சபரிமலை சந்நிதானம் மேல்சாந்தி தேர்வு

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.
சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு மேல்சாந்திகள் புதிதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் ஆண்டு முழுவதும் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்ய வேண்டும்.
இந்நிலையில், மேல்சாந்தி குலுக்கல் தேர்வு இன்று காலை சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பந்தளம் அரண்மனையை சேர்ந்தவர்கள்தான் மேல்சாந்தி குலுக்கல் தேர்வு செய்ய வேண்டும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த எல்.கே.ஜி. மாணவன் வியாஸ்வர்மா சபரிமலை மேல்சாந்திக்கான துண்டு சீட்டுகளை எடுத்தார். ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட 16 பேர் பெயர் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் ஒரு பாத்திரத்திலும், மற்றொரு பாத்திரத்தில் 15 எழுதப்படாத துண்டு சீட்டுகளும், ஒரு சீட்டில் மேல்சாந்தி என்று எழுதியும் போடப்பட்டது. இதில் 12-வது முறை எடுக்கப்பட்ட சீட்டில் எர்ணாகுளம் கோதமங்கலத்தை சேர்ந்த பி.கே. நாராயணன் நம்பூதிரி பெயருக்கு நேராக மேல்சாந்தி சீட்டு வந்ததை தொடர்ந்து அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதுபோல மாளிகைப்புறம் கோயிலுக்கான தேர்வில் மூன்றாம் வகுப்பு மாணவி கவுதமி துண்டு சீட்டுகளை எடுத்தார். ஒன்பது பேர் பட்டியலில் 3-வது பெயராக பி.எம். மனோஜ் பெயருக்கு நேராக மேலசாந்தி சீட்டு வந்ததை தொடர்ந்து அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சபரிமலையில் மேல்சாந்தியின் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.