To Read it in other Indian languages…

Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ் கதைகள்: கதிரவன் எழுந்துலாவு…

திருப்புகழ் கதைகள்: கதிரவன் எழுந்துலாவு…

இவர்களைப் புலவர்கள் எனக் கூறலாமா? அல்லது அறிவியல் அறிஞர்கள் எனக் கூறலாமா? நாளை விரிவாகக் காணலாம்.

thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 291
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கதிரவன் எழுந்து – சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றிப் பத்தாவது திருப்புகழான “கதிரவன் எழுந்து” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, உலோபிகளிடம் சென்று பாடி அழிவுறாமல் என்னைக்  காத்தருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது

     கடலளவு கண்டு மாய …… மருளாலே

கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்

     கவினறந டந்து தேயும் …… வகையேபோய்

இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு

     மிடமிடமி தென்று நோர்வு …… படையாதே

இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச

     லிரவுபகல் சென்று வாடி …… யுழல்வேனோ

மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக

     மலர்வளநி றைந்த பாளை …… மலரூடே

வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட

     மதிநிழலி டுஞ்சு வாமி …… மலைவாழ்வே

அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப

     அணிமயில்வி ரும்பி யேறு …… மிளையோனே

அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை

     அருள்புதல்வ அண்ட ராஜர் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – வண்டுகள் நிறைந்து கூடி வாசனையுள்ள தேனைக் குடித்து, பாக்கு மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே சாமவேத கானம்போல் வகை வகையான ஒலிகளைச் செய்ய, சந்திரனைப்போல் குளிர்ந்துள்ள சுவாமிமலையில் எழுந்தருளி உள்ளவரே; உலகம் அதிரும்படி கடும் வாயு வேகமாக வருகின்ற நீலத்தோகையால் அழகுடைய மயிலில் விரும்பி ஏறுகின்ற இளம் பூரணரே;

     முறையோடு எல்லாவுலகங்களையும் படைத்து, அவற்றை நிலைபெறச் செய்கின்ற உமாதேவியார் ஈன்ற புதல்வரே; இந்திரர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே;

     சூரியன் உதித்துச் செல்லுகின்ற திசைகளின் அளவைச் சென்று கண்டும், அலைகள் மோதுகின்ற கடல் மீது பயணம்போய் அதன் எல்லையைக் கண்டும், உலக மாயையால் மருண்டு, பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் முடி காணும்படி, பூமி தேயவும் கால்கள் தேயவும் அழகு குலையுமாறு அலைந்து, இது நல்ல இடம் இது நல்ல இடம் என்று நாடோறும் உலோபிகளுடைய அருகில் சேர்ந்து, தக்க இடம் இதுதான் என்று தளர்ச்சியடையாமல் அந்த உலோபியரை இசைப்பாட்டாலும் உரைநடையாலும் புகழ்ந்தபோது, மெல்ல நழுவுகின்ற அந்த உலோபர்களின் வீடுகளில் இரவு பகலாகச் சென்று வாட்டமடைந்து உழலுவேனோ? – என்பதாகும்.

     கடவுளைப் பாடாமல் மனிதர்களைப் பாடும் புலவர்கள் பற்றி இத்திருப்புகழில் அருணகிறியார் குறிப்பிடுகிறார். சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் சென்று மறையும் வரை அது எவ்வளவு தூரம் சென்றது, எத்திசையில் சென்றது என்பதை அளப்பதுபோல, கடலின் மீது பயணம் செய்து அதன் எல்லையை அளப்பதுபோல, பூமியின் மீது நடந்து, நடந்து, பூமியைத் தாங்குகின்ற ஆதிசேடனின் தலை தெரியும் அளவிற்கு காலால் பூமியைத் தேய்த்து, நல்ல புரவலர்களைப் புலவர்கள் தேடுவார்கள் என அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

     அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில்தான் இத்தகைய சூரியனின் செலவை அதாவது இயக்கத்தை அளக்கின்ற, கடலின் பரப்பை அளக்கின்ற, பூமியின் பரப்பை அளக்கின்ற புலவர்கள் இருந்தார்களா? இவர்களைப் புலவர்கள் எனக் கூறலாமா? அல்லது அறிவியல் அறிஞர்கள் எனக் கூறலாமா? நாளை விரிவாகக் காணலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.