
இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டி20 ஆட்டம்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
வெள்ளியன்று ராஞ்சியில் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபது ஓவர் ஆட்டம் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தத்து. பின்னர் ஆடிய இந்திய அணி 17.2 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
பூவா தலையா வென்ற இந்தியா நியூசிலாந்து அணியை மட்டையாடச் சொன்னது. சென்ற போட்டியில் காயமடைந்த சிராஜுக்குப் பதிலாக ஹர்ஷல் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் லக்கி ஃபெர்கூசன், ரசின் ரவீந்திரா, ஆஸ்த்லே ஆகியோருக்குப் பதிலாக நீஷம், மில்னே, சோதி ஆகியோர் விளையாடினர்.
முதல் ஓவரில் புவனேஷ்குமார் பந்துகளை மூன்று முறை ஃபோர் அடித்து கப்தில் 14 ரன் சேர்த்தார். அடுத்த ஓவரில் டீபக் சாஹார் பந்துகளை இரு முறை ஃபோருக்கு அனுப்பினார் மிட்சல். ஆனால் ஸ்பின்னர்களும் (அக்சர் படேல், அஷ்வின்) மிதவேகப் பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலும் நன்றாக பந்துவீசி நியூசிலாந்து அணியின் ரன்ரேட்டைக் குறைத்தனர்.
அவ்வப்போது பந்து வீச்சாளர்கள் விக்கட் எடுக்கவும் தவறவில்லை. இதனால் நியூசிலாந்து அணியால் இருபது ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 153 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியா விளையாட வந்தபோது ரோஹித் ஷர்மா மைதானத்தில் இருக்கிறாரா அல்லது அவரது எண்ணப் பறவை எங்கேயாவது பறந்து விட்டதா என்பதுபோல ஆடிக் கொண்டிருந்தார்.
முதல் ஆறு ஓவரில் இந்திய அணி 45 ரன் எடுத்தது; அதில் ராகுல் 32 ரன்; ரோஹித் 10 ரன் அதில் ஒரு சிக்ஸ். பத்தாவது ஓவர் போட சாண்ட்னர் வந்தார். இவர் ஒரு சுழல் பந்து வீச்சாளர். அவர் நினைத்திருப்பார், ரோஹித் ஷர்மா அதிக ரன் எடுக்கவில்லை; தடவிக் கொண்டிருக்கிறார்; எனவே இவரை நாம் ரன் எடுக்க விடாமல் செய்யலாம் என்று. ஆனால் நடந்தது வேறு. அந்த ஓவரில் ரோஹித் இரண்டு சிகஸ் அடித்தார். ஒரு கேட்ச் கொடுத்தார்; அதை போல்ட் பிடிக்கத் தவறினார்.
ரோஹித் ஷர்மா போன்ற ஒரு மட்டையாளரின் கேட்சைத் தவறவிட்டால் தோற்க வேண்டியதுதான். ராகுல் 65 ரன் (49 பந்துகளில், 2 சிக்ஸ், ஆறு ஃபோர்), ரோஹித் ஷர்மா 55 ரன் (36 பந்துகளில், 5 சிக்ஸ், ஒரு ஃபோர்).
ரோஹித் ஷர்மா அவுட் ஆகும்போது 27 பந்துகளில் 20 ரன் எடுக்க வேண்டியிருந்தது. பந்த் 12 ரன் (இரண்டு சிக்ஸ்), வெங்கடேஷ் ஐயர் 12 ரன் (2 ஃபோர்) அடித்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.
என் கருத்துப்படி ரோஹித் ஷர்மா முதலில் பேட் செய்திருக்க வேண்டும். நம்முடைய பேட்டிங் லைனப்புக்கு எளிதாக ராஞ்சி விக்கட்டில் 220 ரன் எடுத்திருக்கலாம். அவர் அவ்வாறு செய்யாமல் ஏன் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார் என்பது புரியவில்லை.