கேள்வி:- ஒன்பது நாட்களிலும் நவராத்திரி பூஜை செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்கள் த்ரி ராத்ரி விரதம் கடைபிடிக்கலாம் என்று கூறப்படுகிறேதே. அதை பற்றி கூறுங்கள்.
பதில்;- நவராத்ரி பூஜை மிகவும் முக்கியமானது. சிறந்த பலன்களை அளிக்கக் கூடியது. சரத் நவராத்ரி அல்லது தேவி நவராத்ரி என்பது ஒன்பது நாட்களும் பூஜை செய்து தேவியை வழிபடுவதாகும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் த்ரிதியை முதல் ஏழு நாட்கள் பூஜை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது சப்த ராத்திரி விரதம் எனப்படும். அதுவும் முடியாத போது பஞ்சமி முதல் தொடங்கி ஐந்து நாட்கள் பூஜை செய்யலாம். அது பஞ்ச ராத்திரி விரதம் எனப்படுகிறது. அதுவும் இயலாதவர்கள் சப்தமி அன்று தொடங்கி அஷ்டமி, நவமி மூன்று நாட்களும் பூஜை செய்யும் த்ரி ராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதுவாவது செய்து தீர வேண்டும் என்று கூறப்படுகிறது. இது கூட செய்ய இயலாதவர்கள் நவமி அன்று ஒரு நாளாவது பூஜை செய்ய வேண்டும். நவமி பூஜை மிகவும் முக்கியமானது. தசமி அன்று மட்டும் விஜய தசமி பூஜை செய்தால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டாது. ஒன்பது நாட்களும் செய்ய இயலாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது கட்டாயம் பூஜை செய்ய வேண்டும். நவராத்ரி, சப்த ராத்திரி, பஞ்ச ராத்திரி, த்ரி ராத்திரி, ஏக ராத்திரி என்று இத்தனை விதங்கள் கூறப்பட்டுள்ளன.
த்ரி ராத்திரி விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் எப்போதுமே மூன்று என்ற எண்ணிக்கைக்கு சிறப்பு உள்ளது. மூன்று முறை மூன்று வரும் போது அது ஒன்பதாகிறது. சரத் நவராத்திரியில் மூன்று முறை மூன்று வருகிறது. இதில் ஒரு மூன்றையாவது நாம் செய்ய வேண்டும்.
த்ரி சக்தி சொரூபமான தேவியை மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி ரூபிணியாக பூஜிக்கிறோம். தேவியானவள் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கா என்றும் வர்ணிக்கப்படுகிறாள். த்ரி என்பது பிரபஞ்ச படைப்பைக் குறிக்கும் அற்புதமான பூரண எண்ணிக்கை. த்ரி கரணம் என்பது மனம், வாக்கு, செயல் என்னும் மூன்று. அதே போல் காலமும் த்ரி காலமாக உள்ளது. எனவே நம் மனம், வாக்கு, செயல் மூன்றையும் முக்காலங்களிலும் சுத்தம் செய்து நம் சங்கல்பங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த த்ரி ராத்திரி விரத பூஜை உபயோகப்படுகிறது.
எனவே நவராத்ரி ஒன்பது நாட்களும் பூஜிக்க இயலாதவர்கள் இறுதி மூன்று நாட்களாவது கட்டாயம் தேவியை வழிபட்டு உய்வு பெற வேண்டும் நம்
முன்னோர் விதித்துள்ளனர்.
தெலுங்கில் – டாக்டர் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்



