“கணபதியும் நானே!” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (நெட்டில் கிடைத்ததால் தட்டச்சு கொஞ்சமே) நானும் என் மைத்துனர் பெண் ஜானாவும் அடிக்கடி காஞ்சி சென்று பெரியவளை தரிசனம் செய்வோம். ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி வெவ்வேறு காணிக்கைகளை சமர்பிப்போம். ஒரு சமயம் நாங்கள் காஞ்சிபுரம் போக நினைத்தபோது ” இந்த முறை பெரியவாளுக்கு அழகாக அருகம்புல் மாலை கொண்டு போகலாம்” என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது. ஓரத்தில் அரளிப்பூவை பார்டர் மாதிரி அமைத்து பெரியதாக அருகம்புல் மாலை மிக அழகாகத் தயாரித்துக் கொண்டு போனோம். அடுத்த நாள் காலை ஸ்ரீ மடத்திற்குப் போகும்போது எட்டு மணி ஆகிவிட்டது. பெரியவா எல்லோருடனும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் கொண்டு போன மாலைப் பொட்டலத்தையும் கல்கண்டுப் பொட்டலத்தையும் எதிரில் வைத்து விட்டோம். பெரியவா அதை எடுத்து ஓரமாகக் தள்ளி வைத்து விட்டார். அதில் என்ன இருக்கிறது என்று கூடப் பார்க்கவில்லை. நாங்களும் நின்றபடியே தரிசனம் செய்து கொண்டிருந்தோம். சுமார் பத்து மணிக்கு ஒரு பெண்மணி வந்தார். அவர் கையில் ஒரு பிள்ளையார் வெள்ளிக் கவசம் நல்ல வேலைப்பாடுடன் மிக அழகாக இருந்தது. பெரியவா உத்தரவுப்படி அவர்கள் ஊர் கோவிலில் பிள்ளையாருக்கு வெள்ளிக் கவசம் செய்து அதை பெரியவா அனுக்ரஹத்திற்காக எடுத்து வந்திருக்கிறார், அந்த பெண்மணி. பெரியவா அந்தக் கவசத்தை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் ” அதை எடு ” என்று கையைக் காட்டினார். ஓரமாக இருந்த அருகம்புல் மாலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துக் கொடுத்தார், அவர். ‘பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று, பெரியவா கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால், அது பிள்ளையாருக்கு உரிய பொருள் என்று எப்படித் தெரிந்து கொண்டார் ? மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்குச் சாற்றினார். அளவெடுத்தது போல் மாலை அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தன் மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலு பக்கமும் திரும்பி திரும்பி தரிசனம் கொடுத்தார்கள், பெரியவாள். நாங்கள் மெய் சிலிர்த்துப் போனோம். கவசம் கொண்டு வந்த பரம பக்தையான அந்தப் பெண்மணி கண்களில் நீர் மல்க கையை கூப்பிக் கொண்டு நின்றார். அப்படியே அதை அப்பெண்மணி கையில் கொடுக்கச் சொன்னார் பெரியவர்கள். நாங்கள் எடுத்துப் போனது மிகவும் சாதாரணமான பொருள் தான் ! ஆனால், எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு இருக்கிறதே, அதற்கு அளவே இல்லை ! காரணம், தனக்கும் கணபதிக்கும் உள்ள அபேதத்தை எப்படியோ உணர்த்திவிட்டார்கள், பெரியவா.
“கணபதியும் நானே!”
Popular Categories