December 4, 2024, 9:18 PM
25.6 C
Chennai

சுவாமி மணவாள மாமுனிகள் திருவரசு புனர்நிர்மாணம்

mamuni4 வைணவ சம்பிரதாயத்தில், இன்றிலிருந்து சுமார் 600 வருடங்களுக்கு முற்பட்டவரான, ஆசார்ய பரம்பரையில் கடைசி ஆசார்யராகப் போற்றப்படும் சுவாமி மணவாள மாமுனிகளின் திருவரசு என்று கருதப்படும் இடம் இது. தற்போது இடப் பிரச்னை காரணமாக  நீதிமன்றத்தின் பிடியில் வழக்கில் சிக்கியுள்ளது இந்த இடம். தற்போது சந்நிதி அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தின் பின்புறம் உள்ள தோப்புப் பகுதியில்தான் முன்னர் ஒரு நகரமே இருந்ததாம். சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட இடம். இந்தச் சிறு நகரில் நான்கு வேதங்களையும் ஓதிய வேதியர் வாழ்ந்துவந்தனராம். இங்கேதான் வைணவ ஆசார்யப் பெருமக்கள் சிலரும் வசித்து வந்தனராம்.  mamuni1திருவரங்கத்தை ஒட்டிய வீதிகளில் அரையர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோயில் கைங்கர்யபரர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும், திருவரங்கப் பெருநகரின் பழங்காலக் கட்டமைப்பில், கொள்ளிடக் கரையை ஒட்டிய இந்தப் பகுதியில்  சிறு     நகரமாக சதுர் வேதி மங்கலம் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் முன்னர் கேசவப் பெருமாள் கோவில் ஒன்று இருந்துள்ளது என்றும், இதற்கு நேர் எதிரே, 500 மீட்டர் தொலைவுக்குள் கொள்ளிடக் கரை இருந்ததாகவும் தெரிகிறது. இந்தச் சிறு நகரில்தான், சுவாமி மணவாள மாமுனிகளின் திருவரசு அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது சீரமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்தச் சிறிய இடத்துக்குப் பின்புறத்தில், ஒரு மோட்டார் பம்புசெட் உள்ளது. அதன்கீழ் சிறு கற் குவியல் mamuni5உள்ளது. அந்தப் பகுதியில் இன்றும் நாகம் ஒன்று ஊர்ந்துவந்து படமெடுத்துச் செல்வதாக அவ்வாறு கண்ட ஒருவர் தகவல் தெரிவித்தார். சுவாமி மணவாள மாமுனிகள் ஆதிசேஷன் அவதாரம் என்பது ஸ்ரீவைணவர்களின் நம்பிக்கை. தற்போது, தமிழக அரசின் சார்பில் யாத்ரி நிவாஸ் கட்டப்படும் இடம், இந்த இடத்தை அடுத்து உள்ள ரயில்வே லைன் பகுதியை அடுத்துள்ள இடம்தான். யாத்ரி நிவாஸுக்காக பள்ளம் தோண்டியபோது, அங்கே சிறு சிறு விக்ரகங்கள், கருங்கல் தூண்கள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பகுதியில் அவ்வாறு முன்னர் நன்றாக செழித்திருந்த சதுர்வேதி மங்கலம், கேசவப் பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றின் அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் ஒரு நண்பர் கூறினார். மணவாள மாமுனிகள் பள்ளிப் படுத்தப் பட்ட இடம் என பழைமையான குறிப்புகளில் குறிக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில் இருந்து மண் எடுத்துவந்து,  அதில் இருந்து சுமார் 20 அடி தொலைவில் இந்த மிருத்திகா பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. பிப்.26ம் நாள் மணவாள மாமுனிகளின் அத்யயன உற்சவத்தின் போது இந்த இடம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் பெருமுயற்சியில் இந்த இடம் வாங்கப்பட்டு இப்போது திருப்பணிகளைத் துவக்கியுள்ளார்கள். mamuni3அந்த வகையில் இது ஒரு மிருத்திகா பிருந்தாவனமாகவே திகழ்கிறது. ஆக, இப்போது இருக்கின்ற இந்த சந்நிதிக்கு  20 அடி தொலைவுக்குள் உள்ள இடம்தான் மணவாள மாமுனிகள் பள்ளிப் படுத்தப் பட்ட திருவரசு என்பதை இங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள். அங்கிருந்து மண் எடுத்து வந்து இந்த மூலஸ்தானத்தில் உள்ள சிலையை வடிவமைத்து, மிருத்திகா பிருந்தாவனமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதுவே மணவாள மாமுனிகளின் திருவரசு என்று கூறமுடியாது என்றாலும், திருவரசு இருந்த இடத்தின் விஸ்தீர்ணமான நிலப் பகுதிக்குள் இது அமைந்துள்ளதால், அதற்குண்டான அனைத்து சிறப்பும், பெருமையும் இந்த சந்நிதிக்கும் உண்டு என்றார் அந்த நண்பர். மணவாள மாமுனிகளின் இந்தத் திருவரசு  அமைந்திருக்கும் இடத்தில் இருந்து நேர் எதிரே சற்று தொலைவில்தான் கொள்ளிடக் கரையில் தவராசன் படித்துறை உள்ளது. இங்கே சுவாமி ராமானுஜர் கொள்ளிடத்தில் ஸ்னானம் செய்து பூஜை புனஸ்காரங்களைச் செய்துள்ளாராம். அருகில் இதே பகுதியில் ஆளவந்தார் படித்துறை உள்ளது. mamuni2இப்போது மணவாள மாமுனிகளின் திருவரசு புனர்நிர்மானம் துவங்கியுள்ளது. திருவரங்கப் பெருங்கோயிலின் நிர்வாகத்தை சுவாமி ராமானுஜர் பெருமளவில் முயற்சி செய்து சீர் படுத்தினார். அவருடைய காலத்துக்குப் பின்னர் சீர்கெடத் தொடங்கிய கோயில் நிர்வாகத்தை, வழக்கத்தை மீண்டும் சீர்தூக்கி செப்பனிட்ட பெருமை சுவாமி மணவாளமாமுனிகளுக்கு உண்டு. தமிழ் வேதமாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மேன்மேலும் செழித்துக் கிளை பரப்பி பூத்துக் குலுங்கிடச் செய்த மகான் ஸ்ரீமணவாளமாமுனிகள். இன்றும் தென்னாச்சார்ய சம்பிரதாயஸ்தர்கள் தங்கள் வீடுகளிலும் சந்நிதிகளிலும் சொல்லி வரும் சாற்றுமுறையின் இறுதியில், மணவாளமாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று மங்கலஸ்துதி சொல்லி வருகிறார்கள்.  இன்னும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக இது  தழைக்க வேண்டுமாயின் இந்தத் திருவரசு மீண்டெழ கைங்கர்யம் செய்வோராகுவோம்.

ALSO READ:  திருப்தி - சந்தோஷம் - வாழ்க்கை!
author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week