spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: மருமலரினன்!

திருப்புகழ் கதைகள்: மருமலரினன்!

- Advertisement -

மருமலரினன் – பழநி

திருப்புகழ்க் கதைகள் 255
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியெண்பத்தி ஒன்றாவது திருப்புகழ், ‘மருமலரினன்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும்.

இத்திருப்புகழில் “பழநியப்பா, பிறப்பு இறப்பைக் கடக்க, உமது திருவடியை வணங்கும் பேற்றை அருள்” என அருணகிரியார் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
மதியொடுபி றந்து முன்பெய் …… வதையாலே

வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
மதலையென வந்து குன்றின் …… வடிவாகி

இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
இரவுபகல் கொண்டொ டுங்கி …… யசடாகும்

இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
னிணையடிவ ணங்க என்று …… பெறுவேனோ

திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
திகழெரியி டுங்கு ரங்கை …… நெகிழாத

திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
செறிவுடன றிந்து வென்ற …… பொறியாளர்

பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபத நண்ப ரன்பின் …… மருகோனே

பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
பழநிமலை வந்த மர்ந்த …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – இலக்குமியான சீதாதேவியுடன் அயோத்திமா நகரை விட்டு நீங்கி இருண்ட காட்டில் நடந்தவரும், இலங்கா புரியில் பெரிய தீ வைத்த அனுமானைக் கைவிடாதவரும், உறுதியுள்ள முத்தியை வழங்குபவரும், கம்சன் அனுப்பிய நயவஞ்சகச் சூழ்ச்சிகளை எல்லாம் கூர்மையாக அறிந்து வென்றவரும், அறிவாளரும், அன்புடன் மகிழ்ந்து வணங்கும் மருதமரங்களின் இடையே தவழ்ந்து சென்றவரும், பரமபதத்தின் நண்பருமாகிய திருமாலின் அன்புள்ள மருகரே;

தாமரை மலர்மீது வண்டுகள் ஒலிக்கின்ற சுனைகள் பல விளங்குகின்ற பரிசுத்தமான பழநிமலை மீது வந்து எழுந்தருளியிருக்கின்ற பெருமிதம் உடையவரே; நறுமணமுடைய நற்றாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விதித்து அனுப்ப, வினையை நுகரும் பொருட்டு, முடிவான பத்தாம் மாதத்தில் கருவினின்றும் பிறந்து, முன் செய்த வினையால் வந்த வகையை அறிந்து எழுந்து, தாய்ப்பாலை உண்டு, அழகிய மகவு என வளர்ந்து, குன்றுபோல் பருத்து, அழகுடன் விளங்கி, பெரிய காம மயக்கம் கொண்டு துவண்டு, பொதுமகளிரது வீடுகள் தோறும் சென்று, இரவு பகல் தெரியாது அங்கு அவருடன் உறவுகொண்டு, அதனால் கருவிகாரணங்கள் ஒடுங்கி, மூடனாகும் அடியேன், நல்வினை தீவினையென்ற வினைகளால் மூடப்பெற்ற பிறப்பு இறப்பு என்ற இவற்றை அகன்று, உமது இரு சரணாரவிந்தங்களை, வணங்கும் பேற்றினை என்று பெறுவேனோ? – என்பதாகும்.

இத்திருப்புகழில் ஸ்ரீ இராமாவதாரக் காட்சிகள் சிலவற்றையும், ஸ்ரீ கிருஷ்ணாவதாரக் காட்சிகள் சிலவற்றையும், மனிதனின் பிறப்பு பற்றிய தத்துவத்தையும் அருணகிரியார் அழகாக எடுத்தியம்புகிறார். இப்பிறவி வந்ததன் நோக்கம் பிறப்பு இறப்பில்லாத பெருமானை நினைந்து இருவினையற்றி, இனிப் பிறவாத தன்மையைப் பெறுதலேயாம்.

அதனை மறந்து மண், பெண், பொன், முதலிய ஆசைக் கடலில் வீழ்ந்து அறிவு மயங்கி கானல் நீர் கண்டு மயங்கும் மான் போல், துன்பத்தை இன்பமெனக் கருதி, விழலுக்கு நீரிறைத்து மக்கள் தமது அரிய மானுடப் பிறப்பை வறிதே கெடுத்து மடிகின்றார்கள். இறைவனை வணங்கினால் இந்த மாயப் பிறப்பறுக்கும் வகை சொல்லுவான். இதனை தாயுமானவர்

வந்த வரவை மறந்து-மிக்க
மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும்
இந்த மயக்கை அறுக்க-எனக்கு
எந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான்.

எனக் கூறுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe