சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.
நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் பாரதியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் சட்டமுகம் என அழைக்கப்படும் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ததன் மூலம் பாஜக-அதிமுக தேர்தல் நடவடிக்கைகளை துவங்கிவிட்டது என திமுகவினர் தங்கள் குமுறலைக் கொட்டி வருகின்றனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை கைது செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆணையர் அலுவலகத்துக்குள் செல்ல திமுக வழக்கறிஞர்கள் முயற்சி மேற்கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசாருடன், திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்தனர்.
நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்தவர்கள், பழங்குடியின மாணவனை செருப்பைக் கழட்டிவிடச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும் கைது செய்வார்களா என்று திமுகவினர் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
இதனிடையே, ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதை பாஜக வரவேற்றுள்ளது. திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது… அடுத்து தயாநிதிமாறன் கைது செய்யப் பட வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆர்.எஸ். பாரதி கைது நடவடிக்கை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வெளியிட்ட டிவிட்டர் பதிவு….
தனது கைது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, கொரோனா ஊழல் வெளிவந்து விடக்கூடாது என திமுகவை பயமுறுத்தவே கைது நடவடிக்கை என்று குற்றம் சாட்டினார்.