
- K.V. பாலசுப்பிரமணியன்
இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டி20 போட்டி
இந்திய அணி வெற்றி; தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது
கொல்கொத்தாவில் இன்று நடந்த, இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் எதிர்பார்த்தது போல இந்திய அணி வெற்றி பெற்று, இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இன்று விராட் கோலி, ரிஷப் பந்த், சஹால், புவனேஷ்குமார் ஆகியோர் விளையாடவில்லை.
அவர்களுக்குப் பதிலாக இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், ஆவேஷ்கான் ஆகியோர் விளையாடினர். இஷான் கிஷன் இன்று விக்கட் கீப்பிங் செய்தார். பூவாதலையா வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. ரோஹித் ஷர்மா பெருந்தன்மையாக ருதுராஜ் கெய்க்வாடை தொடக்க வீரராக விளையாடச் சொன்னார். ஆனால் இருவரும் இன்று சரியாக விளையாடவில்லை.
ருதுராஜ் நான்கு ரன்னிலும், ரோஹித் ஷர்மா ஏழு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தவிர மற்றவர்கள் பரவாயில்லை. இஷான் கிஷன் (31 பந்துகளில் 34 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (16 பந்துகளில் 25 ரன்) சூர்யகுமார் யாதவ் (31 பந்துகளில் 65 ரன், 1 ஃபோர், 7 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (19 பந்துகளில் 35 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் ரன் ரேட்டை 9.2 என நிலை நிறுத்தினார்கள்.
கடைசி ஐந்து ஓவர்களில் 86 ரன்களை இந்திய அணி எடுத்தது. இதனால் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார்கள். நிக்கொலஸ் பூரனும் (47 பந்துகளில் 61 ரன்) ரொவ்மன் பொவலும் (14 பந்துகளில் 25 ரன்) ஓரளவு நிலைத்து ஆடினர். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் கடைசி ஓவர்கள் பந்து வீச்சால் இந்திய அணி 20 ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 167 ரன் மட்டுமே கொடுத்து போட்டியில் வெற்றி பெற்றது.
இதனால் இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இது இந்திய அணியின் தொடர்ந்து பெறுகின்ற ஒன்பதாவது வெற்றி. சூர்யகுமார் இன்றைய ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகவும் இத்தொடரின் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
அடுத்து இலங்கை அணி இந்தியா வருகிறது. மூன்று டி20 போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவிருக்கிறது. முதல் டி20 போட்டி வருகின்ற 24ஆம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது.