Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: கடலச் சிறை வைத்து (பழநி)

திருப்புகழ் கதைகள்: கடலச் சிறை வைத்து (பழநி)

To Read in Indian languages…

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 168
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கடலச் சிறை வைத்து – பழநி
இவள் கண் பலர் காணும் பூவொக்கும்

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியிருபத்தியேழாவது திருப்புகழ் ‘கடலைச் சிறை வைத்து’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “மாதர் கண்கள் புரியும் கலகம் தீர்த்து, ஆட்கொள்ள”அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்
ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்
கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் …… பவனூணாக்

கருதிச் சருவிக் கயலைக் கயமுட்
படுவித் துழையைக் கவனத் தடைசிக்
கணையைக் கடைவித் துவடுத் தனையுப் ……பினின்மேவி

அடலைச் செயல்சத் தியையக் கினியிற்
புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்
தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் …… தசகோரம்

அலறப் பணிரத் நமணிக் குழையைச்
சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்
டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் …… படுவேனோ

சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்
தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்
தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் …… பரிவாலே

சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் குமநுக் க்ரகமெய்ப் பலகைச்
சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் …… தியில்ஞான

படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் …… குருநாதா

பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்
றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்
பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் …… பெருமாளே.

இப்பாடலின் பொருளாவது வைசிய குலத்திலே ஒரு செட்டியின்பால் தோன்றி, உருத்திரசன்மன் என்ற பேர் தாங்கி, அருளும் ஞானமும் பூண்டு அன்பால் முனிவர்களுக்கு அருள் புரிந்தவரே. இறையனார் அகப்பொருள் என்ற நூலின் விளக்க உரையை குற்றமற உணர்வித்தருளிய ஞானமூர்த்தியே. உண்மையான குருபரனே. பழநியம்பதி என்ற மலை மீது எழுந்தருளியுள்ள குமாரக்கடவுளே. பெருமிதம் உடையவரே.

murugan thiruchendur
murugan thiruchendur

(தனக்கு இணையில்லாமையால்) கடலைச் சிறை வைத்தும் மலர்ச்சோலையில் வாழும் வண்டுகளின் உடம்பில் தண்டனைக்கு அடையாளம் போன்ற கோடுகளை இட்டும், மடுவில் உள்ள தாமரைகளை மலர்த்தி வாடுமாறு செய்தும், பலியேற்கும் சிவபெருமானுக்கு நஞ்சினை உணவாகச் செய்தும், போர் புரிகின்ற கயல்மீனைக் குளங்களில் அமிழ்த்தியும், மானை வனத்தில் திரியுமாறு செய்தும், பாணத்தைக் கடையச் செய்தும் மாவடுவை உப்பினில் ஊறும்படிச் செய்தும் வீரச்செயலுடைய வேலை நெருப்பினில் காய்ச்சுமாறு செய்தும், இயமனை சிவபிரான் திருவடியால் உதைபட்டு நசுங்கச் செய்தும், ஒளிமிக்க வாளாயுதத்தை நடுங்கி முறியும்படி செய்தும், மதிக்கப்படுகின்ற சகோர பறவையை அலறுமாறு செய்தும் இரத்தின மணியாலாகிய தோட்டினுடன் போர் புரிந்து, மை இடப்பெற்று, ஒளிசெய்து, ஆடவரை மருளச் செய்கின்ற பொது மாதர்களின் கடைக்கண்ணில் அடியேன் அகப்பட்டு அல்லலுறுவேனோ? – என்பதாகும்.

இப்பகுதியில் ஆன்மீகத்தை விட்டு சற்று விலகி, பெண்களின் கண்களுக்கு அருணகிரியார் சொல்லியிருக்கும் உவமை நலத்தைக் காணலாம். மாதர்களின் கண்களுக்குப் புலவர்கள் எத்தனை உவமைப் பொருள்கள் கூறுவாரோ அத்தனை பொருள்களையும் கூறி, அவைகட்கு ஒவ்வொரு வகையில் உள்ள இழிவையும் கூறி, கண்களுக்கு ஒவ்வாமையைக் காட்டித் தற்குறிப்பேற்றம் என்ற அணியை அழகு படுத்துகின்றார் அருணகிரியார்.

பெண்களின் கண்களுக்கு, கடல், வண்டு, தாமரை, நஞ்சு, மீன், மான், அம்பு, மாவடு, வேல், யமன், வாள், சகோரப்பறவை இந்தப் பன்னிரண்டு பொருள்களையும் உவமை கூறுவர். இவைகட்கு உள்ள குறைகளை மிக நயமாகச் சொல்லி, இவை கண்களுக்கு நிகராகமாட்டா எனக் கண்டித்து ஒதுக்குகின்றார் நம் அருணகிரியார்.

கடலைச் சிறை வைத்து என்ற சொற்களில் கடலைக் கண்ணுக்கு உவமையாக்குகிறார். கவியரசு கண்ணதாசன்,

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ

என்று பாடுவார். கண்கள் விசாலமாக இருத்தல் வேண்டும்; அது கண்ணுக்கு ஒரு சிறப்பு. காசியில் எழுந்தருளியுள்ள அம்பிகைக்கு விசாலமான கண். அதனால் விசாலாட்சி என்ற அருமைத் திருநாமம் அமைந்துள்ளது. ஆனால் கடல் ஒரு எல்லைக்கு உட்பட்டு, கரையால் தடைபட்டு சிறைபட்டுக் கிடக்கின்றது. அது முற்றிலும் பொருந்தும் உவமையாகாது. தனக்கு நிகராகாத கடலைக் கண் தண்டித்துச் சிறைபடுத்தியது என்று நயம் பட, இங்கே அருணகிரிநாதர் கூறுகிறார்.

மலர்ப்பொழிலிற் ப்ரமரத்தை உடற்பொறியிட்டு என்ற வரியில் வண்டு போன்ற கண் என்று கூறுவார்கள். வண்டு ஓயாமல் தேனை வேண்டி அலைந்து திரிந்து உழலும் இயல்புடையது. ஆதலின் தனக்கு நிகர் இல்லையென்று கருதிய கண், வண்டைத் தண்டித்தது; தண்டித்ததற்கு அடையாளம்போல் அதன் உடம்பில் வரிவரியாகச் சில கோடுகளையிட்டது. இயல்பாகவுள்ள கோடுகளைத் தற்குறிப்பேற்றமாக இங்ஙனம் கூறுகின்றனர். உடல்பொறி-உடலிலுள்ள கோடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 6 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,768FollowersFollow
17,300SubscribersSubscribe