
நட்சத்திரங்கள் இருபத்தியேழில், ஓணமும் ஆதிரையும்தான் திரு எனும் அடைமொழியுடன் சிறப்பு பெற்றுள்ளன. காரணம், இரண்டுமே இறைத் தொடர்புடன் திகழ்வதால்! ஓணத்தின் தெய்வம் விஷ்ணு என்றால், ஆதிரையின் ஆண்டவனாய்த் திகழ்பவனோ ஆலவாயழகன்! அதனால்தான், திருவோணம், திருவாதிரை என்றே இந்த இரு நட்சத்திரங்களையும் ‘திரு’ சேர்த்து அழைக்கிறோம். ஆண்டவனின் சம்பந்தத்தால் நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல, நமக்குமே மதிப்பு கூடத்தான் செய்யும்!
மார்கழி மாதம் என்றால், வைகுண்ட ஏகாதசியும் ஆருத்ரா தரிசனமும்தான் அன்பர் நெஞ்சில் முன் நிற்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய நன்நாளில் கடைப்பிடிப்பது திருவாதிரை விரதம். சிவ பெருமானுக்கு மிக உகந்தது இந்த விரதம். சிவ பெருமானை ஆதிரையின் முதல்வன், ஆதிரையான் என்றெல்லாம் அழைக்கக் காரணமாக அமைந்ததும் இந்த நன்னாளும் ஆதிரை விரதமுமே!
ஆருத்ரா தரிசனம், சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி; ஓர் உருவம் ஓர் நாமம் இல்லாத பெருமான் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி, திருவாதிரையான் என்றழைத்து, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை வழிபடுகின்றோம்.
சிவபெருமானின் வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவம். இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அதனால் தான், நடராஜப் பெருமானுக்கு அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.
மார்கழித் திருவாதிரை நாளன்று ஆடல்வல்லானாம் நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். நடராச மூர்த்தி உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இது நடைபெற்றாலும், தில்லை சிதம்பரத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் திருவாதிரை விரதத்தையும் சிதம்பரத்தில் இருந்தபடி அனுஷ்டித்தல் மிகச் சிறப்பு. இந்நாளில்தான் ஆருத்திரா தரிசனத்துக்கு தில்லையில் பக்தர்கள் குவிகிறார்கள். இந் நன்னாளில் உபவாசம் இருந்து தில்லையம்பதியானின் திருநடம் கண்டு வருதல், இந்த விரதத்தின் ஓர் அங்கம்!
அன்று, நடராசப் பெருமானின் ஆனந்தத் தாண்டவக் கோலம் அலங்கரிக்கப்படும். அதில், பெருமானுக்கும் சிவகாமி அம்மைக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்து, ஷோடச உபசார பூஜைகள் செய்கிற வைபவத்தைக் கண்குளிரக் கண்டு, பெருமானின் அருள் கூடப் பெறுகிறார்கள் பக்தர்கள். திருவாதிரை நோன்பு இருந்து, ஆடல்வல்லானின் திருநடன தரிசனத்தைக் கண்ட பிறகு, உபவாசத்தை நிறைவு செய்து திருவாதிரை விரதத்தை முடிக்கின்றனர் அன்பர்கள். இந்த விரதம் மேற்கொண்டால், திருமண பாக்கியம் மட்டுமின்றி, சகல செல்வங்களும் கிடைக்கப் பெறுவர் என்பது வழிவழி நம்பிக்கை!
இந்தத் திருவாதிரை விழா தொன்றுதொட்டு நடந்து வருவதுதான்! திருமயிலையில் சாம்பலாகிய பூம்பாவையை உயிர்ப்பிக்க திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் இவ்விழா குறித்த ஒற்றைச் சொல் குறிப்பு காணப்படுகிறது. அந்நாட்களில் திருமயிலையில் கொண்டாடப்பட்ட சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரை நாளும் ஒன்றென்பதை இப்பாடல் நமக்குக் காட்டுகிறது.
ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்”
வியதீபாத யோக நாளில் நடராசர் திருநடனத்தினைக் காண்பது சிறப்பு என புராணங்கள் கூறுகின்றன. மார்கழி மாத வியதீபாத யோக நாளில் நடராசர் திருக் கோலம் காண்பவர்க்கு வாழ்வில் சுப பலன்கள் யாவும் கிட்டும்; வேண்டியன எல்லாம் பெறுவர்.
காரைக்கால் அம்மையார் தலையைக் கீழே ஊன்றி சரீரத்துடன் திருக்கைலாயம் சென்று இறைவனை வணங்கினார். ‘என் அம்மை வருகிறாள்’ என்றார் ஈசன். பின் திருத்தாண்டவம் ஆடிக் காட்டினார். இந்நடனத்தை திருவாலங்காடு தலத்தில் திருவாதிரை அன்று ஆடிக் காட்டுமாறு அம்மை வேண்ட, அவ்வாறே நடனமாடி நடராசர் என்ற திருப்பெயர் பெற்றார் பெருமான்.
ஆருத்ரா தரிசன நாளில் பெண்கள் மாங்கல்ய நோன்பு மேற்கொள்வது வழக்கத்தில் உள்ளது.
கோவை மாவட்டத்தில் திருவாதிரைத் திருநாள் வித்தியாசமான கோலத்தில் திகழ்கிறது. அன்று கோவை மாவட்டப் பெண்கள் மாங்கல்ய நோன்பு நோற்பர். அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொண்டு, மாங்கல்ய பலத்தை பெருமானிடம் வேண்டி நிற்கிறார்கள். பாவங்களும் தோஷங்களும் விலக நெய் தீபம் ஏற்றி வேண்டுகிறார்கள்.
கேரள மாநிலத்தில் மணமான புதுப் பெண்கள் ‘பூத்திருவாதிரை’ என்ற பெயரில் முதல் திருவாதிரை நாளைக் கொண்டாடுவார்கள். அன்று இப்பெண்கள் பத்து வித மலர்கள் பறித்து மணமாகாத பெண்களுக்குச் சூட்டி, ‘உங்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கட்டும்’ என ஆசி கூறுவது வழக்கத்தில் உள்ளது.
மார்கழி என்பது தேவர்களின் வைகறை பூஜை நேரம். எனவே சிதம்பரத்தில், திருவாதிரை நாளில் வைகறையில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். இந்தப் பத்து நாள் விழாவில் அனைத்து நாட்களிலும் நடராசர் வாகனத்தில் உலா வருவார். சந்திர பிரபை, சூரிய பிரபை, பூத வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், கைலாச வாகனம், பிட்சாண்டவர் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வரும் பெருமான், தேர்த் திருவிழா நாளில் மூலவரே தேரில் உலா வரும் அதிசயத்தையும் நிகழ்த்துகிறார். விழாவின் இறுதி நாளன்று அதிகாலை வெண் சப்பரத்தில் நடராசரின் திருவீதியுலா நடைபெறும். அன்று, நடராசர் ஆடுவதுபோலவே அசைந்தாடி, அந்தத் திருமேனியை அன்பர்கள் சுமந்து வருவது மெய் சிலிர்க்கும் காட்சி!
சிதம்பரத்துக்கு அடுத்து திருவாதிரை சிறப்புடன் கொண்டாடப் படுவது, ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ள உத்தரகோச மங்கை திருத்தலத்தில்! இவ்வாலயத்தில் ஆறடி உயர மரகத நடராசர் திருவுரு அமைந்துள்ளது. எப்போதும் சந்தனக் காப்பிட்டு, மரகத நடராஜர் அதனுள்ளே திகழ்கிறார். இக்கோவிலில் நடராசர் சந்நிதியும் மூடப்பட்டே இருக்கும். வெளியில் இருந்து தரிசிக்கலாம். ஆருத்ரா தரிசன விழா பத்து நாட்கள் நடக்கும். திருவாதிரை அன்று முதல் நாள் மரகத நடராசரின் சந்தனக்காப்பு களையப்படும். காலை 9.00 மணிக்கு காப்பு களைந்து அபிஷேகம் செய்வர். இரவு 11.00 மணி வரை மரகத மேனி நடராஜரை தரிசனம் செய்யலாம். விடியற்காலை சந்தனக் காப்பிடப்படும். பின் அடுத்த வருடம் தான் இக்காட்சியைக் காணலாம். இந்த சந்நிதியில் ஒரு மரகத லிங்கமும் படிக லிங்கமும் உள்ளது. இவ்விரு லிங்கத் திருமேனிகளும் வெளியில் எடுத்து, பக்தர்கள் முன்னிலையில் வைத்து, தினம் அபிஷேகம் செய்கிறார்கள். அதன் பின் லிங்கத் திருமேனிகளைப் பெட்டியில் வைத்து, நடராஜர் முன் பாதுகாப்பாக வைக்கிறார்கள்.
சென்னை சௌகார்பேட்டையில், ஆருத்ரா தரிசன நாளன்று, அந்தப் பகுதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், அருணாசலேஸ்வரர் கோவில், குமரக் கோட்டம் சிவசுப்ரமணியர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம் ஆகிய கோயில்களின் நடராசப் பெருமான்கள் ஒருசேர எழுந்தருள்வர். சாலை சந்திப்பில் நால்வரும் எழுந்தருள பக்தர்கள் ஆராதனை செய்வது விசேஷமான ஒன்று. சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும் வைபவம் இது.
கும்பகோணத்தில் அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தை ராஜாவாகிய கும்பேஸ்வரர் கோயிலை வலம் வருகின்றனர்.தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலில் இருந்தும் வரும் நடராஜரும், ஆதிகும்பேஸ்வரருக்கு தங்கள் மரியாதையைச் செலுத்த, பதிலுக்கு, ஆதிகும்பேஸ்வர ஸ்வாமியும் பதில் மரியாதை செய்வார்.
இந்நாளில், கோவை பேரூரில் பெருமானின் பின்னே பின்னித் தொங்கவிடப்பட்ட ஜடா முடியையும் கண்டு நாம் ஆனந்தம் பெறலாம்.
சப்த விடங்கத் தலமான திருநள்ளாற்றில் அருணோதயத்தில் ஒரே நேரத்தில் நடராஜருக்கும், தியாகராஜருக்கும் அபிஷேகம் நடப்பதைக் கண்டு நாம் ஆனந்தம் அடையலாம்.
ஆருத்ராவும் ஆதிரைக் களியும்!
ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைப்பது வழக்கம். தூய பக்தியுடன் எளிமையானதை அளித்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான்!
‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவே அன்று விரதம் உள்ள பக்தர்கள் ஒரு வாய் களி தின்கின்றனர். திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி தின்னாதார் நரகக்குழி என்பது பழமொழி.
களி என்றால், களிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் எனப் பொருள் படும். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உள்ளன்புடன் வழிபட்டால், நமக்கு ஆனந்தமான பேரின்பப் பெருவாழ்வை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைத்தல் என்பது!
“ஆடல்வல்லான்’ என்று போற்றப்படும் ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.
கோயிலின் உள்ளே சென்று வழிபட முடிய வில்லையா? அவர்களுக்காகத்தானே வெளியே எழுந்தருளி, தேரார் வீதியில் திருத்தேரில் வந்து நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் அருட் காட்சி அளித்து ஆனந்தம் பொழிகிறார்!
திருவாதிரை நன்னாளில், சிவாலயம் சென்று, பால், தயிர், பஞ்சாமிர்தம், பழங்கள் ஆகியவற்றால் ஆடல்வல்லானுக்கு அபிஷேகம் செய்து தரிசியுங்கள். ராகு – கேது, சனி கிரக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் கூடும்!
- செங்கோட்டை ஸ்ரீராம்