம்னாய பீடங்களில் முதலில் ஸ்தாபிக்கப் பட்டது சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம். அந்த பீடத்தின் குருவம்சத்தில் உறுதியான பக்தி கொண்டு தொண்டாற்றிய, தொண்டாற்றிவரும் பக்தர்கள் அனந்தம்.
அதில் ஒரு மாணிக்கம் திரு. பாரதி காவலர் கு. ராமமூர்த்தி அவர்கள். அவரது பூர்விகம் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம் கல்யாணபுரி என்ற கல்லிடைக்குறிச்சி. அவரது வம்சமே சிருங்கேரி குருநாதர்களின் அடிமைகள். அவரது தந்தையார் ஸ்ரீமான் குளத்து ஐயர் அவர்கள் ” ஸ்ரீ சங்கரரை”ப் பற்றி நூல்கள் எழுதிய பக்திமான். மனைவி திருமதி. கங்கா ராமமூர்த்தி அவர்களும் சிறந்த எழுத்தாளர். ஸ்ரீமான் பாரதி காவலர் கு. இராமமூர்த்தி அவர்கள் கங்கை என்றால் அவரது மனைவி திருமதி கங்கா இராமமூர்த்தி அவர்கள் சரஸ்வதி நதியைப் போன்றவர். நதிகளின் பெயர்கள் வெவ்வேறானாலும் கடலில் சென்று சங்கமமாவதைப் போல இவர்களின் சிந்தனையும் சிருங்கேரி குருநாதர்களின் திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருக்கும்.
ஸ்ரீமான் ராமமூர்த்தி அவர்களுக்கு மஹாகவி பாரதியார் மீது எத்துணை பக்தி உண்டோ அதைவிடத் தங்களின் குலகுருவான சிருங்கேரி ஆசார்யாள்களிடம் மிகுந்த பக்தி கொண்டு தொண்டாற்றி வருபவர். “வீட்டுக்கு வீடு பாரதி” என்ற திட்டத்தின் மூலம் லக்ஷம் பாரதியார் படங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் தந்து அந்த மகாகவியைப் போற்றியவர். அதேபோல தங்களது குலகுரு நாதரின் புகழையும் நெஞ்சில் வைத்துப் போற்றியும், பரப்பியும் தொண்டாற்றி வருபவர்.
குருநாதர்களின் வர்த்தந்தி (பிறந்த தினம்) நாட்களில் ஸ்ரீ சாரதா பீடத்தின் பெருமைகளையும், குருநாதர்களின் தவ சக்தியையும் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக புத்தங்கள் எழுதி பக்தர்களுக்கு வினியோகித்து வருபவர். ஸ்ரீ மாதவீய சங்கர விஜயத்தின் அடிப்படையில் ஸ்ரீ சாரதாம்பாளின் சரித்திரத்தை எழுதினர். அருமையான அந்தப் புத்தகத்தை முதலில் வானதிப் பதிப்பகம் வெயிட்டுப் பெருமை கொண்டது. இப்பொழுது “அம்மன் தரிசனம்” குழுமத்தின் மூலமாக வெளிவந்து அனைவரின் பாராட்டுகளைப் பெற்று பக்தர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.
ஆன்மிகச் சிந்தனையும், தேச பக்தி, தெய்வ பக்தியும் நிறைந்த ஸ்ரீமான் கு. இராமமூர்த்தி அவர்கள் குருநாதர் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளைப் பற்றி ஒரு அருமையான பாடல் எழுதினர். அதற்கு இசைக் கலைஞர் மலேசியா வாசுதேவன் அவர்கள் மதுரமாக இசையமைத்திருந்தார்.
அந்த ஒலித்தகட்டை 1995ம் வருடம் “மே” மாதம் சென்னை, தி.நகரில் உள்ள ஸ்ரீ சிருங்கேரி வித்யாஸ்ரமத்தில் ஜகத்குரு அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் வெளியிட்டு அதை எழுதிய, பாடிய, இசையமைத்த கலைஞர்களைப் பாராட்டி கௌரவித்தார்கள். அந்த ஒலித்தகட்டில் உள்ள ஸ்ரீமான் கு. இராமமூர்த்தி அவர்களின் அருமையான பாடலை இங்கே தருகிறேன்.
பாரத தேசத்தின் நதிகளை குருநாதர் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் நற்குணங்களோடு ஒப்பிட்டு எழுதப் பட்ட மிக அருமையான, எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
“பாரதி தீர்த்தர் புண்ணிய தீர்த்தர்
பகவத்பாதர் கேந்திரம் ஆவர்
காலடி மண்ணின் காவியம்
கைலாய மலைமுடி ஓவியம்
ஞாலம் முழுவதும் தழைத்திடும் வண்ணம்
ஞானம் அருளிடும் சங்கரச் சின்னம்
(பாரதி தீர்த்தர்)
பூர்ணாநதிப் பொலிவின் உருவம்
நாகுலேறு நதிக்கரையில் உதயம்
சுப்ரா நதியில் குருமுக அப்பியாசம்
துங்கை நதியில் துறவு சன்யாசம்
(காலடி மண்ணின் காவியம்)
கங்கா நதியின் பிரவாக வெள்ளம்
யமுனா நதியின் எழுச்சி உள்ளம்
துங்கா நதியின் தெளிவின் வடிவம்
சரஸ்வதி நதியின் ஆழமிகு படிவம்
(காலடி மண்ணின் காவியம்)
இந்தப் பாடலைக் கேட்க ….
தொண்டர்களின் பெருமை சொல்லுக்குள் அடங்குமோ.
குருவின் திருவடிகளே சரணம்.
(வித்யையும் விநயமும் தொடரும்)