spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: இறையனார் அகப்பொருள் வந்த வரலாறு!

திருப்புகழ் கதைகள்: இறையனார் அகப்பொருள் வந்த வரலாறு!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் – 132
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

மூப்புற்றுச் செவி – திருச்செந்தூர்
இறையனார் அகப்பொருள் வந்த வரலாறு

மதுரை மாநகரை ‘வம்ச சூடாமணி’ என்னும் பாண்டிய அரசன் ஆட்சிசெய்து வந்த காலத்தில் கோள்களின் நிலை மாற்றத்தால் மழையின்றிப் போனது. பெரும் பஞ்சம் மக்களை வாட்டி வதைத்தது. பசியால் வருந்திய தமிழ்ப் புலவர்கள் பாண்டியனிடம் அடைக்கலம் புகுந்தனர். அவனும் அவர்களை அன்புடன் ஆதரித்து தமிழிலக்கியங்களை ஆராயக் கட்டளையிட்டான். இதனால் புலவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆயினும் புலவர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது.

தமிழில் அந்நேரத்தில் எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகிய இலக்கணங்கள் இருந்தனவே தவிர முக்கியமான பொருள் இலக்கணம் இருக்கவில்லை. முன்னாளில் இருந்த பொருள் இலக்கணம் சிதைந்து மறைந்து விட்டது. இலக்கணமின்றி இலக்கியங்களை ஆராய இயலாது எனப் புலவர்கள் மன்னனிடம் தெரிவித்தனர்.

பாண்டிய மன்னன் சோமசுந்தரப் பெருமானை தினந்தோறும் வணங்குபவன். செண்பக மலர்களால் அர்ச்சித்து வருபவன். இதனால் இவனுக்கு செண்பகப் பாண்டியன் என்ற பெயரும் இருந்தது. அவன் புலவர்கள் குறைதீர்க்கவும் தமிழ் தழைக்கவும் அருள்புரிய இறைவனை வேண்டினான். அன்றிரவு சொக்கநாதப் பெருமான் அறுபது சூத்திரங்கள் கொண்ட இறையனார் அகப்பொருள் உரையை எழுதி பீடத்தின் கீழ் வைத்தார்.

மறுநாள் காலை அர்ச்சகர் அந்த நூலைக் கண்டு, அதை மன்னனிடம் கொண்டு சேர்த்தார். மன்னனும் மிக்க மகிழ்ச்சியோடு அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே ‘புலவர்களிடம் அதைக் கொடுத்து அந்நூலுக்கு உரை காணுக’ என இறைவன் அசரீரியாய் ஒலித்தான். சங்கத்தில் இருந்த புலவர்களான நக்கீரர், கபிலர், பரணர் முதலிய புலவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு உரை எழுதினார்கள்.

இப்போது வேறு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. புலவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது உரையே சிறந்த உரை என்று கூறினர். பாண்டியன் மீண்டும் சோமசுந்தரப் பெருமானிடத்து வேண்டினான். அப்போது இறைவன் – வேந்தனே, இந்த மதுரை மாநகரில், வணிகர் குலத்தில் கணபதி என்பவருக்கும் குணசாலினி என்ற நங்கைக்கும் பிறந்த ஒரு தெய்வமகன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் உருத்திரசன்மன். அவன் ஒரு பிறவி ஊமை. அவனிடம் சென்று இந்த உரைகளையெல்லாம் படித்துக் காண்பியுங்கள். அவன் சிறந்த உரை எதுவெனச் சொல்லுவான் – என விடை பகர்ந்தார்.

புலவர்களுக்கு ஓர் ஊமை எப்படி எது சிறந்த உரை என்பதை முடிவு செய்ய இயலும் என ஐயம் எழுந்தது. அதற்கும் இறைவன் – அவன் ஊமை; ஆயினும் செவித்திறன் உடையவன். எனவே சிறந்த உரையைக் கேட்கும்போது அவன் கண்ணீர் சொரிந்து ஆனந்தக் கூத்தாடுவான் – என விடை பகர்ந்தார். புலவர்கள் உருத்திரசன்மன் இல்லம் சென்று, அவனுக்கு சகல மரியாதைகளும் செய்து அவனை சங்கப் பலகைக்கு அழைத்து வந்து, அமர வைத்து தங்களது உரைகளைப் படித்தார்கள்.

உருத்திரசன்மராக அவதரித்தவர் உண்மையில் முருகப் பெருமானின் ஓர் அம்சமாகும். அவர் புலவர்களின் உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது சிலரது சொல்வைப்பைக் குறிப்பினால் இகழ்ந்தார்; சிலரது சொல் அழகைக் கேட்டு புருவம் உயர்த்தினார்; சிலரது பொருளாழத்தை தலையசைத்து ரசித்தார்; மதுரை கணக்காயனார் நக்கீரனார் தம் உரையை வாசித்தபோது ஒவ்வொரு சொல்லுக்கும் பொருட்சுவை நோக்கித் தலையசத்து, மெய்கூச்செரிந்து, ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். மன்னனும் புலவர்களும் நக்கீரரின் உரையே சிறந்த உரை என அறிந்துகொண்டனர்.

திருவிளையாடற்புராணத்தில் சங்கத்தார் கலகம் தீர்த்த படலத்தில் இதனை பரஞ்சோதி முனிவர் கூறியுள்ளார். அப்பாடல்கள் இதோ

கிழ்ந்தான் சிலர் சொல் ஆட்சியை மகிழ்ந்தான் சிலர் பொருளை
இகழ்ந்தான் சிலர் சொல் வைப்பினை இகழ்ந்தான் சிலர் பொருளைப்
புகழ்ந்தான் சிலர் சொல் இன்பமும் பொருள் இன்பமும் ஒருங்கே
திகழ்ந்தான் சிலர் சொல் திண்மையும் பொருள் திண்மையும் தேர்ந்தே.

இத் தன்மையன் ஆகிக் கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன்
முத் தண் தமிழ் கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும்
அத் தன் மையன் அறியும் தொறும் அறியும் தொறும் எல்லாம்
.

நுழைந்தான் பொருள் தொறும் சொல் தொறும் நுண் தீம் சுவை உண்டே
தழைந்தான் உடல் புலன் ஐந்தினும் தனித்தான் சிரம் பனித்தான்
குழைந்தான் விழிவிழி வேலையுள் குளித்தான் தனை அளித்தான்
விழைந்தான் புரி தவப் பேற்றினை விளைத்தான் களி திளைத்தான்.

பல் காசொடு கடலில் படு பவளம் சுடர் தரளம்
எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல் வணிகக் குமரன்
சொல் ஆழமும் பொருள் ஆழமும் துலை நா எனத் தூக்க
நல்லாறு அறி புலவோர்களும் நட்டார் இகல் விட்டார்.

உலகினுட் பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல்
திலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள்
கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து
புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார் போலும்.

இறைவனை அணுகினால் நமது சங்கடங்களை எல்லாம் தீர்ப்பான் என்பது இக்கதையின் மூலம் நாம் அறியப் பெரும் செய்தியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe