ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாடலும் விளக்கமும்!
விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்
** சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்(து) உன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். (29)
பொருள்
கண்ணா! அதிகாலையில் உன் தங்கத்தாமரைப் பாதங்களை வணங்கி, வரம் வேண்டி நிற்கிறோம். நாங்கள் கேட்கும் வரம் இதுதான்: பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் எங்கள் ஆயர்குலத்தில் நீ மீண்டும் மீண்டும் அவதரிக்க வேண்டும். எங்களை எப்போதும் ஆட்கொள்ள வேண்டும். எங்களது பணிவிடைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். முழுமுதற் பரம்பொருளே, அழியப்போகும் உலகாயத விஷயங்களை உன்னிடம் நாங்கள் யாசிக்கவில்லை. எங்களுக்கு எத்தனை பிறவிகள் கிடைத்தாலும், அத்தனை பிறவிகளிலும் உன்னுடனான இந்த உறவு நிலையாகத் தொடரவேண்டும். உனக்கு அடிபணிந்து உனக்கே நாங்கள் தொண்டு செய்ய வேண்டும். எங்கள் மனதில் வேறு எந்த ஆசைகளோ, உன்னைத் தவிர்த்த வேறு எண்ணங்களோ ஏற்படவே கூடாது. இது ஒன்றுதான் நாங்கள் உன்னிடம் கேட்கும் வரம்.
அருஞ்சொற்பொருள்
சிற்றஞ்சிறு காலே – அதிகாலைப் பொழுதில்
பொற்றாமரையடி – ஒளி பொருந்திய திருவடி
போற்றும் பொருள் – யாசிக்கும் வரம்
பெற்றம் – பசுக்கூட்டம்
குற்றேவல் – ஊழியம், சேவகம், திருப்பணி
கொள்ளாமல் போகாது – தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்
இற்றைப் பறை – தாற்காலிகமான விஷயங்களை யாசிப்பது
இற்றைப் பறை கொள்வான் அன்று – உலகாயத இச்சைகளை வேண்டி உன்னிடம் நாங்கள் வரவில்லை
எற்றைக்கும் – எல்லாக் காலத்திலும்
உன்தன்னோடு உற்றோமே ஆவோம் – உனக்கு அடியார்களாகவே திகழ வேண்டும்
ஆட்செய்வோம் – அடிமைகளாக இருப்போம்
மற்றை – இதர
காமங்கள் – ஆசைகள்
மாற்று – நீக்கிவிடு
பெற்றம் மேய்த்துண்ணும் குலம் –
பசுக்களை மேய்த்து, அவற்றின் வயிறுகள் நிரம்பிய பின்னரே தாங்கள் உண்ணும் ஆயர்குலம்.
மொழி அழகு
எற்றை என்பது எல்லாக் காலத்திலும் என்று பொருள் தருவது. இற்றை என்பது இன்று என்ற பொருளைத் தருகிறது. ஆண்டாள் இன்று கண்ணனிடம் கொட்டு, சங்கு, கொடி, விளக்கு, விதானம் முதலியவற்றை யாசித்தாளே, அந்த வரத்தைக் குறிக்கிறது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். இற்றை என்பதற்கு ‘தாற்காலிக’, ‘நிலையற்ற’ என்று பொருள் கொள்வதும் சிறப்பே.
இற்றைப் பறை – வேண்டாம்
எற்றைக்கும் குற்றேவல் – அருள்வாய்
மற்றைக் காமங்கள் – நீக்குவாய்
– இதுதான் ஆண்டாள் வேண்டும் வரம்.
ஆழ்ந்து நோக்கினால், இம்மூன்றும் ஒரே பொருளைத் தருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகாயத விருப்பங்களை ஒதுக்குவது (இற்றைப் பறை கொள்வான் அன்று) என்றாலே பேரின்ப வீட்டை விரும்புவது என்பதுதான் பொருள். எற்றைக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம் என்பது பேரின்ப வீட்டுக்கான விளக்கம். இதர ஆசைகளை நீக்கு (மற்றை நம் காமங்கள் மாற்று) என்பது பேரின்பத்தின் மீதான ஆசையையும், அது மட்டுமே நாங்கள் வேண்டும் வரம் என்பதையும் குறிக்கிறது.
ஆன்மிகம், தத்துவம்
மனித வாழ்வின் இறுதிக் குறிக்கோள் மோக்ஷம் (வீடுபேறு). அனைத்துப் பற்றுகளையும் விடுவதே மோக்ஷம். மோக்ஷம் என்றாலே விடுபட்ட நிலை என்றுதான் பொருள். தமிழில் ‘வீடுபேறு’ என்பதும் ‘விடு’ என்பதன் நீட்சியான ‘வீடு’ என்ற சொல்லால் குறிக்கப்படுவதே. இது உலக விஷயங்களில் இருந்து விடுபட்ட நிலையைக் குறிக்கும்.
எனினும், இதற்கான வழி என்ன, உலகப் பொருட்களின் மீதான பற்றுதலைத் துறப்பது எப்படி என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்கள். வைணவத்தைப் பொருத்தவரை, பரமனின் அடிகளைப் பற்றுவதே மோக்ஷ நிலை.
பாண்டவர்கள், ‘போகும் பாதையும் கண்ணனே, போய்ச்சேரும் இலக்கும் கண்ணனே, பாதைக்கான வழிகாட்டியும் கண்ணனே’ என்று அவனை மட்டுமே நினைத்து இருந்தார்களாம்.
”உன் பாதங்களில் நிரந்தர வாசத்தைக் கொடு. உலகப் பற்றுகளில் உள்ள ஆசைகளை நீக்கு” என்று இதையேதான் ஆண்டாளும் யாசிக்கிறாள்.
இதுதான் வாழ்வின் இறுதி இலக்கு. நாட வேண்டியதும் அடைய வேண்டியதும் இது ஒன்றே. நமக்கு இதைப் பற்றிய அறிவு இல்லாமல் இருக்கலாம். தவறேதும் இல்லை. ஸத்ஸங்கம் அல்லது மேலோர் சேர்க்கையை நாம் நாடினால் போதும். அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள்.
நோன்பு என்ற ஒரு ‘வியாஜ’த்தை நம் கண் முன்னே நிறுத்தி, மனித வாழ்வின் இலக்கு என்ன, அதை அடைவதற்கான வழி என்ன என்பதை ஆண்டாள் நாடக வடிவில் நம் முன்னே காட்டுகிறாள்.
இதுவே திருப்பாவை.