
ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை
பாடலும் விளக்கமும்
விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்
** மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்(து) உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். (23)
பொருள்
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் கம்பீரமாகப் படுத்துறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் தீப்பொறி பறக்கிறது. பிடரி மயிரைச் சிலிர்த்து, உடலை வளைத்து முறுக்கிப் பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே, நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். உயர்வான இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்பதை அறிந்து, அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
அருஞ்சொற்பொருள்
மாரி – மழைக்காலம்
மலை முழைஞ்சு – மலைக்குகை
மன்னி – கம்பீரமாக
அறிவுற்று – விழித்தெழுந்து
வேரி – பரிமள வாசனை
வேரி மயிர் பொங்க – வாசனையுள்ள பிடரி மயிர் சிலிர்த்து
எப்பாடும் – எல்லாத் திசைகளிலும்
பேர்ந்து உதறி – அசைத்து உதறி (அனைத்து அவயவங்களையும் தனித்தனியே உதறி), உடல் சிலிர்த்து
மூரி நிமிர்ந்து – உடல் ஒன்றாக நிமிர்ந்தபடி
பூவைப்பூ வண்ணா – காயாம்பூவை (நீலோத்பல மலர்) ஒத்த நீல நிறத்தவனே
கோப்புடைய – அழகிய வேலைப்பாடுகள் உடைய
ஆராய்ந்து – விசாரித்து அறிந்து
மலையானது மேகங்களைத் தடுத்து மழைப்பொழிவுக்குக் காரணமாய் அமைகிறது. எனவே அது மாரி மலை.
இன்னொரு வகையில் பார்த்தால், மாரி என்பது குகைக்கான அடைமொழியாகவும் இருக்கிறது. சிங்கம், மாரிக்காலத்தில் இரைதேடச் செல்லாமல் குகையிலேயே கிடக்கும். எனவே, மாரிக்காலத்தில் சிங்கம் உறங்கும் குகையைக் குறிப்பதற்காக ‘மாரி’ மலை முழைஞ்சு என்று சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்.
மன்னு என்ற சொல் ஆழ்வார் பாசுரங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லுக்கு அகராதிகளில் கோபம், துக்கம், இடர்ப்பாடு முதலான பொருள்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், பாசுரங்களில் இது கம்பீரமான, மேன்மை பொருந்திய, புகழ்பெற்ற முதலான அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாசுரத்தில் மன்னிக் கிடந்துறங்கும் என்பதற்கு, ‘பெண் சிங்கத்துடன் இணைந்து கம்பீரமாக உறங்கிக்கொண்டிருக்கும்’ என்று உரையாசிரியர்கள் பொருள் சொல்கிறார்கள். காரணம், ‘உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த கண்ணன் கம்பீரமாகத் தனது நடையழகைக் காட்டி நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து கோபிகைகளுக்கு வரம் தர வேண்டும்’ என்பதைக் குறிப்பதற்காக, ஆண்டாள் இங்கு சிங்கத்தை உவமையாகக் காட்டி இருக்கிறாள். கண்ணன் நப்பின்னையுடன் உறங்கிக் கிடந்ததைக் கடந்த பாசுரங்களில் அவள் வர்ணித்திருப்பதால், இந்த இடத்தில் மன்னி என்பதை, ‘பேடையுடன் கூடிய’ என்று கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பது அவர்கள் தரும் விளக்கம்.

மொழி அழகு
திருப்பாவையில் காணப்படும் முரண்தொடைகள் ஆழ்ந்து அனுபவிக்கத் தக்கவை. அவற்றில் பூவைப்பூ வண்ணா என்பதும் ஒன்று. கண்ணனின் கண்ணழகையும், மேனியழகையும், நடையழகையும் வர்ணிக்கும்போது சிங்கத்தை உதாரணம் காட்டும் ஆண்டாள், அவனது மேனி நிறத்தைக் குறிப்பதற்குப் பூவைப்பூ வண்ணா என்கிறாள். மென்மையையும் வன்மையையும் ஒருங்கே கையாளும் அவளது மொழி அழகு படிப்போரை மலைக்க வைக்கிறது.
***
கவிஞர்களில் நான்கு வகை சொல்வதுண்டு. அவற்றில் சித்திர கவி என்பதும் ஒன்று. வர்ணிக்கப்படும் காட்சியை அப்படியே மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட கவிதைகளை எழுதுவோர் சித்திர கவி எனப்படுவார்கள். ஆழிமழைக் கண்ணா பாசுரமும், மாரி மலை முழைஞ்சில் பாசுரமும் ஆண்டாளின் சித்திர கவித் திறனுக்கு அத்தாட்சி.
***
சொற்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவற்றை ஒவ்வொருவரும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் பயன்படுத்துகிறோம். ஆண்டாள் பயன்படுத்தியுள்ள விதத்தை வெறும் தனித்தன்மை என்று சொல்வது முழுமையான விளக்கமாக இராது. காரணம், அவளாம் அவளே மட்டும் தமிழை இவ்விதத்தில் பயன்படுத்த முடியும் என்னுமளவு மிக மிக நேர்த்தியாகச் சொற்களை இணைக்கிறாள். பையத் துயின்ற பரமன், வள்ளல் பெரும் பசுக்கள், சார்ங்கம் உதைத்த சரமழை, புகுதருவான் நின்றன, பூவைப்பூ வண்ணா – இதுபோல வேறு வேறு சொற்களை இணைத்து அவள் உருவாக்கும் சொற்கோவைகள் படிக்கப் படிக்கப் பரவசத்தைத் தருகின்றன
பொதுவாகவே ஆழ்வார் பாசுரங்களில் – குறிப்பாக, ஆண்டாள் பாசுரங்களில் – பக்திச்சுவை பெரிதா, மொழிச்சுவை பெரிதா என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. பகவான் அவளது பூமாலைக்கு ஏங்கியது போலவே, தமிழன்னை அவளது பாமாலைக்கு ஏங்கி இருப்பாள் என்பது திண்ணம்.

ஆன்மிகம், தத்துவம்
தலைவனுக்கு உரிய குணநலன்கள் சிங்கத்திடம் முழுமையாக இருக்கின்றன. எனவே, அது விலங்குகளின் அரசனாகத் திகழ்கிறது. இறைவனும் அப்படித்தான். அவன் பரிபூரணன். ஜீவர்களின் தலைவனாகத் திகழ்வதற்கு ஏற்ற அருங்குணங்கள் நிரம்பப் பெற்றவன். அதனால்தான் பரமாத்மாவுக்குச் சிங்கம் உவமையாகக் கூறப்படுகிறது.
சிங்கம் தனது குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் எதிரி விலங்குகளுடன் போரிடுமாம். அதேபோலத்தான் பகவானும் என்பதை நினைவூட்டவே சிங்கத்தை ஆண்டாள் உதாரணம் காட்டுகிறாள் என்றும் கொள்ளலாம். பக்தன் பிரகலாதனுக்காகத் தூணில் உதித்த நரசிம்ம மூர்த்தி, இரணியனை வதம் செய்தார். இரணியனைக் கோபப் பார்வை பார்த்த அதேநேரத்தில் பிரகலாதனை அருட்கண்களால் கடாக்ஷித்தார்.
***
பரமபதத்தில் இருக்கும் தர்மாதிபீடம் என்பதையே ஆண்டாள் கோப்புடைய சீரிய சிங்காதனம் என்று அழைப்பதாக உரையாசிரியர்கள் கூறுவர். இந்தச் சிம்மாசனமானது தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, ஐசுவரியம், ஐசுவரியம் இல்லாமை ஆகிய எட்டுக் கால்களின் மீது அமைந்தது என்பது மேலோர் கூறும் தகவல்.