திருப்புகழ் கதைகள்: விதுரன் உணர்த்தும் நீதி!

Published:

thirupugazhkathaikal - 2026

திருப்புகழ்க் கதைகள் 230
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தகர நறுமலர் – பழநி
விதுரன் வரலாறு உணர்த்தும் தத்துவம்

தலையை வெட்டுதல், உடலைச் சிதைத்தல் முதலிய செயல்களால் கொலைகள் நிகழ்கின்றன. அவ்வாறு கொல்லப்பட்ட மனிதன் அப்பொழுதே இறந்து போகிறான்; அதன்பின் யாதொரு துன்பமும் தெரியாது. கொடிய பழிச்சொல் உடலை அழிக்காது; ஆயினும் உள்ளத்தை வதைத்து உயிரைத் துடிக்கச் செய்கிறது; அதனால் அது நெடிய அல்லலான பொல்லாத கொலையாம். தீயினால் சுடுவதினும் வாயினால் சுடுவது கொடிய துயரமாய் நெடிது நீண்டுள்ளது. இதனைத்தான் வள்ளுவர்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

என்று கூறுகிறார். விதுரன் நல்ல நீதிமான், சிறந்த வில் வீரன். அந்த மதிசிறந்தவரைத் துரியோதனன், அவையில் அனைவர் முன்னும் இகழ்ந்து பேசினான்.

முதல்வி ழைந்தொருவ னுடனி யைந்தபொருள்
..பற்றி யின்புறமு யங்கினும்,
அதிக மென்றபொரு ளொருவன் வேறுதரி
..அவனை யேயொழிய வறிவரோ,
பொதும டந்தையர்த மக்கு மண்ணிலிது
..புதுமை யல்லவவர் புதல்வனாம்,
விதுர னின்றவனொ டுறவு கொண்டதொர்வி
..யப்பை யென்சொலிவெ றுப்பதே. 126 – 27.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

(கிருட்டிணன் தூதுச் சருக்கம்)

துரியோதனன் கூறிய வசைமொழிகளை இப்பாடல் அழகாய்க் கூறுகிறது. பிறப்பை இளித்துப் பிழை தெளித்து நின்றது. அரசவையில் வைத்துத் தன்னைத் தாசிமகன் என்று ஏசியதைக் கேட்டதும் விதுரன் உள்ளம் கொதித்தது; உயிர் பதைத்தது; விரைந்தெழுந்து தன் வில்லை முறித்து எறிந்து இன்றோடு உன்னோடு என் உறவு ஒழிந்தது என்று உருத்து மொழிந்தான். அப்பொழுது அவன் உரைத்த மொழிகள் வெப்பமும் வெறுப்பும் விரிந்து வீரத் திறலோடு வெளிவரலாயின. அவை இங்கே உன்னி உணரவுரியன.

சொல்இ ரண்டுபுக லேனி னிசமரில்
..நின்று வெங்கணைதொ டேன்’எனா,
வில்இ ரண்டினுமு யர்ந்த வில்லதனை
..வேறி ரண்டுபட வெட்டினான்-
மல்இ ரண்டினையும் இருவர் ஆகிமுன்ம
..லைந்த காளமுகில் வந்துதன்
இல்இ ரண்டுதினம் வைகு தற்குலகில்
..எண்இ லாததவம் எய்தினான்.

அரச சபையில் வைத்துத் தன்னை வேசி மகன் என்று கூறிய அந்த வசைமொழி விதுரனுடைய உள்ளத்தை ஓயாமல் தகித்து வந்தது. ஒருவனை இழிவாகப் பழித்துப் பேசுவது கொல்லுகின்ற கொலையினும் கொடியது; தொலையாத துன்பமுடையது என்பதை உலகம் அவன் பால் உணர்ந்து தெளிந்தது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இன்சொல் எவரையும் உறவாக்கி இன்பம் தருகிறது; புன்சொல் எவ்வழியும் வெவ்விய பகைகளை விளைத்து வெந்துயர் புரிகின்றது. உரையின் நலன் அளவே உயர்வுகள் உளவாகின்றன. இதனை சிறுபஞ்சமூலம்

இன்சொலான் ஆகுங் கிளைமை இயல்பில்லா
வன்சொல்லின் ஆகும் பகைமைமன் – மென்சொல்லின்
ஓ’ய்’வில்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்
வீவில்லா வீடாய் விடும்.

என இனிய சொல்லால் வரும் உறுதி நலங்களை உணர்த்துகிறது. ஏலாதியில் இதனைப் பற்றிக் கூறும்போது

சிதையுரையான் செற்றம் உரையான்சீ(று) இல்லான்
இயல்புரையான் ஈனம் உரையான் நசையவர்க்குக்
கூடுவ(து) ஈவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து.

யாருக்கும் அல்லல் நேராமல் நல்ல வார்த்தைகளையே பேசிவரின் அவனைத் தேவர்கள் ஆசையோடு விரும்பி மகிழ்வர் எனக் கணிமேதையார் கூறுகிறார்.

Related articles

Recent articles

spot_img