December 5, 2025, 6:58 PM
26.7 C
Chennai

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 15)

srivaratharajar kanchi - 2025
திருத்தேர் சாத்துபடியுடன் ஸ்ரீ பேரருளாளன். பிரம்மோற்சவம் 7ம் நாள் அதிகாலை

வரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 1 )

அத்திகிரி அமலன் அயன் முகம் நோக்கிப் பேசத் தொடங்கினான் !! பிள்ளாய் பிரமனே , பற்பல சிரமங்களை அனுபவித்தும் மனம் தளராமல் வேள்வியை நன்கு நடத்தி முடித்தாய் ! உன் தளராத உள்ளமும் உறுதியும் கண்டு பூரிப்படைந்தேன் நான் ! என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள் ! தருவதற்கு நான் தயாராய் இருக்கிறேன் என்றான் !!

” வரம் வரய தஸ்மாத் த்வம் யதாபிமதமாத்மந :

ஸர்வம் ஸம்பத்ஸ்யதே பும்ஸாம் மயி த்ருஷ்டிபதம் கதே ”

மனிதர்கள் கண்ணால் காணக் கூடிய நிலைமையை தற்பொழுது நான் அடைந்துள்ளேன் ! (அவர்களுக்கும் ) எல்லாம் கை கூடப் போகிறது .. உனக்கு வேண்டியதைக் கேள் ! என்றான் இறைவன் ..

கண்ணெதிரே கரிகிரிக் கண்ணனைக் கண்ட கமலத்தயன், பணிவான குரலில் பரமனைப் பார்த்துப் பேசினான் ! ஐய ! வரமே என்ன வரம் வேண்டும் என்று கேட்பது விந்தையாகத் தான் உள்ளது !

எதையும் நான் என் முயற்சியால் ஸாதித்திருப்பதாக நினைக்கவில்லை .. நின்னருளல்லதெனக்குக் கதியில்லை ! அதுவே உண்மை !

பெருமானே ! அநந்த, கருட , விஷ்வக்ஸேநர் போன்ற மஹாத்மாக்கள் காணத் தக்க உன் வடிவை , நான் காணப் பெற்றேனே ! இதை விட வேறு பலன் ; வேறு வரம் ஏதேனும் உண்டோ ?!

என் பதவி நிலையற்றது. உன்னுடைய ஸ்ருஷ்டியில் எத்தனை எத்தனை ப்ரஹ்மாண்டங்கள் உள்ளனவோ ; அங்கங்கெல்லாம் எத்தனையெத்தனை பிரம்மாக்கள் உள்ளனரோ ?; யாரறிவார் ?

ஏதோ ஒரு ப்ரஹ்மாண்டத்தில், ஒரு ஸத்ய லோகத்தில் உனதருளால் தற்சமயம் நான் பிரமன் ! .. கங்கையின் மணலைப் போலே ; இந்திரன் பொழியும் மழையின் தாரைகள் போலே , எத்தனையெத்தனை பிரம்மாக்கள் இந்தப் பிரம பதவியில் இருந்துள்ளனர் என்பது எண்ணக் கூடியதன்று !!

என்னமுதினைக் கண்ட கண்கள் ; மற்றொன்றினை விரும்பாது !

உன்னிடத்தில் சொல்ல விரும்புவது ஒன்று தான் !! நீர் என்றென்றும் இங்கேயே, இக்கச்சியிலேயே எழுந்தருளியிருக்க வேண்டும் !!

” வைகுண்டே து யதா லோகே யதைவ க்ஷீரஸாகரே | ததா ஸத்யவ்ரத க்ஷேத்ரே நிவாஸஸ்தே பவேதிஹ ||

ஹஸ்திசைலஸ்ய சிகரே ஸர்வ லோக நமஸ்க்ருதே | புண்யகோடி விமானேஸ்மிந் பச்யந்து த்வாம் நராஸ் ஸதா || ”

உனக்குப் பிடித்தமான வைகுந்தத்தைப் போலே; திருப்பாற்கடல் போலே ; இங்கும் , இந்த ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தில் , அனைவரும் வணங்கும் இத் திருவத்தி மாமலையில் , புண்யகோடி விமானத்தில் , உம்மை மனிதர்கள் எப்போதும் வணங்கட்டும் !

“அம்மா ! அடியேன் வேண்டுவதீதே ” என்று விண்ணப்பித்தான் பிரமன் !

எம்பெருமானும் ; பிரமனே ஸத்யமாகச் சொல்கிறேன் , அனைவருக்கும் காட்சி அளித்துக் கொண்டு , எப்பொழுதைக்குமாக இங்கேயே இருக்கப் போகிறேன் !

ஸந்தோஷம் தானே !

இந்த ஆதி யுகத்தில் , நீ கண்டிட வந்து தோன்றிய நான் ; இனிவரும் யுகங்களிலும் செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளன !

அவற்றைச் சொல்கிறேன் கேள் ! என்று தொடங்கினான்..

அவைகளை நாமுமறிய அடுத்த பகுதிக்குக் காத்திருப்போம் !

***

வரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 2 )

திருவத்தி மாமலையில் என்றென்றும் நின்று ” பின்னானார் வணங்கும் சோதியாய்” பேரருளாளன் திகழ்ந்திட வேண்டும் என்று பிரமன் இறைஞ்சிடவும் , அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்தருளினான் பகவான் !

பிரமனுக்குக் காஞ்சியிலேயே தங்கிவிட ஆசை ! இந்த ஆரமுதைப் பருகிக் களித்தவன் ; மீண்டும் ஸத்யலோகம் செல்ல மனமில்லாதவனாய் , “வேழமலை வேந்தனிடம் ” நித்தியமும் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இங்கேயே ( காஞ்சியிலேயே ) தங்கிவிடும் தன்னுடைய ஆசையை வெளியிட்டான் !

” நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம் ” ( ந்யாஸ தசகம் ) என்றபடி , காஞ்சியில் தேவப்பெருமாள் திருவடியிணைகளில் கைங்கர்யத்தை வேண்டினான்..

பகவானின் எண்ணமோ வேறு விதமாக இருந்தது.

நான்முகனே ! உன் பக்திக்கு மெச்சினோம். ஆனால் நீ என் கட்டளையின் படி பிரம பதவியில் அமர்ந்து , பணிகளைச் செய்து வருகின்றாய் ! நீ அங்கில்லாமல், ஸத்யலோகத்தில் உள்ளோர் , உன்னைக் காணும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நீ அங்கே செல்வதே என் விருப்பம் ! உன்னுடைய தூய்மையான மனதில் என்றென்றும் நானுள்ளேன் ! அஞ்ச வேண்டாம் . விரைந்து உன்னுலகம் செல் !

வேள்வியில் நீ நடந்து கொண்ட விதமும் , உன் அன்பும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன ! வேள்வியில் ஹவிர்பாகங்களை தேவர்கள் மூலமாக அல்லாது நேரடியாக எனக்கே தந்தாய் !

தேவர்கள் அதனால் வருத்தமுற்று உன்னை வினவின போது ; நீ சொன்ன பதில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று !

பொதுவாக யாகங்களில் பற்பல தேவர்களுக்கு அவி உணவு ( ஹவிர்பாகம் ) வழங்கப்படும் ! அவ்வகை யாகங்கள் பெரும்பாலும் அற்ப சுகங்களை விரும்பியே செய்யப்படும். இந்த யாகமோ , எப்பயனையும் விரும்பிடாது ; பயனளிப்பவனையே வேண்டிச் செய்யப்படுவதொன்று .. ஆதலால் பரமாத்மாவிற்கே ஹவிஸ்ஸு நேரடியாக ஸமர்ப்பிக்கப்படும் என்று சொல்லி , அவ்விதமே நீ நடந்து கொண்டாய் !

உன்னுடைய இந்தத் தெளிவிற்கு எமது பாராட்டுகள் என்று வரதன் அருளினான் !

இனிவரும் காலங்களில் தனக்குக் காஞ்சியில் செய்ய வேண்டிய சில செயல்கள் உள்ளதாக , பேரருளாளன் சொல்லியிருந்தானே ! அது என்ன என்று அறியும் ஆவலில் , நான்முகன் அரியை வினவினான் !

சொல்கிறேன் கேள் என்று ஆரம்பித்தான் இறைவன்..

முதல் யுகமான இந்த க்ருத யுகத்தில் நீ என்னைப் பூசித்தது போல், அடுத்ததான திரேதாயுகத்தில் கஜேந்த்ரன் என்னைப் பூசிக்க உள்ளான் !

த்வாபர யுகத்தில் , முன்பு உன்னால் சபிக்கப்பட்ட ப்ருஹஸ்பதி , இன்னமும் சில சாபங்களின் காரணத்தால் , என்னைத் தொழுதிட இங்கு வருவார் ..

( ப்ருஹஸ்பதியும் பிரமனும் பரஸ்பரம் சபித்துக் கொண்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும் ! )

கலியுகத்தில் ஆதிசேஷன் என்னை அர்ச்சிப்பான்..

நான் என்றென்றைக்குமாக இந்த அத்திகிரியில் நின்று கொண்டு வரந்தரு மாமணி வண்ணனாய் , ஸநாதந தர்மத்தை வாழ்வித்துக் கொண்டு , ஸஜ்ஜநங்களைக் ( நல்லவர்களை ) காத்துக் கொண்டு , ப்ருகு புத்ரியாய்த் தோன்றிடும் பெருந்தேவியுடன் கூடி, ” பெருந்தேவி மணாளனாய் ” , கலியுக வரதனாய், கண் கொடுப்பவனாய் , அடியவர்களுக்கு ஸுலபனாய் நின்று ரக்ஷித்துக் கொண்டிருப்பேன் !

எனவே அன்றோ மாமுனிகளும் , “அத்யாபி ஸர்வபூதனாம் அபீஷ்ட பல தாயினே | ப்ரணதார்த்தி ஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம்” || என்றருளினார் !

( இப்பொழுதும் , அனைவருடைய கண்களுக்கும் இலக்காகிக்கொண்டு , வேண்டிய வரங்களைத் தந்து கொண்டு , அடியவர் துன்பங்களைப் போக்கிக் கொண்டிருப்பவனான தலைவனுக்கு என் மங்களங்கள் உரித்தாகட்டும் )

நீ ( பிரமனே ) சித்திரை – ஹஸ்தத்தில் தோன்றிய எனக்கு , வைகாசி – ச்ரவணத்தன்று அவப்ருதமாகக்( தீர்த்தவாரி ) கொண்டு, விசேஷமாக , மஹோத்ஸவமான ப்ரஹ்மோத்ஸவத்தை நடத்தி வைப்பாய் ! என்றான் !!

பிரமனும் அவ்விதமே செய்வதாக விண்ணப்பித்து ; நல்லவிதமாக உத்ஸவத்தை நடத்தி முடித்து, தன்னுலகம் மீண்டான் !

வரதன் நினைத்துக் கொண்டான் !!

பிரமனுக்குக் கலியுகத்தில் ஆதிசேஷன் பூசிக்கப் போகிறான் என்கிற அளவிற்குத் தான் சொன்னேன் !!

என் திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதனை நானேயன்றோ அறிவேன் !!

ஸத் ஸம்ப்ரதாயமான ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்க்க நம்மாழ்வாருக்கு ” மயர்வற மதிநலம் ” அருள வேண்டும் ! பூதத்தாழ்வார் என் கருட சேவையைக் கொண்டாடிப் பாடிட நான் கேட்டின்புற வேண்டும் ..

திருமங்கை மன்னன் சோழவரசன் சிறையில் , “வாடினேன் வாடி ” என்று வாடிப்போகாதிருக்க , அவருக்குச் செல்வம் தரவேண்டியுள்ளது !

விந்திய மலைக் காடுகளிலிருந்து என் குழந்தை இராமானுசனைப் பெருந்தேவியுடன் கூடி ரக்ஷிக்க வேண்டியுள்ளது !

ஆளவந்தார் என்னை வணங்கி, பூதபுரீசர் யதிராஜராம் எம் இராமானுசனை “ஆமுதல்வனிவன் ” என்று அனுக்ரஹிக்க வழிவகை செய்ய வேண்டியுள்ளது !

அமுதினுமினிய சாலைக் கிணற்றுத் தீர்த்தத்தை இராமானுசர் தர, நான் ஆசை தீரப் பருக வேண்டியுள்ளது !

திருக்கச்சி நம்பிகளிடம் எத்தனை பேச யோசித்திருக்கிறேன் ! முக்கியமாக இராமானுசருக்காக ஆறு வார்த்தைகள் பேச வேண்டுமே !

திருக்கச்சி நம்பி திரு ஆலவட்டக் காற்றின் இனிமை சுகம் காணக் காத்திருக்கிறேன் நான் !

இராமானுசரை அரையருடன் திருவரங்கத்திற்கு அனுப்ப வேண்டும் ! கூரேசனார் வரதராஜஸ்தவம் பாட நான் கேட்டிட வேண்டும் !

நடாதூரம்மாள் பால் தரப் பருகிட வேண்டும் !

பிள்ளை லோகாசார்யராய் நானே தோன்றிட வேண்டும் ! அஷ்டாதச ரஹஸ்யம் அருளிட வேண்டும் !

ஈட்டினையும் , ஸ்ரீ பாஷ்யத்தினையும் காத்து வளர்த்திட வேண்டும் !

என்னையே உயிராய்க் கொண்டும் , ச்வாஸமாகக் கொண்டும் வாழப்போகும், வேங்கடேச கண்டாவதாரர் வேதாந்த தேசிகனை அநுக்ரஹிக்க வேண்டும் !

முக்யமாக , வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாத பெருமையாக , உபய வேதங்களை ( ஸம்ஸ்க்ருத மற்றும் த்ராவிட ( தமிழ் ) வேதங்கள் ) என்றென்றும் கேட்டு மகிழ்ந்திட வேண்டும் !

“அருளிச்செயல் பித்தன் ” என்று பெயர் வாங்கிட வேண்டும் !

இத்தனை பெருமைகள் உண்டானால் கண் த்ருஷ்டி படுமே எனக்கு ??!!!!

பொங்கும் பரிவுடையவர் ஒருவர் மங்களாசாசன ச்லோகங்கள் பாடினால் நன்றாயிருக்குமே !!

விசதவாக் சிகாமணிகள் , எம்பெருமானாரின் புனரவதார பூதர் மாமுனிகள் பரிந்து மங்களாசாசன ச்லோகங்கள் பாடப் போகின்றார் ! அதனைக் கேட்க வேண்டும் !!

மொத்தத்தில் “ஸம்ப்ரதாயப் பெருமாள்” என்று நான் பெயரெடுக்க வேண்டும் !!

பேரருளாளன் சிந்திக்கலானான் !!

எத்தனையெத்தனை ஆசைகள் எனக்குள்ளே !!

க்ருதயுகத்திலேயே திட்டமிட்டு , கலியுகத்தில் அவன் ( வரதன் ) பெற்ற பெருஞ்செல்வங்கள் இவை !!

இவையனைத்தையும் சிந்தித்தபடிச் சிரித்தான் பேரருளாளன் !

இக்காரணங்கள் அன்று பிரமன் அறியாதது !! இன்று நாம் அறிந்திருப்பது !!!!

என்னே வரதனின் தனிப்பெருங்கருணை !!

வரதன் வந்த கதையே மற்ற கதைக்கெல்லாம் விதை !!

எழுதியும் , வாசித்தும் போந்த நாமே பாக்கியசாலிகள் !!

” நமக்கார் நிகர் நீணிலத்தே ” என்று அனுஸந்தித்து நிற்போம் !!

– முற்றும் –

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories