
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
நம் முனிவர்கள் அளித்த இலக்கியங்கள், நம் கலாச்சரத்திற்கும், தர்மத்திற்கும் வரலாலாற்றுக்கும் ஆதாரனமானவை. அவை வேதம், வேதாந்தம், புராணம், மந்திர சாஸ்திரங்கள், காவியங்கள், கலைகள், மருத்துவம், நீதி சாஸ்திர நூல்கள் போன்றவை, இதில் சிறப்பு என்னவென்றால், இவை ஒன்றோடொன்று பரஸ்பரம் தொடர்பு கொண்டவை. வேறு வேறானவை அல்ல. இந்தத் தொடர்பை கணக்கில் கொண்டு நம் இலக்கியங்களை ஆராய வேண்டும்.
ஆனால் நம் தேசத்தை முற்றுகையிட்டு, நம்மை ஆண்டவர்கள், நம் தேச வரலாற்றையும், சம்பிரதாயங்களையும் இலக்கியங்களையும் தம் பார்வையால் பார்த்து, அவற்றை வெவ்வேறாகக் கண்டு, தமக்குத் தோன்றிய விதத்தில் காலக் கணக்கீடு செய்தார்கள். அவர்களால் தவறாக எழுதப்பட்ட வரலாற்றை நம்மைக் கொண்டு படிக்கச் செய்தார்கள். அவர்களின் சிந்தனை விதமே சரியானது என்ற உணர்வை நம் தேசத்தின் ஆன்மீக அறிஞர்களுக்கும் பழக்கினார்கள்.
அதன் தாக்கத்தால், அறிஞர்கள் சிலர், வேதத்தையும், வேதாந்தத்தையும் மதிப்பார்கள். ஆனால் புராணங்களைக் கீழானதாக நினைப்பார்கள். உபாசனை நூல்களை நிராகரிப்பார்கள்.
இவையனைத்தும், ஒன்றோடொன்று இணைந்து, பரஸ்பரம் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்பதை அவர்கள் உணர்வதில்லை. புராணங்கள் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்படும் பல கருத்துக்கள், நம் அற்புதமான அறிவியல் செல்வங்களைப் பேசுகின்றன.
புராணங்கள் பதினெட்டுதானா? எல்லாமே வியாசர் எழுதியதா? போன்ற சந்தேகங்கள் உள்ளன. ஆனால் வியாசருக்கு முன்னரும் பின்னரும் கூட புராணங்களின் வடிவமைப்பில் வந்த நூல்கள் பல உள்ளன. அவற்றின் ஆசிரியர்கள் யார்? எந்த காலத்தைச் சேர்ந்தவர்? போன்றவற்றை பற்றி சர்ச்சை செய்வதை விட, அவற்றில் காணப்படும் பயன்தரும் கருத்துக்களை ஏற்பது சிறந்தது.
புராணங்களை ஆதாரமாகக் கொண்டு, ஜோதிடம், கோள்களின் இயக்கம், நட்சத்திரங்களின் இடமாற்றம், போன்ற விவரங்களைக் கணக்கிட்டு உண்மையான பாரத தேச வரலாற்றை எழுதிய ‘பாரத சரித்திர பாஸ்கரர்கள்’ என்று போற்றப்பட்ட ‘ஸ்ரீ கோட்ட வேங்கடாசலம்’ போன்ற மகநீயர்களின் நூல்களை, நம் தேசத்தின் மேதாவிகளும், கல்வி அமைப்புகளும் ஏற்பதில்லை. மேற்கத்தியர்கள் எழுதிய தவறான வரலாறுகளே பாட நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆய்வுகளும் அவர்களின் கண்ணோட்டத்திலேயே நடந்தன.
வினாடி, நொடி, அதற்கும் குறைவான நுண்ணிய கால அலகுகள், சூட்சும காலங்கள் முதல் யுகம், மகா யுகம், கல்பம் போன்ற பெருங்கால வரையறைகளையும் கணித்துக் கூறிய விஞ்ஞானம் நம்முடையது. மகாகவி திரு. விஸ்வாத சத்தியநாராயணா போன்ற மகநீயர்கள் இந்த விஞ்ஞானத்தை ஆதாரப் பூர்வமாக நிரூபித்து உயர்ந்த நூல்களை தெலுங்கில் படைத்தனர்.
ஆனால் நம்மவர்கள் பலர் அவற்றைக் கூர்ந்து படிக்கவில்லை. அவர்கள் கூறிய ஆதாரங்களாக ஏற்கவில்லை. புராணங்களில் காணப்படும் சங்கேத மொழிகளையும், குறியீடுகளையும், சாஸ்திரக் கருத்துக்களையும் ஆழமாக ஆராயவில்லை. ஒருவேளை அவ்வாறு ஆராய்ந்திருந்தால், பல அற்புதமான கருத்துக்களை உலகிற்கு அளித்திருக்க முடியும்.
தற்போது இளையதலைமுறையினர் சிலர் அவற்றைப் பயின்று, நேர்மையான முறையில் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால், கல்வி நிலையங்களும், அதிகார அமைப்புகளும் அவற்றை ஏற்கும் காலம் வர வேண்டும்.
புராணங்களை வரலாற்று நூல்கள் என்று கூறாவிட்டாலும், வரலாற்றுக்குத் தேவையான சான்றுகள் பலவற்றை அவற்றிலிருந்து பெற முடியும். ஆனால் வரலாற்று மனிதர்களிடம் தெய்வீகத்தைக் கற்பித்து, இல்லாததும் பொல்லாததுமான கற்பனைகளைச் செய்தார்கள் என்று சிலர் ஏளனம் செய்கின்றனர். ஆனால், பண்டைக் கால பாரத தேசத்தில், தெய்வீகத்தை இயல்பாகப் பெற்ற மகநீயர்கள் இருந்தார்கள். அதை அறிய இயலாத, நவீனகால ‘திரித்தல்’ பார்வையைப் பற்றி என்ன கூறுவது?
புராணம் முதலான நூல்களில் வரலாற்றுக் கருத்துக்களோடு கூட பூகோள கருத்துக்களும் உள்ளன. அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த சில சொற்களும், மொழியும் உடனடியாக நமக்குப் பொருள் புரியாமல் போகலாம். ஆனால், அவற்றில் குறித்துள்ள இடங்கள், அதே பெயர்களோடு, சிறிதளவு மாற்றங்களோடு இன்றும் உள்ளன.
இன்னொரு முக்கியமான விஷயம், தீர்த்த, க்ஷேத்திரங்களின் வர்ணனை. அவற்றை விளக்கும் புராணங்களில், முக்கியமான தீர்த்தம் அல்லது முக்கியமான திருத்தலம் பற்றிக் கூறி, அவற்றுக்கு எந்தெந்த திசையில் என்னென்ன இருந்தன, எந்த அளவீடுகளில், எத்தனை தொலைவில் இருந்தன என்று விவரித்துள்ளார்கள்.
இதில் வியப்பு என்வென்றால் அவை இப்போதும் அதே போல் அங்கெல்லாம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றில் பல இன்று சிதிலமாகிப் பாழ்டைந்து பண்டைய புகழுக்கு வெறும் அடையாளங்களாக நிற்கின்றன. அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள், எந்த நூலையும் பார்க்காமலே, அந்த தீர்த்தங்களின் தெய்வீகத்தை உணர்ந்து, மிகவும் அன்பாக வணங்கி வருவதைக் காண முடிகிறது.
ஸ்காந்த புராணத்தில் இருக்கும் காசி கண்டத்தில், பல்வேறு தீர்த்த, க்ஷேத்திரங்கள் விவரிக்கபப்ட்டுள்ளன. அவற்றைப் படித்து, வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பேராசிரியர் ஒரு சித்திரத்தை வரைந்து எடுத்துக் கொண்டு காசிக்கு வந்தார். அங்கிருந்த பல்கலைக் கழகத்தின் ஒரு ஆசிரியரின் உதவியோடு, அந்ததந்த க்ஷேத்திரங்களை தரிசித்தார். அவை குறித்த சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அதைப் பார்த்து நம் காசி பல்கலைக் கழக ஆசிரியர் வியந்ததோடு, தானும் உற்சாகம் பெற்று, பல ஆய்வுகளை நடத்தி, அந்த இடங்களின் சிறப்புகளை விவரித்தார்.
அதே போல், புராணங்களை ஆதாரமாகக் கொண்டு, ‘ராம ஜன்ம பூமி’ எந்த இடத்தில், எந்த எல்லையில் இருந்தது என்பதையும், அதன் பல்வேறு திக்குகளில் என்னென்ன இடங்கள் இருந்தன என்பதையும் ஆராய்ந்து, ‘அது வெறும் இன்றைய ஹிந்துக்களின் நம்பிக்கையல்ல. அவர்களின் நம்பிக்கைக்கு சாஸ்திர ஆதாரங்கள் உளளன’ என்று திரு. பராசரர் போன்ற மேதைகள் விவரித்து, ‘ராம ஜன்ம பூமி’ நூற்றுக்கு நூறு பங்கு ஹிந்துக்களுடையதே என்று நிரூபித்தார்கள்.
ராஜா விக்கிரமாதித்யன் நிர்மாணித்த, பெருங்கோவில் காலப் போக்கில் முகலாய அரசர் பாபரால் அழிக்கப்பட்ட உண்மையை நிரூபிப்பதற்கு அங்கு கிடைத்த சிற்பங்களின் எச்சங்கள் உதவி புரிந்தன. அதன் மூலம் சாதகமான தீர்ப்பையும், ராம ஜன்ம பூமியையும் நாம பெற முடிந்தது.
விக்கிரமாதித்யன் போன்ற பேரரசர்களின் சரித்திரத்தையே, வரலாற்றில் எழுதாத மேல்நாட்டு மேதைமையை நாம் நம்புகிறோம். ஆனால் அப்படிப்பட்ட மகாபுருஷரை மறந்து, எத்தகைய உயர்ந்த வரலாறுகளை நாம் இழந்து நிற்கிறோம் என்பதைக் கூட அறியாமல் இருக்கிறோம்.
பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி வரை இருக்கும் தீர்த்தங்கள், க்ஷேத்திரங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், போன்றவற்றை புராணங்கள் எவ்விதம் விவரித்துள்ளன என்று ஆராய்ந்து, எடுத்துரைத்தால், பாரத தேசத்தின் பெருமையையும் அற்புதங்களையும் உலகத்தாருக்கு உணர்த்த முடியும். அவ்விதமாக, நேர்மறை உணர்வோடு பண்டைய இலக்கியங்களை ஆராய வேண்டும்.
(தலையங்கம், ருஷிபீடம், தெலுங்கு மாத இதழ், ஏப்ரல், 2௦25)