
திருப்பதி ஏழுமலையான் வெங்கடாசலபதி கோவிலில், வருகின்ற நவம்பர் மாதம் நான்காம் தேதி, தீபாவளி தினத்தை முன்னிட்டு ஆஸ்தானம் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், “வருகின்ற 4ம் தேதி, தீபாவளி திருநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு ஆஸ்தானம் நடக்கிறது. சுப்ரபாதம், கைங்கரியம் உள்ளிட்டவைகளும் நடக்க உள்ளது.
தங்க வாசல் எதிரே உள்ள மணி மண்டபத்தில் சுமார் காலை 7 மணி முதல் 9 மணி வரை தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளது. இந்த தீபாவளி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக மலையப்பசாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் காண்ட மண்டபத்தில் அருள் புரிவார்கள்.
அவர்களுக்கு எதிரே சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் கருடாழ்வார் அமர வைக்கப்படுகிறார். மலையப்பசாமி பக்கத்தில் பக்கத்தில் உள்ள பீடத்தில் சேனாதிபதியான விக்னேஸ்வரர் எழுந்தருள இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மூலவரான ஏழுமலையானுக்கு பிரதான அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்ய உள்ளனர். மேலும், ஆரத்தி காண்பித்து, பிரசாதம் வழங்கி தீபாவளி ஆஸ்தானத்தை நிறைவு செய்ய உள்ளார்கள்.
மாலை 5 மணி அளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடக்க உள்ளது. ஏழுமலையானுக்கு தீபாவளி ஆஸ்தானத்தால், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது” என்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது