திருச்செந்துார் முருகன் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஏழு மணி நேரம்வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த முறையை மாற்றி கொள்ள பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பக்தர்களின் காணிக்கை மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு போதிய வசதிகள், சுகாதார வசதிகள் இக்கோவிலில் இல்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.இரண்டு மாதங்களாக தரிசன முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் தர்ம தரிசன முறை மட்டும் அமலில் உள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய தர்ம தரிசனம், கட்டண தரிசனம் என, இரு வரிசைகளில் பக்தர்கள் செல்ல வேண்டும்.இறுதியாக இரண்டு வரிசைகளும் சேர்ந்து, ஒரே வரிசையாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை ஆகிறது.
அது வரை குழந்தைகள், பெரியவர்கள், முதியோர் என, அனைவரும் வரிசையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது.
முன்பு இதுபோன்ற நிலை இல்லை. தற்போது தான் சுவாமியை தரிசிக்க இவ்வளவு நேரம் ஆகிறது என, பக்தர்களிடம் குற்றச்சாட்டு உள்ளது.
இயற்கை உபாதைகளுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்து வெளியில் செல்வதற்கு பாதைகள் இல்லை. இதனால், பலர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
புதிய தரிசன முறையால் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பல புகார்கள் வந்த போதிலும், கோவில் நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஆணையர் பக்தர்களின் குறைகளை போக்கவும், விரைவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





