
திருப்புகழ்க் கதைகள் 229
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தகர நறுமலர் – பழநி
விதுரன் வீட்டில் தங்கினார்
ஸ்ரீ கிருஷ்ணர் குந்தியை மரியாதை நிமித்தமாகப் பார்க்க சென்றபொழுது தங்களுடைய மக்கள் காட்டில் அல்லலுருவதற்காகக் குந்தி கதறி அழுதாள். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் “பஞ்ச பாண்டவர்கள் தூக்கம், மகிழ்ச்சி, சோம்பல், பசி, தாகம், குளிர், வெப்பம் இவற்றை மறந்து துணிவுடன் இருப்பதைப் பெருமையாக நினைக்கின்றனர். இராஜ்யத்தை போரிட்டுப் பெறுவதும் வனத்தில் வசிப்பதும் அவர்களைப் பொறுத்த வரையில் ஒன்றுதான். அவர்களுக்கு இரண்டுமே பேரின்பம் அளிக்கக் கூடியது. எனவே அவர்களைப் பற்றி கவலைப் படாதே” என்று குந்தியை சமாதானப்படுத்தினார்.
ஸ்ரீ கிருஷ்ணர் தன் அத்தைக்கு சமாதானம் கூறும் முகமாக பாண்டவர்கள் தங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற்று, இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவார்கள் என்றும் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்கள் எந்த விதத்திலும் அமைதி பேச்சு வார்த்தைக்கு உடன்பட மாட்டார்கள் என்பதையும் போர் தவிர்க்க முடியாதது என்பதையும் இதன் மூலம் குந்திக்குத் தெரியப் படுத்தினார். இருப்பினும் பங்காளிகள் நடுவில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருப்பது பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்ய வேண்டும் என்ற அவரது கோட்பாட்டினை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே..
அன்றிரவு விதுரரின் வீட்டில் தங்கியிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் அவருடன் ஆலோசனை செய்கிறார். விதுரர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவர் தூது நிமித்தமாக அத்தினாபுரம் வந்திருக்கக் கூடாது என்கிறார். ஏன் எனில் துரியோதனன் எப்படியும் பாண்டவர்களுக்குரிய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். அதற்கு மறுமொழியாக ஸ்ரீ கிருஷ்ணர், தான் துரியோதனனுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக்கூறி அவனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வந்திருப்பதாகக் கூறுகிறார்.

மறுநாள் காலையில் துரியோதனனும் சகுனியும் ஸ்ரீ கிருஷ்ணரை தங்கள் சபைக்கு அழைத்துச் செல்ல விதுரரின் குடிலுக்கு வருகின்றனர். நிதானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு, அந்த அவையில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆற்றியப் பேருரையில் அவர் துரியோதனனிடம் பாண்டவர்களுடன் சமாதானமாக போகுமாறு கேட்டுக் கொள்கிறார். திருதராட்டினன் இந்த விஷயத்தில் மெளனமாக இருந்து விடுகிறான். “என்னால் ஒன்றும் செய்வதற்கில்லை. துரியோதனனைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறி விடுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மர், துரோணர் முதலியோர் காரண காரியங்களுடன் துரியோதனனிடம் செய்யவேண்டியதை எடுத்துரைகின்றனர். அவர்களுடைய புத்திமதிகள் துரியோதனனைக் கொதிப்படையச் செய்கிறது. முடிவில் அவன் கோபம் அதிகமாகி ஸ்ரீ கிருஷ்ணரை தூற்றும் அளவிற்கு சென்று விடுகிறான். பிறகு அவரை சிறை பிடிக்க தன் காவலர்களை ஏவுகிறான். ஸ்ரீ கிருஷ்ணர் விஸ்வரூபமெடுக்கிறார். துரியோதனாதிகளைத் தவிர ஏனையோருக்கு விஸ்வரூப தரிசனம் கிடைக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணரைத் தன் வீட்டில் வைத்து உபசரித்ததற்காகவும், பாண்டவர்களுடன் சமாதானமாகப் போகச் சொன்னதிற்காகவும் துரியோதனன் விதுரரையும் அவரது தாயையும் இழித்துப் பேசுகிறான். அதனால் கோபமுற்று விதுரர் தன்னிடமிருந்த உலகை வெல்லும் ஆற்றலுடைய வில்லை ஒடித்து எறிந்துவிடுகிறார். இந்த நிகழ்ச்சி நமக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறது. ஒருவர் நம்மைக் காட்டிலும் பெரியவரோ, சிறியவரோ, ஆணோ, பெண்ணோ, குழந்தையோ அல்லது முதியவரோ அவரது மனம் நோகும் வண்ணம் இகழ்ந்து பேசுதல் கூடாது.
இதனை “தருமதீபிகை”யில் கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார் மிக அழகாகப் பாடுவார்.
வாய்மொழியால் மற்றோர் மனம்துடிக்க வைதாலும்
தீயகொலை என்றே தெளிமினோ – நேயமறக்
கொன்றவுயிர் அப்பொழுதே குப்புறுமால் அவ்வுயிர்தான்
நின்றுதுயர் கூரும் நினைந்து.
அதாவது மற்றவர் மனம் துடிக்கும்படி கொடிய சொல்லை வாயால் சொல்லினும் அதுவும் தீய கொலையாகும். கொலை அப்பொழுதே உயிரைப் போக்கிவிடும், புலையான சொல்லோ உள்ளத்தில் நிலையாய் நின்று நாளும் சித்திரவதை செய்யும். இவ்வாறு செய்யாது ஒழுகினால், எவ்வழியும் இன்பம் தொடர்ந்துவரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.




