ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஆறாம் திருநாள்

பகல் பத்து – ஆறாம் திருநாள் விவரமும்..(16-12-15)
அத்யயன உற்சவத்தின் சிறப்புக்களும்…

நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து
உற்சவத்தின் 6 ம் திருநாளில் (16-12-15) காலை
சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி, மேலைப்படி மரியாதை ஆகி, சேனைமுதலியாருக்கும், மரியாதைகள் நடந்து, கிளிமண்டபம் படியேற்றம் ஆகி,துலுக்க நாச்சியாருக்கு
சேவை சாதித்து, தாம்பூலம் பெற்றுக்கொண்டு,அரையர்களின் தாளத்துடன் பகல்பத்து மண்டபத்தில் (அர்ஜுன மண்டபத்தில்) ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,அரங்கனின் அடியார்கள் புடைசூழ,வீற்றிருப்பார்.

இன்று அரங்கன் திருமுன்பு,அரையர் ஸ்வாமிகளால் பாசுரங்களாகவும்,அபிநயங்களாகவும்,இசையுடன் வியாக்கியானங்களாகவும் சேவிக்கப்படும் பாடல்கள்
மதுரகவியாழ்வார் அருளிய “கண்ணிநுண் சிறுத்தாம்பு” 11 பாசுரங்களும்,இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த, “பெரிய திருமொழி”யில் 249 பாசுரங்களும்,ஆக மொத்தம் 260 பாசுரங்கள் சேவிக்கப்படும்.

பெரிய திருமொழியில் 3 ம் திருமொழி,6ம் பதிகம்,
“தூவிய மலர் உழக்கி” ஈறாக,”பெரிய திருமொழி” யின் 249 பாசுரங்களும்,இன்றுசேவிக்கப்படும்.

“கண்ணிநுண் சிறுத்தாம்பு” “வாடினேன் வாடி”
(பெரிய திருமொழி 1-1-1) இரண்டுக்கும்,அபிநய வியாக்கியானங்கள்,அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும்.

“கண்ணிநுண் சிறுத்தாம்பில்” ஈடுபட்ட, ஸ்ரீமணவாளமாமுனிகள், சந்நிதியில் இருந்து, இன்று அரையர் ஸ்வாமிகளுக்கு பஹுமாணம் அனுப்பி வைக்கப்படும்.”வாடினேன்வாடி” பாசுரத்தின் அபிநயத்தின் பொழுது, கோஷ்டி நின்று கொண்டு இருக்கும்..

அத்யயன உற்சவத்தின் சிறப்புக்கள்….

ஸ்ரீ மணவாள மாமுனிகள்,ஸ்ரீரங்க நாதருக்கு வியாக்கியானங்கள்(விரிவுரைகள்) அருளிச் செய்தது முதல்,அரையர் சேவையிலும்,வியாக்கியானங்கள் சேவிக்கப்படுகின்றன…

ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு முற்பட்ட காலத்தில்,
“தம்பிரான் படி வியாக்கியானமும்”ஆச்சாரியர்கள் நியமித்து அருளிய,பாசுரங்களுக்கு மட்டும் அபிநயங்களும் நடைபெற்று வந்தன..

அரையர் வம்சத்திற்கு “தம்பிரான்மார்” என்ற பெயர் உண்டு.
அவர்கள் அருளிச்செய்த விரிவுரைகளே,பல ஆண்டுகளாக அரங்கன் ஆலயத்தில் சேவிக்கப்பட்டு வந்தபோதிலும்,
“திருவாய்மொழிக்கு” ஸ்வாமி “நம்பிள்ளை”ஈடு வியாக்கியானம்,
மற்றைய திவ்ய பிரபந்தங்களுக்கு ஸ்வாமி
“பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த வியாக்கியானங்கள்,
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியானங்கள் கிடைக்காத சில
“பெரியாழ்வார் திருமொழி” பாசுரங்களுக்கு, ஸ்வாமி
” ஸ்ரீ மணவாள மாமுனிகள்” அருளிய வியாக்கியானங்கள்,ஆக இந்த மூன்று வியாக்கியானங்களே,”ஸ்ரீ கோசத்தை”பார்க்காமல்,(புத்தகம் பார்த்து படிக்காமல்),வரி தவறாமல் ,இன்றும் அரையர்களால் சேவிக்கப்பட்டு வருகிறது…

இந்த நிகழ்ச்சி “ஸ்ரீ மணவாள மாமுனிகள்” நம்பெருமாளுக்கு, அவற்றைக் காலக்ஷேபம் சாதித்த நிகழ்வை, நினைவூட்டுவதாகும்…

இந்த மூன்று வியாக்கியானங்களுடன்,அரையர்களின் முன்னோர்களால் சாதிக்கப்பட்ட, “தம்பிரான்மார்” வியாக்கியானங்களும் சேர்த்து,சேவிக்கப்படுகிறது.
வேறு எந்த வியாக்கியானங்களுக்கும் அரங்கன் ஆலயத்தில் சேவிக்க அனுமதி இல்லை….

பகல் பத்து இராப்பத்து திருநாட்களில்,அரையர் சேவையில் அபிநயம் பூர்த்தியானதும்,வியாக்கியானத்துக்கு முன்பாக, நம்பெருமாளின் நியமனம்(அனுமதி)பெற்று,ஆழ்வார்களிடம் வந்து,ஆழ்வார் கொண்டாட்டம் சேவித்து, அனுமதியுடன்
நம்மாழ்வார் மற்றும் எம்பெருமானாரின் மாலைகள் ,
படிகளைந்து இரண்டு அரையர்களுக்கும் சாதிக்கபடுகிறது…

அரையர் சேவை முடிந்ததும்,கோஷ்டியில் இருக்கும் அத்யாபகர்கள்,நம்பெருமாளைச் சென்று சேவிப்பார்கள்.அர்ச்சகர் அவர்களுக்கு ஸ்ரீசடகோபம் (சடாரி) சாதிப்பார்.பிறகு அலங்காரம் எனப்படுகின்ற திருப்பணியாரங்களும், தோசைப் பிரசாதங்களும் நம்பெருமாளுக்கு நிவேதனம் செய்ய, திரை சமர்ப்பிக்கப்படும்…

நம்பெருமாள் பிரசாதங்களை அமுது செய்த பிறகு,ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு, அமுது(நிவேதனம்) செய்யப்படும். அருளப்பாடு கிரமத்திலேயே,நிவேதனம் நடைபெறும். ஆனால், உடையவர்,பிள்ளை லோகாச்சாரியார்,கூரத்தாழ்வான் இவர்களுக்கு மட்டும்,”திருக்கச்சி நம்பிகள்” நிவேதனம் செய்த பிறகு செய்யப்படும்.நம்மாழ்வார் அமுது செய்த பிரசாதம், அரையர்களுக்கு உரியதாகையாலே,அந்த பிரசாதங்கள் அரையர்களின் திருமாளிகைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நிவேதன விநியோகங்களும் நடைபெறும்.
அர்ஜுன மண்டபத்தில்(பகல்பத்து) ஆழ்வார்கள் மற்றும்
ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.அதன் பிறகு,
ஆழ்வார் ஆச்சாரியர்கள், ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,
தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.

நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி,
ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள “மீனாட்சி மண்டபத்தில்”
தீர்த்த கோஷ்டி நடைபெறும்.சிறிது நேரம் நம்பெருமாள்,
“பத்தி உலாத்துதல்” ஆகி, மேலப்படியில் படியேற்றம் ஆகி, திருவந்திக்காப்பு (ஒருவித ஆரத்தி) கண்டருளுவார்.
பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள் (காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்.

கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு