
திருப்பதி:
ஆதார் இல்லையா? அப்படி எனில், உலகுக்கு ஆதாரமான ஆண்டவன் ஏழுமலையானை இனி தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளது, பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதார் கட்டாய அறிவிப்பு குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாச ராஜூ கூறியது…
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விரைவு தரிசன முன்பதிவு, வாடகை அறை உள்ளிட்டவற்றிற்கு புகைப்பட அடையாள அட்டை எதேனும் ஒன்றை பெற்று வந்தது. இந்நிலையில் வங்கிக் கணக்கு, பான் கார்டுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், திருப்பதியின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரேக் தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் ஆதார் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஆதார் எண் இல்லாவிடில், மூத்த குடிமக்களுக்கான தரிசனம், கூடுதல் லட்டு பிரசாதம், அங்கப் பிரதட்சிண டிக்கெட் இவையெல்லாம் பெற இயலாமல் இருந்தது. வேறு எந்த அடையாள அட்டை காட்டினாலும், திருப்பதி தேவஸ்தானத்தில் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல், ஆதார் ஒன்றிலேயே குறியாக இருந்தார்கள். இப்போது இந்த ஆதார் கட்டாய அறிவிப்பு, பெருமானை தரிசிக்கவும், அறைகளை வாடகைக்கு எடுக்கவும் அவசியமாகப் போகிறது. ஆண்டவன் என்றால் எளியவர்க்கு உரியவன். நடைபாதை பக்தர்கள், இலவச தரிசனத்தில் நிற்பவர்கள் என பலரும் பெருமானை தரிசித்து மகிழ்ந்தார்கள். இனி அவர்களுக்கும் அடையாளம் தேவைப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.



