திருப்புகழ் கதைகள்: மயிலுமாடி நீயுமாடி வரவேண்டும்!

Published:

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள்பகுதி 277
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியம்-

எந்தத் திகையினும் – சுவாமி மலை
மயிலுமாடி நீயுமாடி வரவேண்டும்

அன்னை உமையம்மபயின் மடியில் முருகன் இருக்கிறார். உமையம்மை அவரை பிடித்துக்கொண்டிருக்கிறார். எனவே அவரை வரவழைக்க, அங்கே அருகாமையில் இருந்த மயிலின் ஆட்டத்தை வாழ்த்தி அருணகிரியார் ஒரு திருப்புகழ் பாடுகிறார்.

அந்த இசையை கேட்டதும் மயில் ஆனந்த பரவசமாகி அற்புதமான நடனம் ஒன்றை ஆடியது. மயிலின் இந்த ஆனந்த பரவச நடனத்தைக் கண்டு அங்கிருந்த அனைவரும் உமாதேவியார் உட்பட மெய்மறந்து இன்ப நிலை எய்தினர். மயிலின் அற்புத நடனத்தால் முருகனைப் பிடித்திருந்த அன்னையின் பிடி நழுவிற்று. அவ்வளவுதான், இதற்குத்தானே காத்துக் கொண்டிருந்தார் முருகன்! அன்னையின் பிடி இளகியதும் உடனே மடியிலிருந்து துள்ளிக் குதித்து மயிலின் மீது ஏறி நொடியில் திருவண்ணாமலை கோயிலின் ஈசான திசையில் உள்ள தூணிலிருந்து வெளிப்பட்டு அனைவருக்கும் காட்சி அளித்தார்! மன்னன் பிரபுட தேவன் கந்தவேள் தரிசனம் பெற்று ஆனந்த கூத்து ஆடினான். முருகன் தோன்றிய அந்தத் தூணை கர்ப்பக்கிரகத்தில் அமைத்து அதைச்சுற்றி ஒரு கோயிலையே கட்டினான் அவன். அந்தக் கோயில்தான் திருவண்ணாமலை ஷேத்திரத்தில் சிவகங்கைக் கரையில் ஆயிரங்கால் மண்டபத்திற்குத் தென் திசையில் கம்பத்திளையனார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அன்னையின் மடியிலிருந்து முருகன் துள்ளிக் குதித்து மயில் மீது தாவி ஏறியவுடன் அருணகிரியார் பாடிய மிகப் பிரசித்த பாடல்தான், “அதல சேடனாராட அகிலமேரு மீதாட, அபின காளி தானாட” என்று துவங்கும் திருப்புகழ் பாடல். இந்தப் பாடலில் முருகன் மயில் மீது ஆடிவரும்போது அவருடன் கூட யார் யாரெல்லாம் ஆடி வர வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலே கொடுத்திருக்கிறார்!

அதல சேட னாராட அகில மேரு மீதாட

     அபின காளி தானாட …… அவளோடன்

றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட

     அருகு பூத வேதாள …… மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட

     மருவு வானு ளோராட …… மதியாட

வனச மாமி யாராட நெடிய மாம னாராட

     மயிலு மாடி நீயாடி …… வரவேணும்

கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு

     கருத லார்கள் மாசேனை …… பொடியாகக்

கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது

     கனக வேத கோடூதி …… அலைமோதும்

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத

     உவண மூர்தி மாமாயன் …… மருகோனே

உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ

     னுளமு மாட வாழ்தேவர் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – பூமிக்கு கீழேயுள்ள அதல, விதல, சுதல, ரசாதல, தலாதல, மகாதல, பாதாள என்ற லோகங்களில்   அதல லோகத்தில் இருக்கும் ஆதிசேஷன் நடனம் ஆடவும், பூமி மீதுள்ள மேருமலை அசைந்தாடவும், மாறுபாடு இன்றி சிவதாண்டவத்துக்கு ஒற்றுமையாக காளி தான் ஆடவும், அக்காளியோடு அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி காலை ஊர்த்துவகோலத்தில் வீசி போட்டியிட்டவரும் ரிஷப வாகனத்தில் ஏறுவாரும் ஆகிய சிவனும் ஆடவும், அருகில் சிவகணங்களாகிய பூதங்களும் பேய்களும் ஆடவும், இனிமை மிக்க, அம்மையப்பனாரின் ஆடலுக்கு இசை இசைக்கும் சரஸ்வதியும் ஆடவும், தாமரை மலரில் அமரும் வேதங்கள் ஓதும் பிரமனும் ஆடவும், அருகில் பொருந்திய தேவர்கள் எல்லாம் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரையாள் நின் மாமியார் லக்ஷ்மியும் ஆடவும், திரிவிக்ரமாவதரம் எடுத்த நின் மாமனார் விஷ்ணுவும் ஆடவும், நீ ஏறிவரும் மயிலும் ஆடி, நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்.

கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் எதிர்த்துச் செலுத்திய அம்பு மழையில் பெரும் பகைவர்களாகிய கெளரவர்கள் பெரிய சேனை பொடிபட உதவியவரும், கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் குழலை ஊதியவரும், அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து, தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும் சங்கை ஊதியவரும், அலை வீசும் பாற்கடல் மீதிலே பாம்பணையில் பள்ளி கொண்டவரும், வாமனாவதாரத்தில் திரிவிக்ரமனாகி  உலகத்தை அளந்து மூடிய பாதத்தாரும், கருடனை வாகனமாகக் கொண்டவரும், ஆன மாமாயன் திருமாலின் மருமகனே அன்றலர்ந்த மலர் மாலையை அணிமார்பனாகிய திருவண்ணாமலையை ஆண்ட ப்ரபுட தேவ மஹாராஜனின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம் அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே – என்பதாகும்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இந்தப் பாடலை அனுதினமும் பக்தியுடன் பாராயணம் செய்வோர் என்றோ ஒருநாள் தம் வாழ்நாளில் தம் அகக் கண்களிலாவது முருகன் தரிசனம் பெறுவர் என்பது பெரும் நம்பிக்கை ஆகும்.

Related articles

Recent articles

spot_img